Published : 04 Oct 2019 09:43 AM
Last Updated : 04 Oct 2019 09:43 AM

இரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 03: குதூகலித்த துள்ளுவதோ இளமை!

டெஸ்லா கணேஷ்

அறுபதுகளுக்குப் பிறகு ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் திரைக் கதைகளின் தாக்கம் இந்தியத் திரையுலகை ஆட்கொண்டது. ஆங்கிலக் கதாபாத்திரங்கள் இந்தியப் பின்னணியில் நுழைந்து இந்திய உடை உடுத்திக்கொள்ள, அதற்கு நேர் எதிராக இந்தியத் திரை இசையோ மேற்கத்திய நவீன பாணி ஆடையை உடுத்த ஆரம்பித்தது.
தமிழ்த் திரையிசையில் ஆரம்ப காலம் தொடங்கி மேற்கத்திய இசையைப் பல இசையமைப்பாளர்கள் கையாண்டு இருந்தாலும், மேற்கு உலகின் பல்வேறு பிரதேச இசை வடிவங்களை ஒன்றிணைத்து அனைவரும் ஏற்கத்தக்க அழகிய வடிவில் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

இசையில் பிரம்மாண்டம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நடிகர்கள் என்ற அடைப்புக் குறியைத் தாண்டி திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை நோக்கி ஆரவாரமாக நகரத் தொடங்கியபோது அதற்கேற்ற முறையில் பாடல்கள், பின்னணி இசையிலும் பிரம்மாண்டம் தேவைப்பட்டது. அதுவரை புழக்கத்திலிருந்த பியானோ, அக்கார்டியன், மேண்டலின், வயலின், வியாலோ, செல்லோ, டபுள் பாஸ், கிட்டார், கிளாரினெட், சாக்சபோன், டிரம்பெட், டிராம்போன் மற்றும் ட்ரம்ஸ் என அனைத்து மேற்கத்திய இசைக் கருவிகளும் மெல்லிசை மன்னரின் விரலுக்குக் கட்டுப்பட்டு அவரோடு முற்றிலும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கின.

பாடல்களின் முகப்பு இசை மற்றும் இடை இசைக் கோவைகள் அழகியலோடு கூடிய புதுமையான ‘ஹார்மனி’ வடிவம் பெற்றன. எம்.எஸ்.வியின் தனி இசைப் பயணம் தொடங்கிய காலம் என்பது தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மீது துப்பாக்கிச்சூடு, தமிழக அரசியலில் புரட்சிகரமான ஆட்சி மாற்றம் என மாநிலமே கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டமாகவே இருந்தது. அதுவரை ‘அமைதியான நதியினில் ஓடம்’ விட்டுக்கொண்டிருந்த அவர் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்று விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தார்.

ஸ்பெயின் நாட்டின் காளைச் சண்டை நடன இசையான ‘பாசோ டோப்லே’ (Paso Doble) வடிவத்தின் அடிப்படையில் ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ‘துள்ளுவதோ இளமை...’ என்ற பிரம்மாண்டமான பாடலை கொடுத்த மெல்லிசை மன்னர், அந்த இசையின் தாள வடிவத்துக்கு ஏற்ப ஒரு வரிக்கு இரண்டு வார்த்தைகள் எனப் பாடலை அமைத்துப் பிரமிப்பூட்டினார். அதற்கு இணையாக ‘சிவந்தமண்’ படத்தில் சிவாஜிக்கு அரேபிய இசை வடிவின் அடிப்படையில் ரசிகர்களைச் சிலிர்க்க வைத்த ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’யில் வெற்றி தந்தார். லதா மங்கேஷ்கரே இந்த அளவுக்குச் சிறப்பாகத் தன்னால் பாட முடியாது என்று சொல்லும் வகையில் எல்.ஆர். ஈஸ்வரிக்கு சிறப்புச் சேர்த்தார்.

நுட்பமான மெட்டுகள்

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி பாடல்களில் வாத்தியக் கருவிகளை இசைப்பதுபோல வரும் காட்சிகளுக்குத் தனி அடையாளங்களுடன் இசைக் கோவைகள் அமைத்துள்ளார். இதற்கென இரு நடிகர்களுமே படப்பிடிப்புக்கு முன்பு அத்தகைய வாத்தியக் கருவிகளை முறைப்படி கையாளுவதற்குப் பயிற்சி பெற்ற சுவையான சம்பவங்களும் உண்டு.
‘தெய்வமகன்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘ஞான ஒளி’ என சிவாஜி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பின் உச்சத்தைத் தொட்ட படங்களில் உணர்ச்சிமிகு உரையாடல்களோடு கூடிய பாடல்களால் இசையிலும் உச்சத்தைத் தொட்டார் எம்.எஸ்.வி.வெற்றிபெற்ற இந்தித் திரைப்படங்கள் அதிக அளவில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்காகத் தமிழில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டபோது மூலப் படத்தின் மெட்டுகளைத் தவிர்த்து அவற்றைவிட மிகச் சிறப்பான பாடல்களை இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசை ராகங்கள் இழையோட சுவைபட வழங்கினார் மெல்லிசை மன்னர். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அவர்களது பாவனைக்குப் பொருந்தும் வண்ணம் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் பின்னணி பாடுவது அவரது தனித்திறமை என்று சொல்லப்பட்டாலும் இரண்டு நடிகர்களுக்கும் பாடல்களை மெட்டமைத்து இசைக்கோவை சேர்க்கும் முறையிலேயே நுண்ணிய வித்தியாசங்களைக் கடைப்பிடித்த மெல்லிசை மன்னரின் மேலான திறமையும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். இதற்கு உதாரணமாக ‘எங்க மாமா’ திரைப்படத்தில் ‘என்னங்க... சொல்லுங்க...’ பாடலைப் போல ஆச்சரியமூட்டும் தாள நடைகள் கொண்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

தமிழ்த்தாய்க்கு மரியாதை

மெல்லிசை இரட்டையர்களின் இசையில் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று மெதுவாக
விரிந்த எம்.ஜி.ஆரின் அரசியல் கனவு, 1970-களில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘நம்நாடு’ திரைப்படத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்...’ என்று உறுதிகொள்ளத் தொடங்கியது.

இத்தகைய சூழலில் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக மற்ற இசையமைப்பாளர்கள் தவிர்த்துவந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’க்கு இசையமைக்கும் பணியைத் தலையாய கடமையாக ஏற்றுக்கொண்ட மெல்லிசை மன்னர், அதற்கு ‘மோகன’ ராகத்தில் சீரிய முறையில் மெட்டமைத்து டி.எம்.எஸ்., பி.சுசிலா இணைக்குரலில் பாடவைத்து அதைத் தமிழ்நாட்டின் அடையாளம் ஆக்கினார்.

இந்திய அரசியல் வானில் தமிழக அரசியல் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்தால் இசையில் சில நூற்றாண்டு சாதனைகளை ஒரே பிறவியில் சாதித்த மெல்லிசை மன்னருக்குத் தேசிய அங்கீகாரங்கள் வழங்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்கிற ஐயம் எம்.எஸ்.வி.யின் ரசிகர்கள் மனத்தில் தவிர்க்க முடியாமல் இன்றளவும் தொக்கி நிற்கிறது.

1972-ல் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி அதற்குப் பலம் சேர்க்கும் வகையில் தனது திரைப்படங்களை நகர்த்தத் தொடங்க, சிவாஜியோ கமர்ஷியல் அம்சங்கள் தூக்கலான கதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். வாழ்நாள் முழுவதும் சவால்களைச் சந்தித்தே பழகிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்.

(விசுவ‘நாதம்’ தொடரும்)
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x