Published : 04 Oct 2019 11:28 AM
Last Updated : 04 Oct 2019 11:28 AM

தரமணி 03: சென்னையிடம் கற்றுக்கொண்ட புனே!

ஆர்.சி.ஜெயந்தன்

இன்று ‘எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன’மாக இருக்கும் அரசுத் திரைப்படக் கல்லூரி, அன்று மெட்ராஸ் சென்ட்ரல் பாலிடெக்னிக்கின் ஓர் அங்கம். அதில் ‘டிப்ளமோ இன் சினிமட்டோகிராபி’ படித்தவர் பத்மநாபராஜா. அதே கல்லூரி, பின்னர் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் டெக்னாலஜி’யாக மாறியபோது அதில் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்து பேராசிரியராக உயர்ந்தவர். சிலகாலம் அக்கல்லூரிக்குச் செயல் முதல்வராகவும் இருந்தவர். திரைப்படக் கல்லூரியில் தான் பயின்ற காலத்துக்குப் பின்னோக்கிச் சென்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

குஜிலி, நடுப்பட்டினங்கள்

“ஒரு சவரன் தங்கம் ரூபாய் பதினைந்துக்கு விற்ற காலத்தைச் சேர்ந்தவன் நான். சென்னையின் ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்பா நீதிக்கட்சியை ஆதரித்தவர். “குஜிலிப் பட்டணத்தில் உன்னைப் பார்த்தேன் என்றால் தொலைத்துவிடுவேன்” என்பார். பிராட்வே, மின்ட் பகுதியில் கடைகள் நிறைந்திருக்கும் பகுதிதான் குஜிலிப்பட்டணம். அதுதான் பின்னர் சைனா பஜாராகவும் பர்மா பஜராகவும் ஆனது. அங்கே திரிந்தால் சின்னப் பையன்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று பெற்றோர்கள் நினைத்தார்கள்.

அதேபோல “நடுப்பட்டணத்தைத் தாண்டி கோடம்பாக்கம் பக்கம் செல்லாதே… போனால் திருடர்கள் உன்னைக் கொலை செய்துவிடுவார்கள்” என்று கூறுவார். அன்றைக்கு மவுண்ட் ரோட்டை ஒட்டி ஜெமினி ஸ்டுடியோ இருந்தது நடுப்பட்டணத்தில்தான். ஜெமினி ஸ்டுடியோவைத் தாண்டியதும் காங்கிரஸ் மைதானம் வரும். அதையொட்டி சன் தியேட்டர் இருந்தது. அதுதான் அன்றைய மெட்ராஸின் பாதுகாப்பான பவுண்டரி லைன்.

அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கு வெறும் கப்பிச் சாலைதான். இரண்டு பக்கமும் நெல் வயல்கள். இடையிடையே மாந்தோப்புகள், இலுப்பமரத் தோப்புகள் இருக்கும். அப்பா சொல்வதைக் கேட்காமல் கோடம்பாக்கம் ரயில்வே கிராசிங் தாண்டிச் சென்று வாகினி ஸ்டுடியோவைப் பார்க்கலாம் என்று போனால் நாய்கள் துரத்தும். ஒருமுறை நண்பனோடு வாகினி ஸ்டுடியோவைப் பார்த்து வருவதற்காக கோடம்பாக்கம் கப்பிச் சாலையில் துணிச்சலாகச் சென்றேன்.

அப்போது இலுப்பத் தோப்பில் ஒளிந்திருந்த திருடர்கள் மூவர், திடீரென வெளிப்பட்டு, பிச்சுவாக் கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். அப்பா எனக்குக் கொடுத்திருந்த 12 அணாக்களை எடுத்துக் கொடுத்தேன். நண்பனுக்கும் எனக்கும் புரடியில் ஆளுக்கொரு அடியும் கொடுத்துத் திரும்பிப் பார்க்காமல்
ஓடச் சொன்னார்கள். நான் ‘கோடம்பாக்கத்துக்குச் செல்லாமல் திரும்பிச் செல்ல மாட்டேன்’ என்றேன். நண்பனோ கண் இமைப்பதற்குள் ஓடிப்போய்விட்டான். அப்போது நான் முத்தையால்பேட்டை உயர்நிலைப் பள்ளில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

ஸ்டுடியோவுக்குள் அனுமதி இல்லை

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துத் தேறியபின் தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ‘டிப்ளமோ இன் சினிமாட்டோகிராஃபி’ படிப்பில் சேர்ந்தேன். அதற்குக் காரணம், அங்கே சினிமாட்டோகிராஃபி அண்ட் சவுண்ட் இன்ஜினீயரிங் பிரிவுக்குத் தலைவராக இருந்த என் மாமா பூபதிதான். எனக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், ‘இங்கே படித்து முடித்ததும் நீதான் வேலை தேடிக்கொள்ள வேண்டும். உங்களை நம்பிப் படித்தேன்; வேலை கிடைக்கவில்லையே எனச் சொல்லாதே’ என்று கூறி என்னை தரமணி இன்ஸ்டிடியூட்டில் சேர்த்துவிட்டார்.

அன்று தரமணி இன்ஸ்டிடியூட் ஒரு கனவுக் கல்லூரி. அங்கே எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், லெதர், பிஸ்செரீஸ், பிரிண்டிங், சானிடெரி போன்ற பல தொழில் படிப்புகள் ஒன்றாக இருந்தன. சினிமாட்டோகிராபி, சவுண்ட் ரெக்காடிங் அண்ட் சவுண்ட் இன்ஜினீயரிங், லைசென்ஸ் இன் சினிமா ஆபரேட்டர் படிப்புகளுக்கு வெறும் பத்து இடங்கள் மட்டும்தான்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கற்றுக்கொண்டாலும் கடைசி வருடப் படிப்பில் எல்லாத் தொழில்நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். மற்ற தொழில் பிரிவுகளில் படித்த அனைவருக்கும் அன்று வேலை கிடைத்தது. ஆனால், ‘தரமணி இன்ஸ்டிடியூட்டில் சினிமாட்டோகிராபி படித்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு அன்று மெட்ராஸில் பிரபலமாக இருந்த ஸ்டுடியோக்களில் நுழைய முடியாது. அங்கே வேலை கிடைக்காது.

தொழில்ரீதியாக அன்று பிரபலமாக இருந்த நியூடோன், மார்டர்ன் தியேட்டர்ஸ், வாகினி, ஜெமினி போன்ற முக்கிய ஸ்டுடியோக்களில் வெள்ளைக்கார, வட நாட்டு கேமராமேன்களிடம் வேலைசெய்து கேமரா தொழில் கற்றுக்கொண்டவர்கள் இருந்தார்கள். அன்று லென்ஸைத் தொட்டு அதை கேமராவில் பொருத்துவதைக் கற்றுக்கொள்ளவே ஸ்டியோக்களில் பத்து வருடங்களை இழந்திருந்தார்கள்.

போகஸ் செய்யவோ சினிமா கேமராவைத் தொட்டுப்பார்க்கவோகூட இப்படி வாழ்க்கையை இழந்துதான் கற்றுக் கொண்டார்கள். பெரிய தொழில் ரகசியம் பேணக்கூடியதாக கேமரா டிபார்மெண்ட் அன்றைக்கு இருந்தது. அதனால் மூன்றே ஆண்டுகளில் தரமணி பாலிடெக்னிக்கில் சினிமாட்டோகிராஃபியை படித்துவிட்டு வந்தபோது அந்த மாணவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘கேமராவில் உனக்கு எல்லாம் தெரியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம் என்ற ஈகோதான் இதற்குக் காரணம்.

ஃபிலிம் டெக்னாலஜி தேவை

இதனால் சினிமாட்டோகிராபியை நேசித்துக் கற்றுக்கொண்ட மாணவர்கள் பலர் அன்று சவுண்ட் இன்ஜினீயரிங்கும் கற்றிருந்ததால் ‘கிராமஃபோன்’ ரெக்கார்டுகள் பதிவுசெய்யும் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்தார்கள். நானும் கூடத் தொடக்கத்தில் அப்படித்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். நான் வேலை செய்த சவுண்ட் கம்பெனியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒருமுறை பாட வந்திருந்தார். உச்ச ஸ்தாயில் அவர் பாடுவதை ரெக்கார்டு செய்ய முடியாது. அதனால், அவர் பாடும்போது கொஞ்சம் ‘கம்ப்ரெஸ்’ செய்து ரெக்கார்டு செய்தோம். அதை அவர் விரும்பவில்லை. அது ஒரு காலம்.

பிற்பாடு படத்தொழில் நன்றாக வளர்ந்து டெக்னிஷியன் தேவை ஏற்பட்டபோது தரமணியில் படித்தவர்களுக்குப் பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. 60-களில் தரமணி இன்ஸ்டிடியூட்டில் இடம் கிடைப்பதும் குதிரைக் கொம்பாக மாறிப்போனது. வட மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இங்கே அட்மிஷன் கிடைப்பதில்லை என்ற நிலைமை உருவான பிறகுதான் புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டே தொடங்கினார்கள். தொடங்கும்முன் நமது சிலபஸ், ஃபிலிம் புராசஸிங் பிளாண்ட் எல்லாவற்றையும் வந்து பார்த்துவிட்டு, நம்மிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுதான் தொடங்கினார்கள்.

ஃபிலிம் பதனிடல் படிப்பு தொடங்கப்பட்டபோதுதான் நான் தரமணியில் ஆசிரியராக வேலையில் அமர்ந்தேன். தரமணி வளாகத்தில் இருந்த ஃபிலிம் புராசரிங் பிளாண்டில் பல புகழ்பெற்ற படங்களின் நெகட்டிவைக் கழுவி நான் உருத்துலக்கியிருக்கிறேன்” என்றவர், “எனது மாணவர்கள் இன்று பிரபலமான நட்சத்திரங்களாகவும் டெக்னிஷியன்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் எனக்குப் பெருமை. இன்றைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் தரமணி இன்ஸ்டிடியூட்தான் ஃபிலிம் டெக்னாலஜியின் ஆலமரம்” என்று நெகிழ்ந்து போகிறார்.
படச்சுருளை, திரையுலகம் மறந்துவிட்டது.

தரமணி திரைப்படக் கல்லூரியும் அதை மறந்துவிட்டு இன்று டிஜிட்டல் பிலிம் மேக்கிங் பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கிவிட்டது. அதேநேரம், படச்சுருளோடும் தரமணியின் பதனிடல் பிரிவோடும் உறவாடிய முன்னாள் மாணவர், முன்னாள் ஆசிரியர் பத்மநாபராஜாவை, திரைப்படக் கல்லூரியின் தற்போதைய பொறுப்பு முதல்வர் ராமசாமி சுப்ரமணியும் அங்கே பயின்றுவரும் இன்றைய மாணவர்களும் கல்லூரிக்கு அழைத்து விழா நடத்தி கௌரவம் செய்திருக்கிறார்கள். அடுத்தவாரம் இன்றைய தரமணியின் வளாகத்துக்கு ஒரு விசிட்.

(தடம் தொடரும்)
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x