Published : 25 Oct 2019 02:40 PM
Last Updated : 25 Oct 2019 02:40 PM

தரமணி - 6: கண்களை நம்பிய கலைஞன்!

ஆர்.சி.ஜெயந்தன்

தெருக்கூத்தைப் போல திரையிலும் பாடல்கள் வழியே கதாபாத்திரங்கள் உரையாடிக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. பின்னர் பாடல்களின் இசைக்காகப் படங்களைக் கொண்டாடிய திரையிசையின் காலம் வந்தது. அதற்கும் பின்னர், பாடலின் இசையோடு அது படமாக்கப்பட்ட விதத்துக்காகப் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த ஒளிப்பதிவின் காலம் வந்தது. அதில், யதார்த்தத்தின் உயிரோட்டம் குறையாமல், நவீனத்தின் சலனங்களை குறைந்த ஒளியில் பதிவுசெய்து காட்டிய தன்னிகரற்ற ஒளி வித்தகர் அசோக்குமார்.

கடந்த 2014-ல் அவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு. தாம் பணியாற்றிய படங்களின் நினைவுகளைத் தன்னை நிழல்போல் பின் தொடர்ந்த தரமணி இன்ஸ்டிடியூட்டின் சகா, ஒளிப்பதிவாளர் பிரபாகர், ஆத்ம நண்பர்கள் மகேந்திரன், இளையராஜாவிடமும் ஆவலுடன் தன்னைத் தேடிவந்து சந்திக்கும் ஒளிப்பதிவு மாணவர்களிடமும் அசைபோட்டுக்கொண்டிருந்தவர், முற்றாக தன் நினைவுகளை இழந்திருந்தார். மருத்துவமனையில் அப்பாவின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்ட அவரது மகன்கள் விஷாலும் ஆகாஷும் அவரது நினைவுகளை எப்படியாவது மீட்டுவிடத் துடித்தார்கள்.

ஓவியம் மீதும் இசை மீதும் தனித்த காதல் கொண்டிருந்தவரின் காதுகளில் இயர்போனைப் பொருத்தினார்கள். அவர் ஒளியெழுதி, இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பாடல்களை அவரது காதில் ஒலிக்கவிட்டார்கள். எந்தப் பாடலுக்கும் அசையாத அவரது முகம், ஒரு பாடலைக் கேட்டபோது பரவசப்பட்டு அசைந்தது. கண்கள் கலங்கி கண்ணீர் பக்கவாட்டில் வழிந்தது. கைகளை மேலே தூக்கி எதையோ கூற முயன்றார் அந்த மாபெரும் கலைஞர். துண்டிக்கப்பட்ட நினைவுகளால் துவண்டு கிடந்த அசோக்குமாரை அசைய வைத்த அந்தப் பாடல், அவர் ஒளிப்பதிவு செய்த ‘பருவமே… புதிய பாடல் பாடு’.



என்னைவிடச் சிறந்தவர்

1980-ம் ஆண்டு டிசம்பரில், மார்கழிக் குளிருக்கு நடுவே வெளியாகியிருந்தது ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’. அதில் இடம்பெற்றிருந்த ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடல் காட்சியைக் கண்டு ரசிகர்கள் சிலிர்த்துப்போனார்கள். திரையரங்குக்கு வெளியே கொட்டிக்கொண்டிருந்த பனி, திரைக் காட்சியில் இசையின் இன்னொரு படலமாகப் படர்ந்திருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

விலகாத அதிகாலைப் பனியின் வெண் போர்வைக்கு நடுவே, ஜன்னலின் திண்டில் தூங்கி விழித்துச் சோம்பல் முறிக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பூனையைப்போல, மெல்ல எட்டிப்பார்க்கும் கிழக்கின் வெளிச்சம் ஊடுருவும் காட்சித் துணுக்குகளின் சீரான தொடர்ச்சி. சுஹாசினியும் மோகனும் ஜாகிங் செல்லும் அத்தொடர் காட்சித் துணுக்குகளில் ஆழ்ந்த ரசிகர்கள், மெல்லக் கண் விழித்துக்கொண்டிருக்கும் அதிகாலையின் விரலைப் பற்றிக்கொண்ட குழந்தைகள்போல் ஆனார்கள். இசையும் காட்சியும் இத்தனை இயைந்து செல்லமுடியுமா என்று வியப்பூட்டிய அந்தப் பாடல் காட்சிக்காகவே திரும்பத் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அதிகம்.

அந்தக் காட்சி படமாக்கப்பட்ட தருணத்தை, அசோக்குமார் மறைந்தபோது எடுத்த பேட்டியில் என்னிடம் நினைவுகூர்ந்திருக்கிறார் இயக்குநர் மகேந்திரன். “அவரை ‘அசோக் பையா’ என்றுதான் அழைப்பேன். நானும் அவரும் ஒத்த வயதுடையவர்கள். நான் கதாசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த நாட்களில் அவர் மலையாளத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த ஒளிப்பதிவாளர். புனே திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு, சில படங்களின் மூலமே மலையாளத்தில் தனது திறமையை நிரூபித்திருந்தார் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரபாபு.

அவர்தான் எனது முதல் படத்துக்கு வேண்டும் என்ற உறுதியுடன் ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தேன். அப்போது ராமச்சந்திரபாபு சொன்னார், ‘என்னைவிடச் சிறந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் இங்கே இருக்கிறார், அவர் உங்கள் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இசைந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்’ என்றார். அசோக்குமாரின் ஒளிப்பதிவை அவதானித்து வந்தவன் என்ற முறையில் அவரது ஆலோசனையை ஏற்றேன். ஆனால் நண்பர் கமல், பாலுமகேந்திராவைப் பரிந்துரை செய்தார்.

‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கும் பாலுமகேந்திராவுடன் பயணத்தைத் தொடருவோம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவர் வேறொரு படத்தை ஒப்புக்கொண்டிருந்தார். காலமும் நேரமும் நமக்காகக் காத்திருக்காது அல்லவா; பாலுமகேந்திரா இல்லை என்று முடிவான உடன் அசோக்குமார் எனக்குக் கிடைத்தார். அந்தப் படத்தில் தொடங்கிய எங்களின் உறவு, இறுதிவரைத் தொடர்ந்தது. ‘சாசனம்’ படத்தின்போது ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ படத்துக்கு அவர் பணியாற்றிக்கொண்டிருந்ததால் நான் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டேன்.” என்று கண்களை மூடி சில நொடிகள் அமைதி காத்த மகேந்திரன், “ஒகே..” என்று சொல்லிவிட்டு நினைவுகளைத் தொடர்ந்தார்.



கண்களை அகல விரித்து..

“நடிகர்களின் செயற்கையான நடிப்பை விரும்பாதவன் நான். அவர் செயற்கையான ஒளியை விரும்பாதவர். இந்தப் புள்ளிதான் எங்கள் இருவரையும் இணைத்தது என்று நினைக்கிறேன். தனது சொந்த வாழ்வை ஸ்டைலாக வாழ்ந்தவர். பெல் பாட்டமும் டிசைனர் சர்ட்களும் டீ சர்ட்களும் அணிவார். ஒரிஜினல் ரேபான் கண்ணாடிகளைத் தருவித்து அணிவார். தரமான உணவு, உயர்ந்த விலைகொண்ட ஆடைகள் என்று தனக்கும் தனது குடும்பத்துக்குமான வாழ்க்கைத் தரத்தை அவர் குறைத்துக்கொண்டதே இல்லை. ஆனால் ஒளிப்பதிவு என்று வரும்போது எளிமைதான் அவரது மொழி. ஒளி குறித்த அவரது அறிவும் நிலைப்பாடும் உறுத்தல் இல்லாத யதார்த்தத்தின் மீதான காதலை நமக்குச் சொல்லும்.

சிறந்த ஒளிப்பதிவை எப்படி வரையறுப்பாய் என்று ஒருமுறை கேட்டேன். ‘ கம்போஸ் செய்யும்போதும், ரோல் ஆகும்போது வியூ பைண்டரில் கண்களை அகலவிரித்து நாம் காணும் அத்தனை ஷாட்களுமே சிறந்த ஒளிப்பதிவு என்று சிம்பிளாகச் சொல்வேன். குறைவான ஒளியில்தான் கண்களின் ‘ஐரிஸ்’ அகல விரிந்து காட்சிக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும்.

அப்போது கண்கள் அகல விரியும். அதுவே அதிக ஒளியும் செயற்கை ஒளியும் ஷாட்டின் உள்ளே புகும்போது நம் கண்கள் சுருங்கும்’ என்றார். இதைவிட ஒளியைப் பற்றிய புரிதலை எப்படி எளிமையாகச் சொல்லமுடியும். நான் வியந்துபோனேன்.” என்றவர் ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நினைவுகளில் ஆழ்ந்தபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன. அணிந்திருந்த கண்ணாடியை எடுத்துவிட்டு கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்ட மகேந்திரன் தொடர்ந்தார்.

அதிகாலை நினைவுகள்

“சுஹாசினியும் மோகனும் ஜாகிங் செல்லும் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காக பெங்களூருவின் கப்பன் பூங்காவில் அதிகாலை 4 மணிக்கு கூடினோம். ‘இந்த இருட்டில் இவர்கள் எதைப் படமாக்கப் போகிறார்கள்’ என்ற கிண்டல் காதில் விழுந்தது. உண்மைதான்; முகம் தெரியாத அளவுக்குப் பனிப்படலம். சூரியக் கீற்றுக்களுக்காகக் காத்திருந்ததில் இரண்டு மணிநேரம் வீணாகிவிட்டது. மறுநாள் அதே அதிகாலை 4 மணிக்குக் கூடியபோது அடிக் குரலில் ‘முகம் தெரியாத இந்தப் பனியில் படம் பிடிப்பது சாத்தியமா?’ என்றேன். ‘ஏன் சந்தேகம்?’ என்று கேட்டுவிட்டு ‘ஷாட் ரெடி’ சொல்லிவிட்டார். என்னால் நம்ப முடியவில்லை.

எனது முகத்தில் இருந்த சந்தேகத்தைப் பார்த்த அசோக் பையா ‘பிலிவ் இன் மீ’ என்று படச்சுருள்களைச் சளைக்காமல் ஓடவிட்டார். அவரது கைகளிலும் தோள்களிலும் படக்கருவி அவரது குழந்தையைப்போல தவழ்ந்துகொண்டிருந்தது. எனக்கு மனதுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டேதான் இருந்தது. பிறகு சென்னை திரும்பி பிரசாத் லேபரட்டரியில் படச்சுருளைக் கழுவி ரஷ் பார்த்தபோது நானும் ஓர் ரசிகனாய் வியந்துபோனேன்.

பனியில் தவழ்ந்த ஒளியை தன் சொல்பேச்சு கேட்கவைத்த மேதை அவர். அந்தப் படத்துக்காக அவருக்குக் கிடைத்த தேசிய விருது அத்தனை தகுதியானது. அவரைக் குறித்துப் பேச இந்த ஒரு சந்திப்புப் போதாது” என்றார். உண்மைதான் அசோக்குமாரின் சாதனைகளின் பின்னால் தரமணி திரைப்படக் கல்லூரியும் மலையாளத் திரைப்பட உலகமும் அவருக்கு அங்கே அவருக்குப் பரிச்சயமான ஓவிய உலகமும் பெரும் இடத்தை எடுத்துக்கொண்டிருந்தன. அந்தத் தடங்கள் அடுத்த வாரம்.

தொடர்புக்கு: jesudooss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x