Published : 04 Oct 2019 11:44 AM
Last Updated : 04 Oct 2019 11:44 AM
சு.சுபாஷ்
ஷாருக்கான் தயாரிப்பில் சென்ற வாரம் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் வலைத்தொடர் ‘பார்ட் ஆஃப் பிளட்’(Bard of Blood). அண்டை தேசத்துக்குள் ஊடுருவி இந்திய உளவாளிகள் நடத்தும் அதிரடி வேட்டையில் ஏராளமான எதிரிகளை எதிர்கொள்வதே கதை. பாகிஸ்தான் உளவாளிகள், தாலிபான் தீவிரவாதிகள், ராணுவம், பலுசிஸ்தான் போராளிகள், தாய்நாட்டின் ஆட்காட்டிகள், மேலிட கெடுபிடி என அவை நீள்கின்றன. இவற்றுக்கு அப்பால் ‘பார்ட் ஆஃப் பிளட்’ தொடர் சமாளித்தாக வேண்டிய முக்கிய எதிரியாக அமேசானின் ‘தி ஃபேமிலி மேன்’ வலைத்தொடர் குறுக்கிட்ட விசித்திரமும் இதில் நடந்திருக்கிறது!
எல்லை தாண்டிய கதை
அமேசான், நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் அநேகத் தொடர்கள் ஒன்றுக்கொன்று போட்டியாகக் களமிறங்குவதுண்டு. ‘தி ஃபேமிலி மேன்’ அமேசானில் வெளியாகி பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஒரு வாரத்தில், நெட்ஃபிளிக்ஸின் ‘பார்ட் ஆஃப் பிளட்’ வெளியானது. வழக்கம்போல் இரண்டையும் ஒப்பிட்ட இந்திய ரசிகர்கள், நெட்ஃபிளிக்ஸ் தொடரை விமர்சனங்களால் கழுவிலேற்றினார்கள். இரு தொடர்களுமே உளவாளிகள் உலகத்துக் கதைகள் என்றாலும், இரண்டும் வெவ்வேறு தளங்களில் நகரும் வேறுபட்ட கதைப் பின்னலைக் கொண்டவை. ஒப்பிடலை ஒத்திவைத்துவிட்டு நெட்ஃபிளிக்ஸ் தொடரைப் பார்ப்பதே தனி அனுபவத்தைத் தரும்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளிகள் நால்வர், தாலிபான் தீவிரவாதிகளின் பிடியில் சிக்குகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கையில் இறக்க அனுபவமுள்ள இம்ரான் ஹாஸ்மியை இந்திய உளவு அமைப்பு தேடுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற மீட்பு நடவடிக்கை ஒன்றில் உயிர் நண்பனையும் எல்லை தாண்டிய காதலையும் காவு கொடுத்த இம்ரான், உளவுப் பணியிலிருந்து கசப்புடன் விலகிவிடுகிறார். உளவு அரிச்சுவடியைக் கற்றுத்தந்த குரு அழைத்தும் மசியாத இம்ரான், அந்த மேலதிகாரி மர்மமாகக் கொலையானதை அடுத்து ஆக்ஷனில் குதிக்கிறார். குரு விரும்பியபடி சக உளவாளி ஷோபிதா துலிபாலா, பாகிஸ்தானில் மறைந்திருக்கும் இன்னொரு உளவாளியான வினீத் குமார் ஆகியோரின் உதவியுடன் பாகிஸ்தானுக்குள் ஊடுருவுகிறார்.
நிழல் உலகம்
உளவு வேட்டையின் போக்கில் தனது வாழ்க்கையைக் கவிழ்த்துப் போட்ட சோகங்களுக்கு சூத்திரதாரியான பழைய எதிரியை, இம்ரான் அடையாளம் கண்டதும் வேட்டை சூடுபிடிக்கிறது. உளவு நிறுவனங்களின் செயல்பாடுகள், உளவாளிகளின் ரகசிய நடவடிக்கைகள், அண்டை தேசங்களின் அரசியல் உரசல்கள், அவற்றில் குறுக்கிடும் பெரியண்ணன் தேசங்கள், புனிதப் போர் போர்வையில் மல்லுக்கட்டும் தீவிரவாதிகள், அவர்களை ஆட்டுவிக்கும் டபுள் ஏஜண்டுகள் என நிழல் உலகத்தில் புழங்கும் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
பிலால் சித்திக் எழுதிய இதே தலைப்பிலான திரில்லர் நாவலைத் தழுவி, தலா 45 நிமிடங்களைத் தாண்டும் 7 அத்தியாயங்களில் ‘பார்ட் ஆஃப் பிளட்’ தொடர் தயாராகி உள்ளது. ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் வலைத்தொடரை ரிபு தாஸ்குப்தா இயக்கி உள்ளார். இம்ரான் ஹாஸ்மி, வினீத் குமார், ஷோபிதா உட்பட பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். பலுசிஸ்தானைச் சித்தரிக்கும் காட்சிகளை லே, லடாக், ராஜஸ்தானில் எடுத்திருப்பது தத்ரூபமாகப் பொருந்துகிறது. அதிலும் பள்ளத்தாக்கு பிரதேசங்கள், குடியிருப்புகள், சிற்றோடைகள், விரட்டல் காட்சிகள் என ட்ரோன்களால் எடுக்கப்பட்ட காட்சிகள் தொடருக்குப் பிரம்மாண்டம் சேர்க்கின்றன.
சறுக்கிய படமாக்கம்
ஆயினும், முதல் அத்தியாயத்தில் கிளப்பிய எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்யாது, மூன்றாம் அத்தியாயம்வரை கதை தடுமாறித் தவிக்கிறது. அதற்குப் பின்னரும் நீளும் ஆக்ஷன் காட்சிகள், உளவாளிகளின் அங்கலாய்ப்புகள் என்று ஆங்காங்கே கத்தரிக்குத் தப்பித்த காட்சிகள் அதிகம் இடறுகின்றன. நாவலைக் காட்சி மொழியாக்கும்போது வழக்கமாக நேரும் இடர்பாடுகள், லாஜிக் மீறல்கள் தொடர் நெடுக விரவிக் கிடக்கின்றன. சிங்கத்தின் குகையில் அல்ல; அதன் வாய்க்குள்ளேயே சென்று திரும்பும் உளவு சாகசங்களை மையங்கொண்ட திரைக்கதையில் நுணுக்கமும் சுவாரசியத்துக்குமான வாய்ப்புகள் பலவற்றைத் தவறவிட்டிருக்கிறார்கள்.
சுமக்கும் கதாபாத்திரத்தின் கனம் தாங்காது சில இடங்களில் இம்ரான் தத்தளிக்கிறார். ‘மேட் இன் ஹெவன்’ தொடரில் ஜொலித்த ஷோபிதா இதில் வெறுமனே வந்துபோகிறார். ஃபிளாஷ்பேக் காதல் காட்சிகளும் கீர்த்தி குல்கர்னியின் பாத்திரமும் ஆறுதல். மொத்தத் தொடரின் தொய்வையும் கடைசி இரு அத்தியாயங்களின் விறுவிறுப்பில் ஈடுகட்டுகிறார்கள். அதிலும், இரண்டாம் சீஸனுக்கு அடிபோடும் கடைசிக் காட்சி மிரட்டல் ரகம்.
முன்னோட்டத்தைக் காண கைப்பேசியில் ஸ்கேன் செய்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT