Published : 17 Jul 2015 12:00 PM
Last Updated : 17 Jul 2015 12:00 PM
எம்.எஸ்.வி. மறைவுச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் புகைப்படம் அனைவரையும் அதிரவைத்தது. மெலிந்த உடல், நரைத்த தாடியுடன் முதுமையின் கொடுங்கரம் அவரைப் பற்றியிருந்ததைப் பார்த்த பலரும் கலங்கியிருப்பார்கள்.
அவர் அருகே லேசாகச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால், தன்னை உருவாக்கிய இசை மேதையின் உடல்நிலை அப்படி ஆனதை நினைத்து உள்ளுக்குள் கதறிக்கொண்டு இருந்திருப்பார். ஏனெனில், அவரது இசைப்பயணத்தின் வழிகாட்டியும் வழித்துணையும் எம்.எஸ்.வி.தான்!
பகல் நேரத்துப் பாடல்கள்
சில பாடல்கள் காலத்துடன் இறுகப் பிணைக்கப் பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் தன்மை கொண்டவை. இளையராஜா காலம் தொடங்குவதற்கு முன்னதான காலம், அவரது வருகைக்குப் பிறகான சில ஆண்டு காலம் ஆகிய காலகட்டத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அந்த வகைமையில் அடங்கக்கூடியவை. பாலசந்தரின் பரீட்சார்த்தப் படங்கள் வெளியான காலகட்டமும், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அறிமுகமாகியிருந்த காலகட்டமும் இதில் அடக்கம்.
‘வால் பேப்பர்’ ஒட்டப்பட்ட அட்டைச் சுவர்கள் கொண்ட அறைகள், அகன்ற வானத்தை வெறித்து நிற்கும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு போன்ற இடங்களில், பெரும்பாலும் பகல் நேரங்களில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் தரும் உணர்வு மிக வித்தியாசமானது. 70-களின் மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கை, தாம்பத்ய உறவின் சிக்கல்கள் இக்காலகட்டத்தின் பாடல்களில் பொதிந்திருக்கும். இப்பாடல்களைக் கேட்கும்போது பகல் நேரத்தின் வெம்மையையும், பாடல் தரும் ஆறுதல் நிழலையும் உணர முடியும்.
அந்தக் காலகட்டத்தில் பிற பாடகர்களும் பாடகிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் முக்கியமான பாடல்களைப் பாடியிருந் தாலும், எஸ்.பி.பி.யே பிற இசையமைப் பாளர்களின் இசையில் பாடி யிருந்தாலும் ‘எம்.எஸ்.வி.-எஸ்.பி.பி.’ ஜோடி தந்த பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இளம் குரலுடன் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரமும் பாந்தமும் வெளிப்படுவதற்கு எம்.எஸ்.வி.யின் பாடல்கள் சிறந்த களமாக அமைந்தன.
கண்ணனை நினைக்காத (சீர் வரிசை), பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி) நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி), ராதா காதல் வராதா (நான் அவனில்லை), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் (அக்கரைப் பச்சை), நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி), அன்பு வந்தது என்னை ஆள வந்தது (சுடரும் சூறாவளியும்), தென்றலுக்கு என்றும் வயது (பயணம்), ஓடம் அது ஓடும் (கண்மணி ராஜா), காதல் விளையாட (கண்மணி ராஜா), கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் (மேயர் மீனாட்சி), மாதமோ ஆவணி (உத்தரவின்றி உள்ளே வா), மார்கழிப் பனியில் (முத்தான முத்தல்லவோ), மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள்) என்று முடிவின்றி நீளும் பட்டியல் அவர்களுடையது.
பாலசந்தர்- எம்.எஸ்.வி.- எஸ்.பி.பி.
இக்கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையிலான பாடல்கள் கே. பாலசந்தர் இயக்கிய படங்களில் இடம்பெற்றவை. ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் பாடல்களில்தான் எஸ்.பி.பி.யின் குரலில் எத்தனை விதமான பாவங்கள். கண்ணதாசனின் பங்களிப்பு இக்கூட்டணியை மேலும் செழிக்கச் செய்தது. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலில், ‘… அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல… அட… நானும் ஏமாந்தேன்’ எனும் வரியில் சுய இரக்கம், சுய எள்ளல் கலந்த ஒரு சின்னச் சிரிப்பு அவர் குரலில் இருக்கும். அதேபோல், ’இலக்கணம் மாறுதோ’ பாடலில், ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்… பாடாமல் போனால் எது தெய்வமாகும்’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் பாந்தமும் பரிவும் உருக்கிவிடும்.
உலுக்கும் வயலின் இசையுடன் தொடங்கும் ‘வான் நிலா நிலா அல்ல’ (பட்டினப் பிரவேசம்) பாடல் இந்த ஜோடியின் இன்னொரு சாதனை. ‘இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் ஏக்கம், இயலாமை, தத்துவ மனம் வெளிப்படும். இரண்டு சரணங்களின் இறுதி வரிகளை வயலினால் பிரதியெடுக்கும் எம்.எஸ்.வி.யின் கற்பனை அற்புதமானது.
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ மிகப் பெரிய வெற்றியடைந்த பரிசோதனை முயற்சி. ‘அவர்கள்’ படத்தின் ‘ஜூனியர்’ பாடலும் இதில் அடங்கும். ‘மிமிக்ரி’ கலையின் சாத்தியங்களைப் பாடலுக்கு நடுவே புகுத்துவதற்கு அற்புதத் திறன் மட்டுமல்ல, சோதனை முயற்சிக்கான துணிச்சலும் வேண்டும். அது எம்.எஸ்.வி.யிடம் ஏராளமாக இருந்தது.
என்று நினைத்தாலும் இனிக்கும்!
இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் விஸ்வநாதனின் விஸ்வரூபத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. டைட்டிலிலேயே ‘இது ஒரு தேனிசை மழை’ என்று எழுதியிருப்பார் பாலசந்தர்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘இனிமை நிறைந்த’ போன்ற பாடல்களில் துள்ளும் உற்சாகம், ‘யாதும் ஊரே’ பாடலில் சுற்றுலாப் பயணியின் குதூகலம், ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்களில் பொங்கும் காதல் உணர்வு என்று இசையின் வீச்சை எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றிருப்பார் எம்.எஸ்.வி. அவரது கற்பனைக்கும் உழைப்புக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.
கண்ணதாசன் மறையும் வரை- 1980-களின் தொடக்க காலம் வரை எம்.எஸ்.வி.யின் இசைப் பயணத்தில் தொய்வு ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் அவரால், ஹிட் பாடல்களைத் தர முடிந்தது. இளையராஜாவுடன் இணைந்து ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் அவர் தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘தேடும் கண் பாவை தவிக்க’ பாடல் கம்போஸ் செய்யப்பட்டபோது, அதைப் பாடுவது மிகச் சிரமம் என்று நினைத்ததாக எஸ்.பி.பி. குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கஜல் பாடலுக்குரிய அம்சங்களுடன் மிக மென்மையாக நகரும் அப்பாடல், காலத்தை வெல்லும் கலையாற்றலின் எடுத்துக்காட்டு!
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT