Published : 25 Oct 2019 02:39 PM
Last Updated : 25 Oct 2019 02:39 PM

திரை விழா: கோவாவில் ஆஸ்கர் நீதிபதி!

ரசிகா

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், நடத்திவரும் அகில இந்தியத் திரைப்பட விழாக்களில் அதிகப் பார்வையாளர்களை ஈர்ப்பது, ஆண்டுதோறும் கோவாவில் நடத்தப்பட்டுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI – International Film Festival of India).

‘இஃபி’ என சினிமா ஆர்வலர்களால் அழைக்கப்பட்டுவரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு இது 50-ம் ஆண்டு. நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் அதை விமரிசையாகக் கொண்டாடும் விதமாக, பட விழாக் குழுவினர் முக்கிய நகரங்களில் சிறப்புச் சந்திப்புகளை நடத்தி, பல மொழித் திரைக் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் 50-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு வரும்படி சிறப்பு அழைப்புவிடுத்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சியில் தேசிய திரைப்பட விழா இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சைதன்யா பிரசாத் கலந்துகொண்டு பேசினார் .

“50-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், வழக்கத்துக்கு அதிகமாக இம்முறை 300 திரைப்படங்களைத் திரையிட இருக்கிறோம். இத்திரைப்பட விழாவின் ஜூரியாக இருக்க ஆஸ்கர் விருது கமிட்டியின் முன்னாள் சேர்மன் ஜான் பெய்லீ இசைந்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் மூன்று இந்திய ஜூரிகள், சர்வதேச அளவில் பரந்த நோக்குள்ள தங்களது படைப்புத்திறனுக்காகப் பாராட்டப்பட்டுவரும் சிறப்புடையவர்கள். திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் இடம்பெற இருக்கும் 23 படங்களை உரிய முக்கியத்துவத்துடன் திரையிட இருக்கிறோம். கூடுதல் சிறப்பாகக் கடந்த 50 ஆண்டுகால இஃபி வரலாற்றில் இடம்பிடித்த, மிகவும் சிறப்புடைய 25 திரைப்படங்கள் தனித் திரையில் திரையிடப்பட இருக்கின்றன.

இவ்விழாவின் போட்டிப் பிரிவில் வழங்கப்படும் சிறந்த திரைப்படத்துக்கான விருது சர்வதேச அளவில் பெருமிதமாகக் கருதப்படுகிறது. அவ்விருதுடன், பிராந்திய மொழி வாரியாக தலா ஒரு சிறந்த படத்தைத் தேர்வுசெய்து வழங்கும் சிறப்பு விருதையும் இம்முறை தொடங்குகிறோம்” என்றார்.

இந்தச் சிறப்பு சந்திப்பில் எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவாவின் துணை சேர்மன் சுபாஷ் பால் தேசாய், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், நடிகர், இயக்குநர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஜேஎஸ்கே சதீஷ்குமார், இயக்குநர் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x