Published : 11 Oct 2019 11:50 AM
Last Updated : 11 Oct 2019 11:50 AM
ஆதி வள்ளியப்பன்
தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் மீண்டும் ஒரு முறை கவனம் பெற்றிருக்கிறது மாமல்லபுரம். ஜி ஜின்பிங் போன்ற ஓர் உலகத் தலைவர் அந்த ஊருக்கு வருவதே தற்போதைய கவனத்துக்குக் காரணம்.
ஒரு நண்பர் சொன்னது இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது: ‘நம் வாழ்க்கையில் பார்க்க அரிதான எகிப்து பிரமிடு, பைசா நகர சாய்ந்த கோபுரம் பற்றியெல்லாம் வியந்து பேசுவோம்.
ஆனால், நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு கலைச்சின்னத்தை பார்த்து ரசிக்கவோ, பெருமிதப்படவோ யோசிப்போம்.’ மாமல்லபுரம் திடீர் பேசுபொருளாகி இருப்பதைப் பார்க்கும்போது இந்த எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உணரப்படாத பெருமை
தமிழகத்தில் திராவிடக் கட்டிடக் கலைக் கட்டுமானக் கோயிலின் தொடக்கங்களில் ஒன்று மாமல்லபுரம். தமிழகத்தில் யுனெஸ்கோ உலக மரபுச் சின்னமாக முதலில் அங்கீகரிக்கப்பட்டதும் மாமல்லபுரம் சிற்பத் தொகுதிகளே (1984). தமிழகச் சிற்பக் கலை நான்கு வகைகளில் அமைந்துள்ளது. ஒற்றைக்கல் கோயில்கள் (கற்றளிகள்); குடைவரை கோயில்கள் (குகைக் கோயில்கள்) புடைப்புச் சிற்பங்கள்; கட்டுமானக் கோயில்கள். இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம். இத்தனை பெருமைகளைக் கொண்டிருந்தும் தமிழக, தேசிய அளவில் மாமல்லபுரத்தின் பெருமை சரியாக உணரப்படாததாகவே உள்ளது.
பறைசாற்றும் படைப்பு
“முதலாம் மகேந்திர வர்மன் (பொ.ஆ. 580-630), முதலாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. 630-668) காலத்திலேயே மாமல்லபுரத்தில் சிற்பம் வடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டாலும் ராஜசிம்மன் (பொ.ஆ. 700-729) காலத்தில்தான் மாமல்லபுரம் தன் கலை உச்சத்தைத் தொட்டது. அதற்கு முன்பும் பின்பும், அதைப் போன்றதொரு கலைச் செழுமை எட்டப்படவில்லை” என்கிறார் கலை வரலாற்று ஆய்வாளர் சா.பாலுசாமி. சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்ட அவர், ‘பாரதிபுத்திரன்’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார்.
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் குறித்து ‘அர்ச்சுனன் தபசு – மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்’ (2009), ‘மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்’ (2011) ஆகிய இரண்டு முக்கிய நூல்களை அவர் எழுதியிருக்கிறார். நம் கலைப் பெருமைகளைப் பறைசாற்றும் இதுபோன்ற புத்தகங்கள் ஆங்கிலத்தில்கூட இன்னும் வெளிவரவில்லை என்றே கூற வேண்டும்.
தெவிட்டாத ஒற்றைத் துளி
‘மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்’ என்று பேராசிரியர் பாலுசாமி வர்ணிக்கும் அர்ச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம் உருவகமாக மட்டுமின்றி, ஆதாரமாகவும் இமய மலைக் காட்சியை அடிப்படையாகக் கொண்டதே. 75 அடி அகலமும் 36 அடி உயரமும் கொண்ட இந்தச் சிற்பத் தொகுதியில் 154 சிற்பங்கள் உள்ளன. “மரபாக அர்ச்சுனன் தவம் செய்யும் சிற்பம் என்று இது குறிப்பிடப்பட்டாலும், அந்தத் தவக் காட்சியைத் தாண்டி இந்தச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் மகாபாரதத்தின் வன பர்வத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இமயமலைக் காட்சியை ஒத்திருக்கின்றன” என்கிறார் பாலுசாமி.
இந்தச் சிற்பம் மிகவும் நுணுக்கமாக வடிக்கப்பட்ட ஒன்று. கோடைக் காலக் காட்சியை இந்தச் சிற்பத் தொகுதி விவரிக்கிறது. பட்டைத்தலை வாத்து என்கிற வாத்து வடகிழக்கிலிருந்து இமயமலையைத் தாண்டி இந்தியாவுக்குள் வரும். அது வரும் காலம் கோடை காலம். அந்த வாத்து இந்தச் சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல, ஒரு வேடன் பழுத்த பலாப் பழத்தை எடுத்துச் செல்கிறார். பலாப் பழம் பழுக்கும் காலமும் கோடைதான்.
“இந்த இயற்கை அம்சங்களுடன் யானை, தேன் பருந்து, பரல் எனப்படும் நீல ஆடு, ஹாக் டீர் எனப்படும் மான், மந்தி, உடும்பு ஆகியவை இன்றைக்கும்கூட இமய மலை அடிவாரக் காடுகளில் இருந்து கோமுக் வரையிலான பகுதிகளில் காணப்படுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அர்ச்சுனன் தபசு சிற்பத்தை வடித்த தலைமைச் சிற்பியும் சிற்பக் கலைஞர்களும் இமயக் காட்சியை நேரில் கண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார் பாலுசாமி.
அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி மாமல்லபுரம் எனும் கலை அற்புதத்தின் தெவிட்டாத ஒற்றைத் துளி. இன்னும் நாம் ரசித்து அனுபவிக்க எத்தனையே மதுரங்களைக் கொண்டதுதான் கடல்மல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT