Published : 25 Oct 2019 02:49 PM
Last Updated : 25 Oct 2019 02:49 PM

டிஜிட்டல் மேடை :பணம் படுத்தும் பாடு!

சு.சுபாஷ்

‘ஹாட் ஸ்டார்’ தனது ஒரிஜினல்ஸ் வரிசையின் முதல் திரைப்பட மாக ‘சப்பட் பாட் கே’ என்ற இந்தி திரைப்படத்தைக் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கதையும், நகைச்சுவை கலந்த காட்சிகளுமாய் குடும்பத்துடன் அமர்ந்து ரசிப்பதற்கான அனுபவத்தைத் தர முயல்கிறது ஹாட் ஸ்டாரின் பிரத்யேகத் திரைப்படம்.

பணமதிப்பிழப்பு காலத்து, சராசரி மத்திய வர்க்க குடும்பம் ஒன்றை மையமாக வைத்து கதை தொடங்குகிறது. பக்கத்து வீட்டில் நடப்பது போன்ற இயல்பான காட்சிகளுடன் படிப்படியாகப் பார்வையாளர்களை உள்ளிழுக்கிறது. படித்தும் வேலை கிடைக்காது கேமராவுடன் சுற்றும் உருப்படாத மகன்; பழுதான ஸ்கூட்டரில் புலம்பலுடன் பணிக்குச் செல்லும் மகள்; இருவரையும் ஒழுங்காக வளர்க்கிறேன் பேர்வழியென நீதி, நேர்மை, நியாயம் இத்யாதிகளை வம்படியாகத் திணிக்கும் அப்பா; திசைக்கொருவராகத் திமிறும் மூவரையும் இழுத்துப் பிடித்துக் குடும்பத்தைச் செலுத்தும் அம்மா; இவர்கள் சுறுசுறுப்பாய் இயங்கும் வீட்டில் சதா குறுக்கெழுத்துப் புதிர்களுடன் முடங்கி கிடக்கும் தாத்தா. இந்த ஐவர் அடங்கிய குடும்பத்தின் அன்றாட அல்லாட்டத்துடன் கதை மெல்ல நகர்ந்து வேகம் பிடிக்கிறது.

மகனுக்கு அற நியதிகளைப் புகட்டியடி சதா கரித்துக் கொட்டுவதும், சாலையில் ஆளே இல்லாத போதும் சிக்னலை மீறாததுமான தந்தையின் பாத்திரமே படத்தின் பிரதானமாக வருகிறது. வசதிக்குக் குறைவு என்றபோதும் ஒழுக்கம், கண்ணியம், தூய்மை என கறார் பேர்வழியாகக் குடும்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். எதிர்பாராது அவர் விபத்துக்குள்ளாவதில் குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அந்நேரம் பார்த்து தேசத்தில் பண மதிப்பிழப்பு அமலுக்கு வர கைக்காசை புரட்டவும் வழியின்றித் தடுமாறுகிறார்கள். சேமிப்பை முதலீடு செய்திருந்த நிறுவனம் அவற்றைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாக நிலைமை மேலும் சிக்கலாகிறது.

எதிர்பாராவிதமாகக் கனவிலும் நினைத்திராத பெருந்தொகை அவர்கள் பாதையில் தட்டுப்படுகிறது. அந்த ரூ.5 கோடிப் பணம், அதுநாள் வரை அவர்கள் காத்து வந்த குடும்ப மாண்புகளுக்கு எதிரான திசையில் செலுத்துகிறது. ஒரு நள்ளிரவில் மொத்தப் பணத்தையும் குடும்பத் தலைவர் எரித்துவிடுகிறார். அடுத்து நடக்கும் சுவாரசிய சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம், சோகமான திருப்பம் மற்றும் அதிர்ச்சியான காட்சியுடன் முடிவடைகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தளங்களுக்குப் போட்டியாகத் தாமதமாகவே களமிறங்கினாலும் தரமான படைப்பையே தந்திருக்கிறது ஹாட் ஸ்டார். கலகலவென செல்லும் கதையில் நுணுக்கமான காட்சிகளைப் புகுத்தி, ரசிக்கவும், யோசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

மாற்றத்துக்கு ஆளாகும் தலைமுறை இடைவெளி, குடும்ப மதிப்பீடுகளை மையமாக்கி நகரும் கதையில் விலைபோகும் அறமும் பிரதானமாக வருகின்றன. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் மத்தியிலான பெரும் பள்ளம், வாய்ப்பு கிட்டாதவரை அனைவரும் நல்லவர் முகமூடியுடன் வளையவருவது, அவரவர் மனங்களில் சுருண்டிருக்கும் நிழலுலகம் போன்ற நிதர்சனங்கள் வெளிப்படுவதும், அவை ஒரு சாமானியக் குடும்பத்தை இரையாக்குவதையும் சிக்கலின்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

குடும்பத் தலைவனாக வரும் வினய் பதக் கவனம் ஈர்க்கிறார். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு குடும்பத்தாரை விரட்டுவதிலும், அக்கம் பக்கத்தாரை அசரவைப்பதிலும் கவர்கிறார். வீட்டில் ஒளித்த பணத்தை முன்வைத்து குடும்பத்தினர் நடத்தும் வெட்டாட்டத்தில் குடும்பத் தலைவனாகப் பதிலடி தருவதிலும், அரசியல்வாதிகளை ஏசி வந்தவரின் அரசியல் எதிர்பார்ப்பு குட்டுடைவதும், பிற்பாடு அதற்கே தனது மதிப்பீடுகளைப் பலி கொடுப்பதுமாகப் பல அடுக்குகளில் சுவாரசியம் கூட்டுகிறார். ஆட்டுத்தாடியாய் அவசியமின்றி வந்துபோகும் தாத்தா பாத்திரத்தை வைத்து கதையை முடித்திருப்பது அதிரவைக்கிறது. படத்தின் நிறைவில் பாடம் எடுக்காது, பார்வையாளர்களை யோசிக்க வைத்திருக்கும் உத்தியும் எடுபடுகிறது. குப்பைகளை இறைத்துப் போட்டு கூட்டும் தூய்மை பிரச்சாரம், கதையின் போக்குக்கு ஏற்றவாறு தாத்தா விடுவிக்கும் புதிர்கள் உள்ளிட்ட காட்சிகள் சில நொடிகளே வந்தாலும் திரைக்கதைக்கு வலுசேர்க்கின்றன.

ஆயிஷா ராஸா, சித்தார்த் மேனன், ஷீத்தல் தாகூர் ஆகியோர் உடன் நடிக்க சமீர் ஹேமந்த் ஜோஷி இயக்கி உள்ளார். ஒரே இடத்தில் சுழலும் கதை, திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் எனத் தொய்வுகள் தென்பட்டாலும் ஹாட்ஸ்டார் தனது முதல் முயற்சியில் தேறி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x