Published : 27 Sep 2019 09:39 AM
Last Updated : 27 Sep 2019 09:39 AM

ஒளிரும் நட்சத்திரம்: அலட்டாமல் சாதித்த ஆர்யா!

க.நாகப்பன்

வாழ்நாள் முழுக்க ஒருவர் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவருக்கு நடிகன் என்கிற தகுதியும் பெருமையும் எப்போது வாய்க்கும் என்பதைக் கணிக்க முடியாது. அந்த வகையில் தன் மீதான அலட்சியத்தை, ஆர்வமின்மையை மாற்றி 'மகாமுனி' படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகருக்கான தகுதியுடன் ஆச்சரியப்பட வைத்துள்ளார் ஆர்யா.

சொல்லப்போனால் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையை 'மகாமுனி'க்கு முன் ‘மகாமுனி'க்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு நுட்பமான நடிப்பால் ‘நான் நடிகன்டா’ என்று ஆர்யா தன்னை நிரூபித்துள்ளார்.
ஆர்யா நடித்த முதல் படம் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் உருவான ‘உள்ளம் கேட்குமே'. அதற்குமுன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘அறிந்தும் அறியாமலும்' படம் வெளியானது.

ஆர்யா அதில் நாயகன் அல்ல. காதல் பாடல்கள், காதல் என்று ஜோடியுடன் இருப்பவரே நாயகன் என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிப்படி, இப்படத்தில் நவ்தீப் தான் ஹீரோ. ஆனால், பிரகாஷ்ராஜ், ஆர்யா, நவ்தீப் ஆகிய மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களை வைத்தே திரைக்கதை நகரும். இதில் தாதா பிரகாஷ்ராஜின் வளர்ப்பு மகன் குட்டியாக வந்து இயல்பான நடிப்பால் பெரிய அளவில் திறமையை வெளிப் படுத்தினார் ஆர்யா. ‘தீப்பிடிக்க தீப்பிடிக்க’ பாடலின் மூலம் நடன அசைவிலும் கவனிக்கவைத்தார்.

தலைகீழ் தவம்

அடுத்து ஆர்யா நடித்த ‘ஒரு கல்லூரியின் கதை' போதுமான வரவேற்பைப் பெறவில்லை. உடனடி யாக ஒரு வெற்றி தேவைப்பட்டதால், கமர்ஷியல் சினிமா பக்கம் கவனம் செலுத்தினார். ‘பட்டியல்', ‘வட்டாரம்' ஆகியவை வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களின் வரிசையில் இடம்பிடித்தன. அந்தச் சூழலில் பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான அஜித், சில காரணங் களால் விலக, ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக 'நான் கடவுள்' இடம்பிடித்தது.

நடிப்பு என்பது அர்ப்பணிப்பு மிகுந்த கலை என்பதில் ஆர்யாவுக்கு மாற்றுக் கருத்தில்லை. அதனால்தான் தலைகீழாக இருந்து தவம் புரியும் யோகாசனத்தைச் செய்வதற்கு ஒன்றரை வருடப் பயிற்சி தேவையாக இருந்த நிலையில் ஒரே மாதத்தில் அதைச் சாதித்தார். அதுதான் அவரின் அறிமுகக் காட்சியாகப் படத்தில் இடம்பெற்றது. ஜடா முடி, அழுக்கான ஆடை, கையில் எப்போதும் புகையும் சுருட்டு, நெருப்புப் பார்வை, ருத்ர தாண்டவம் என அகோரியாகவே மாறியிருந்தார் ஆர்யா. இப்படிக்கூட ஆர்யாவால் நடிக்க முடியுமா என்கிற பிரமிப்பைத் தந்த அந்தப் படத்தில்தான் கதாபாத்திரமாக வெளிப்படும் கலையில் ஆர்யா முதன்முதலாகத் திரையுலகைத் தன் பக்கம் திருப்பினார்.

‘மதராசப்பட்டினம்' ஆர்யாவின் அப்பழுக்கற்ற இன்னொரு பரிமாணத் தைக் காட்டியது. ஆங்கிலேயர்களின் அடிமைத் தளையிலிருந்து விடுபடத் துடிக்கும் இளைஞனாக, ஆங்கிலேயப் பெண்ணின் அன்பிற் கினிய காதலனாகத் தன் அழுத்தமான நடிப்பை வழங்கினார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்', ‘சிக்குபுக்கு' என்று மீண்டும் காமெடி, காதல் படங்களில் நடித்தவர், ‘அவன் இவன்' மூலம் பாலாவுக்கே உரிய பாணியில் நகைச்சுவையில் தடம் பதித்தார்.

கமர்ஷியல் நாயகன்

கமர்ஷியல் சினிமா என்பது நாயக பிம்பத்தைக் கட்டமைக்கும் சினிமா மட்டுமே என்பதை ஆர்யா நன்கு புரிந்து வைத்திருந்தார். ஆக்‌ஷன், காதல், காமெடி என்று ஃபார்முலா காட்சிகள் இருக்கும் என்பதால் அந்த ‘டெம்ப்ளேட்’ அல்லது ‘க்ளிஷே’ நடிப்புக்கும் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். ‘வேட்டை', ‘ராஜா ராணி', ‘ஆரம்பம்', ‘மீகாமன்', ‘கடம்பன்', ‘கஜினிகாந்த்' என்று வணிக சினிமாவின் பக்கம் ஆர்யா கவனம் செலுத்தினார். நடிப்புக்கான மிகப் பெரிய களம் கிடைக்காதபோதும் ஆர்யா கவலைப்படவில்லை. கதாநாயகனுக்குரிய சாகசங்கள், ஹீரோயிஸம் போன்ற அம்சங்களால் கமர்ஷியல் நாயகனாகத் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டார்.

இதனிடையே ‘நான் கடவுள்', ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை', ‘மகாமுனி' ஆகிய படங் களை ஆர்யா ஏன் தேர்ந்தெடுத்தார் என்று யோசித்தாலே, நடிப்பு மீது அவருக்கு உள்ள காதலைப் புரிந்து கொள்ள முடியும். ‘டெம்ப்ளேட்’ நடிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு வியாபாரப் போட்டியைத் தாண்டி தன் நடிப்புக்கான களத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆர்யாவின் வேட்கையே அந்தப் படங்களின் தேர்வுக்குக் காரணம். அந்த விதத்தில் வணிக சினிமாவின் எல்லைகளை மீறி, அதன் கட்டுப்பாடுகளைத் தாண்டி வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்ற துணிச்சலுக்கு ஆர்யாவைப் பாராட்டலாம்.

மகாமுனி’யில் மகா நடிகன்

நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் ஆர்யா அடைந்தது ‘மகாமுனி' படத்தில்தான். உடல், குரல், மனம் ஆகிய மூன்றையும் தயார்படுத்திய பிறகே ஆர்யா ‘மகாமுனி'யில் நடிக்கச் சம்மதித்திருக்கக்கூடும். பேச்சு, வடிவம், நிற்கும் விதம், போஸ், சைகைகள், பாவனைகள், குரல், உணர்ச்சிகள் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக வேறுபடுத்தி மகாதேவன், முனிராஜ் கதாபாத்திரங்களின் மூலம் இதுவரை பார்த்திராத ஆர்யா எனும் நடிகன் ஒளிர்ந்தார்.

இதற்கு முன்னதாக, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா இரட்டை வேடங்களில் ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதில் ஆர்யாவை வழக்கமான காதலனாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால், ‘மகாமுனி'யில் இரு வேறு கதாபாத்திரங்களின் அனைத்து மன உணர்வுகளையும் நுட்பமாகக் கடத்திய விதத்தில் அசர வைத்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘காப்பான்' படத்தில் சூர்யா நாயகன் என்றாலும், ஒரு துணைக் கதாபாத்திரத்தில் பிரதமரின் மகனாக, இன்றைய இன்ஸ்டாகிராம் இளைஞனின் மனநிலையை ஆர்யா பிரதிபலித்திருக்கிறார். அதன் மூலம் தன் இயல்பான குணாதிசயத்தை முன்வைத்து தன் மீதான விமர்சனத்துக்கு ஆர்யா ஒரு பதில் கொடுத்துள்ளார் என்று சொல்லலாம். பலரும் சொல்வதுபோல விளையாட்டுத்தனமாகவோ பொறுப்பில்லாமலோ அவர் நடந்துகொள்ளவில்லை. எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதே தன் கதாபாத்திரங்களின் வழியே ஆர்யா சொல்லும் கருத்தாகப் பார்க்கலாம்.

இந்தப் பண்பால்தான் விஷ்ணுவர்தன், பாலா, ஏ.எல். விஜய், புஷ்கர் - காயத்ரி, ராஜேஷ், சரண், லிங்குசாமி, செல்வராகவன், ஜனநாதன், அட்லீ, கே.வி.ஆனந்த் என்று பல்வேறு விதமான இயக்குநர்களின் படங்களிலும் ஆர்யாவால் நடிக்க முடிந்திருக்கிறது. இதற்காக ஆர்யா கடந்துவந்த பாதை பெரிதுதான். ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆர்யாவின் 25-ம் படம்.

30 படங்களுக்குப் பிறகே ‘மகாமுனி' போன்ற அர்த்தமுள்ள படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளதன் மூலம் ஆர்யா தன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். ‘எப்போது நடிக்க வந்தோம் என்பது பெரிதல்ல. சாதாரணமாக நடிக்கத் தொடங்கியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சிறந்த நடிகர்களாக ஆகமுடியும்’ என்பதற்கு நிகழ்கால சான்றாகி நிற்கிறார் ஆர்யா.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
படம்: கிரண்ஷா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x