Published : 01 Nov 2019 11:46 AM
Last Updated : 01 Nov 2019 11:46 AM
டி.கார்த்திக்
கனவுலகின் மையம் என்று வருணிக்கப்படும் கோடம்பாக்கம் ஒரு காலத்தில் வனப்பகுதி, வயல்வெளியுடன் கூடிய விவசாயக் கிராமம்தான். இன்று கான்கீரிட் காடாகிப்போன கோடம்பாக்கத்தில்தான் சினிமா ஸ்டுடியோக்களும் கோலோச்சின. அக்காலத்தில் தமிழ் சினிமா மிக அரிதாகவே ஸ்டுடியோக்களை விட்டு வெளியே வந்தது. ஆறு, குளங்கள், மலைகள், வயல்வெளிகள், நிலவு, சூரியன் என இயற்கைக் காட்சிகள் கூட அந்தக் காலத்தில் அசலானவை அல்ல.
1970-களில் மாய பிம்பங்கள் விலகி நிஜ பிம்பங்கள் சினிமாவுக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சினிமாவில் செயற்கையாகக் காட்டப்பட்டுவந்த ஆறுகள், குளங்கள், மலைகள், வயல் வெளிகள், வனம், தெருக்கள், வீடுகள், பங்களாக்கள் என அனைத்துமே நிஜமாயின. அப்போது கதை நிகழும் களத்துக்குப் பொருத்தமான இடங்களுக்குப் படக்குழுவினர் பயணப்பட்டார்கள். சென்னைக்கு வெளியே கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி எனப் பல ஊர்கள் வெளிப்புறப் படப்பிடிப்புக்காகவும் புகழ்பெறத் தொடங்கின. இவற்றில் கோபிச்செட்டிப்பாளையமும் பொள்ளாச்சியும் ‘மினி கோலிவுட்’ எனச் சொல்லப்படும் அளவுக்குப் பிரபலமாயின.
இயற்கை அளித்த கொடை
அழகான வயல்வெளிகள், நீண்ட வரப்புகள், திரும்பிய இடமெல்லாம் ஓடும் ஓடைகள், ரம்மியமான ஆறு, பசுமையான புல்வெளிகள், பரவசமூட்டும் மலைகள், அச்சமூட்டும் காடுகள், அணைக்கட்டுகள், எழில்கொஞ்சம் மலைக் கிராமங்கள், அழகிய சமவெளி கிராமங்கள், கோயில் குளங்கள், இருபுறங்களிலும் அடர்ந்த மரங்களைக் கொண்ட குகை போன்ற சாலைகள் என மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த இரண்டு ஊர்களுக்கும் இயற்கை அளித்த கொடை அதிகம். அதனாலேயே பொள்ளாச்சியும் கோபியும் சினிமா நகரங்களாக உருவெடுத்தன.
தமிழ்ப் படங்கள் மட்டுமல்ல; தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா உள்ளிட்ட பிற இந்திய மொழிப் படங்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. 1970-களில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் அதிக எண்ணிக்கையில் நடந்திருந்தாலும் அதற்கும் முன்பே இங்கே படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘மலைக் கள்ளன்’ படம்தான் இங்கே முதன்முதலாகப் படம்பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மலைக்காட்சிகள் இடம்பெற்ற அந்தப் படத்தின் பெரும்பகுதி இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கிறது. 1964-ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இடபெற்ற பல புகழ்பெற்ற காட்சிகள், ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல் ஆகியன இங்குள்ள ஆழியாறு அணைக்கட்டு அருகேதான் படமாக்கப்பட்டிருந்தன. இந்தப் படம் பொள்ளாட்சிக்கு மேலும் விளம்பரத்தைக் கொட்டிக்கொடுக்க,1970-களுக்கு பிறகு பொள்ளாச்சி இல்லாத கிராமியப் படங்கள் அரிதாயின.
கொங்கு இயக்குநர்கள்
ஒரு காலத்தில் பொள்ளாச்சிக்குச் சென்றால் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்துவிட முடியும் என்ற நிலை இருந்தது. படப்பிடிப்புக்குத் தேவையான இடவசதி, பொருட்கள், கிராமப் படங்களுக்குத் தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் என அத்தனை தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்திசெய்து கொடுத்துவிடுவார்கள். சினிமாக்காரர்களைத் தங்கள் சொந்த பந்தங்களை போல, அந்தப் பகுதி மக்கள் பார்க்கும் அளவுக்கு பொள்ளாச்சிக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவு பின்னிப் பினைத்திருந்தது.
“அந்தக் காலத்தில் பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் உணவகங்களோ, தங்கும்விடுதிகளோ கிடையாது. அதனால் படப்பிடிப்பு நடக்கும் ஊரில் உள்ள மிராசுதார்களின் பங்களா வீடுகளில்தான் நடிகர், நடிகைகள் தங்குவார்கள். அவர்களைத் தங்கவைத்து உபசரிக்க வசதி படைத்தவர்கள் தயங்கியதே இல்லை. நடிகர், நடிகையர் தங்கள் வீடுகளில் தங்குவதைக் கவுரவமாக மக்கள் நினைத்தார்கள். அப்போது படப்பிடிப்பு நடத்தக் கட்டணம் எதுவும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம். தங்களுக்குச் சொந்தமான இடங்களில் ஷூட்டிங் நடத்த மக்களே விரும்பி அழைப்பார்கள்” என்கிறார் பொள்ளாட்சியின் சினிமா லொகேஷன் மேனேஜர்களில் ஒருவரான ‘பொள்ளாச்சி’ ராஜ்குமார்.
1980 மற்றும் 90-களில் கொங்கு பகுதி சார்ந்த கதைள் தமிழ்த் திரையில் அதிக எண்ணிக்கையில் எடுத்தாளப்பட்டன. கொங்குப் பகுதியிலிருந்து திரையுலகில் நுழைந்த ஆர். சுந்தர்ராஜன், மணிவண்ணன், கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன், பொள்ளாட்சி சௌந்தர், சுந்தர்.சி உள்ளிட்ட பல இயக்குநர்கள் தங்கள் படங்களை இந்தப் பகுதிகளிலேயே அதிகமாகவே படமாக்கினார்கள்.
கோபியும் ஊட்டியும்
பொள்ளாச்சியைப் போலவே ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படும் இன்னொரு ஊர் கோபிச்செட்டிப்பாளையம். சிவாஜி கணேசன் நடித்து, 1959-ல் ‘பாகப்பிரிவினை’ படம்தான் இங்கே முதன்முதலாக எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம். ஊர்ப் பாசத்தால் ‘பாகப் பிரிவினை’ படக் காட்சிகளை கோபியில் எடுக்க அவர் விரும்பினார்.
பொள்ளாச்சியில் இருக்கும் எல்லா அம்சங்களும் கோபியிலும் இருந்தபோதும் 1980-க்குப் பிறகுதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கோபியில் அதிகரிக்கத் தொடங்கின. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமம்தான் நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜின் சொந்த ஊர். 1980-களில் ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’ என இவருடைய பல படங்கள் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டன.
அக்காலட்டத்தில் வெளியான தமிழ் சினிமாக்களில் பஞ்சாயத்து ஆலமரங்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை கோபியையே சேரும். பன்னாரியம்மன் கோயில், குண்டேரிப்பள்ளம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடிவேரி அணை, வயல்வெளிகள், சத்தியமங்கலம் காட்டுப்பகுதி, கோயில்கள் எனப் படம்பிடிக்க ஏதுவான பகுதிகள் கோபியில் அதிகம் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சினிமா படப்பிடிப்புகளுக்குப் பெயர்பெற்ற மற்றொரு நகரம் ஊட்டி. ‘மலைகளின் அரசி’ என்று வர்ணிக்கப்படும் ஊட்டியில் பசுமை நிறம் போர்த்திய இயற்கை அழகு படவுலகைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஓங்கி உயர்ந்த மரங்கள், அடந்த மலைகள், சலசலத்து ஓடும் நீரோடைகள், பூத்துக்குலுங்கும் அழகழகான பூங்காக்கள், அழகான மலைவீடுகள், ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் என ஊட்டியின் பலவித அனுகூலம் படவுலகை ஊட்டியில் கட்டிப்போட்டது.
தொடக்கத்தில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கும் ஊராக ஊட்டியைப் பயன்படுத்திய போக்கு மறைந்து ‘ஊட்டி வரை உறவு’ என்று தனிப் படம் எடுக்கும் அளவுக்கு ஊட்டியின் அழகு ரசிகர்களின் கண்களைக் குளிர்வித்தது. தரின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் ஊட்டியை இன்னொரு பரிமாணத்தில் காட்டியது. அதன் பிறகே, பலரும் ஊட்டியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ படமும் ஊட்டியின் அழகைத் தனித்து அடையாளப்படுத்தியது.
தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை ஊட்டி என்றாலே தேயிலைத் தோட்டங்களும் மேடான புல்தரைகளும் அங்கு எடுக்கப்படும் பாடல் காட்சிகளும் என்றுதான் இருந்தன. ஆனால், ஊட்டியை உயிர்ப்புடன் காட்டியவர் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராதான். அவருடைய ‘மூன்றாம் பிறை’யும் ‘மூடுபனி’யும் ஊட்டியின் அறியப்படாத அழகை வெளிப்படுத்தின.
செட்டிநாட்டு சினிமா
மாறாத பழமை, கலைநயம் மிக்க செட்டிநாட்டு அரண்மனைகள், சுற்றுக்கட்டு பங்களாக்கள், கம்மாய்களும் கோயில்களும் நிறைந்த பசுமையான கிராமங்கள் போன்றவை காரைக்குடியை நோக்கித் திரையுலகினரை நோக்கி ஈர்த்திருக்கின்றன.
ஆனால், காரைக்குடியின் புறநகர்ப் பகுதியான தேவகோட்டை ரஸ்தா பகுதியில்தான் முதன்முதலில் ஏவி.மெய்யப்பச் செட்டியார் கீற்றுவேய்ந்த சினிமா ஸ்டுடியோவைத் தொடங்கினார். இங்கேதான் தொடக்கால நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கே.சாரங்கபாணி, பின்னாளில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம் இணைந்து நடித்த ‘வேதாள உலகம்’ அரங்கம் அமைத்துப் படமாக்கப்பட்டது.
ஏ.வி.எம். ஸ்டுடியோ சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து காரைக்குடியையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் பதிவுசெய்து ரசிகர்களுக்கு பந்தி வைத்தார் இயக்குநர் விசு. பின்னர் 1998-ல் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தின் காட்சிகள் அந்த ஊருக்கு சினிமா வெளிச்சத்தை அதிகப்படுத்தின.
காரைக்குடியில் உள்ள ‘ஆயிரம் ஜன்னல் வீட்’டில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பழமையைப் போற்றும் இதுபோன்ற வீடுகள் காரைக்குடியிலும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கானாடுகாத்தான், கோட்டையூர் உள்ளிட்ட பல ஊர்கள் படப்பிடிப்புக்குப் புகழ்பெற்று விளங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT