Published : 01 Nov 2019 12:14 PM
Last Updated : 01 Nov 2019 12:14 PM

நடிப்பு என் நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது! - துருவ் விக்ரம் முதல் பேட்டி

படம்: பூ.க.பிரவீன்

ஜெயந்த்

இருபது வயது விக்ரம் போலத் தோற்றமளிக்கிறார் துருவ் விக்ரம். அப்பாவின் குரலையும் வரமாகப் பெற்று வந்திருக்கும் இவர் ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மறு ஆக்கமான இந்தப் படம் வெளிவரும் முன்பே கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக வலம் வந்துகொண்டிருக்கும் துருவுக்கு ரசிகர்கள் மன்றங்களையும் தொடங்கிவிட்டார்கள். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…

எப்படி வந்திருக்கிறது படம்?

ஒரு படத்தை இரண்டாவது முறை எடுக்கும்போது அதில் எந்த அளவுக்கு ஈடுபாடு, கவனம் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். நான் மட்டுமல்ல; அப்பா மட்டுமல்ல; மொத்த படக்குழுவும் இந்தக் கதையை உணர்ந்து, என்ஜாய் பண்ணி முழு ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறோம். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் திரைக்கதையைத் தாண்டி, எனது அறிமுகப்படம் என்றெல்லாம் பார்க்காமல் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ரீமேக் தரவேண்டும் என்பதில் மட்டும்தான் எங்கள் கவனம் முழுவதும் இருந்திருக்கிறது. முழுப் படமும் தயாராகிவிட்டாலும் எனக்கு இன்னும் படத்தைக் காட்டவில்லை. ‘ரிலீஸ் ஆனதும் ஆடியன்ஸ் உடன் தியேட்டரில் போய் படத்தைப் பார்’ என்று அப்பா கண்டிப்புடன் சொல்லிவிட்டார். அவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.

‘அர்ஜுன் ரெட்டி’யின் கதை ஒரு வகையில் உங்கள் அப்பாவுக்குத் திருப்புமுனை தந்த ‘சேது’ படத்தின் நீட்சியாகவே இருந்தது. இந்தக் கதையை உங்களுக்குத் தேர்வுசெய்ய அதுவும் ஒரு காரணமா?

அதுவும் ஒரு முக்கியக் காரணம். ஆனால், அதைத் தாண்டி, அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தின் யூத்னெஸ், அதன் தேவதாஸ் தன்மை, அதன் முரட்டுத்தனம் என அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்குச் சவால் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதையும் முக்கியக் காரணங்களாகச் சொல்வேன்.

முதல் படத்திலேயே முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி வந்தது குறித்து உங்களுக்கு சங்கடம் ஏதுமில்லையா?

வசனக் காட்சி, சண்டைக் காட்சி போலத்தானே அதுவும். அப்பா படப்பிடிப்பில் கேமரா பக்கத்திலேயே இருக்கிறார், எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்திருந்தால் அந்தக் காட்சியில் நடித்திருக்க முடியுமா? சவால் நிறைந்த நடிப்பை நான் சங்கடமாகப் பார்க்கவில்லை.

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தியில் ‘கபீர் சிங்’ ஆனபோது மிகப்பெரிய வெற்றிபெற்றாலும் பல காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பின. ‘ஆதித்யா வர்மா’விலும் அதே காட்சிகள் உண்டா?

‘அர்ஜுன் ரெட்டி’ ‘கபீர் சிங்’ இரண்டிலிருந்தும் ‘ஆதித்யா வர்மா’ பெரிதாக வேறுபடாது. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் அப்பா தெளிவாக சில முடிவுகளை எடுத்திருந்தார். அந்த வேறுபாடுகளைப் படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கான கதாநாயகியைத் தேர்வு செய்தது யார்?

அம்மா. இந்தியில் வெளியான ‘அக்டோபர்’ படத்தில் பனிதா சந்துவின் நடிப்பைப் பார்த்துவிட்டு, இந்தப் பெண் சரியாக இருப்பாள் என்று காஸ்ட் செய்தது அம்மாதான். சின்ன வயதிலிருந்தே அம்மா, அப்பா, அக்கா மூவருக்குமே நான் செல்லம். நான் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குப் படிப்பில் மார்க் வாங்கவில்லை என்றபோதும், அவர்கள் என்னைக் கடிந்து கொள்ளவில்லை.

எனது படிப்பு விஷயத்தில் அவர்களின் அந்த மௌனமே என்னை ஒருவிதமாகப் பயமுறுத்தியதால் அபவ் அவ்ரெஜ் மதிப்பெண்களை எடுத்துவிட வேண்டும் என்று முயன்று படித்தேன். படிப்பைத் தாண்டி இசையிலும் நடிப்பிலும் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால்தான் உங்கள் முன் ஒரு நடிகனாக நின்று கொண்டிருக்கிறேன்.

எப்போது உங்களுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது?

முதல் வகுப்பு படிக்கும்போதே. நான் சரியாகச் சாப்பிடமாட்டேன் என்று அம்மா இன்றுவரை ஊட்டிவிடுகிறார். ஆனால் யாரும் ஊட்டாமலேயே அப்பாவின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து, என் அனுமதி பெறாமலேயே என் நாடி நரம்புகளில் நடிப்பு புகுந்துவிட்டது.

அப்பா நடித்த படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்ப்போம். அப்போது அப்பாவின் நடிப்புக்கு தியேட்டரில் விசில் பறக்கும். கைத்தட்டலில் காதுகள் அதிரும். அந்த விசில் சத்தமும் கைத்தட்டலும் எனக்குக் கிடைத்ததுபோல் உணர்ந்தேன் என்றாலும், எனது நடிப்புக்கு நானும் இப்படித் தனியாகப் பாராட்டுப்பெற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

‘ஐ’ படத்தின் படப்பிடிப்பில் கூனன் ஆகிவிட்ட லிங்கேசன் கேரக்டரின் சீக்குவென்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார் ஷங்கர் சார். காரவனில் கூனன் கெட்-அப்பில் இருந்த அப்பா ஒரு வசனத்தை எனக்குப் படித்துக் காட்டினார். அது உடனே எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அதை அவர் சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி உச்சரித்தபோது உனக்குள்ளேயும் ‘ஒரு நடிகன் இருக்கான்டா. ஆனா என்னோட பிரதியாக இல்லாம பார்த்துக்கோ’ என்றார். எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்டு சினிமா படிக்க லண்டனுக்கு அனுப்பினார். அங்கே முதலில் பிலிம் மேக்கிங், பிறகு ஆக்டிங் என இரண்டு கோர்ஸ்களைப் படித்துமுடித்தேன். நான் எடுத்த ‘குட்நைட் சார்லி’ என்ற குறும்படமும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதன்பிறகுதான் எனக்குக் கதைகளைத் தேடத் தொடங்கினார்.

அப்பாவின் வழியில் கதாபாத்திரத்துக்காகத் தோற்ற மாறுதல் செய்து நடிப்பதில் விருப்பம் இருக்கிறதா?

நிச்சயமாக. எனக்கு எது சரியாக இருக்கும், எனது பாதை எப்படிச் செல்லவேண்டும் என்பதை ‘ஆதித்யா வர்மா’ வெளியானபிறகு ரசிகர்களும் அப்பாவும் முடிவு செய்யட்டும் என்று காத்திருக்கிறேன். என்றாலும், சினிமா பற்றிய அறிவு ஓரளவுக்கு இருப்பதால் சுயமான முடிவுகளையும் என்னால் எடுக்க முடியும். அதில் அப்பாவுக்கும் கணிசமான பங்கு இருக்கும். இருப்பினும் இவர் துருவின் அப்பா, துருவின் அம்மா, துருவின் அக்கா என்று சொல்லும்விதமாக எனது சொந்தத் திறமையைக் கொண்டு சினிமாவில் முன்னேற ஆசை.

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர்?

எல்லோரையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் நேசிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நமது சினிமாவும் அதைத்தானே சொல்லித் தந்திருக்கிறது. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் முதலில் அப்பா, அதன்பிறகு விஜய் அண்ணா. இயக்குநர்களில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் தொடங்கி பெரிய பட்டியல் போடலாம். இவர்கள் அனைவருடைய படத்திலும் நடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x