Published : 27 Sep 2019 09:11 AM
Last Updated : 27 Sep 2019 09:11 AM
- வா.ரவிக்குமார்
நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவை கிராமங்களிலேயே அருகிவருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காஞ்சிபுரத்தின் புஞ்சரசந்தாங்கல் கிராமத்தில் கூத்துக்கலை வடிவத்தில் ஒன்றான கட்டைக்கூத்துக் கலைக்கு ஆக்ஸிஜன் கொடுத்து காப்பாற்றி வருகிறார் கிராமியக் கலைஞர் ஒருவர்.
அந்தக் கலையை, அடுத்த தலைமுறையின் கையில் எப்படியாவது கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் அதைப் பயிற்றுவிப்பதைத் தனது முழுநேரப் பணியாகச் செய்து வருகிறார் பொ.ராஜகோபால். கட்டைக்கூத்து நிபுணரான ராஜகோபால் ‘புஞ்சரசந்தாங்கல் கட்டைக்கூத்து குருகுலம்’ என்ற பெயரில் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் படிப்புடன் கட்டைக்கூத்தும் பாடுவதற்கான பயிற்சியும் இசையும் கற்றுத் தரப்படுகின்றன.
இந்தக் குருகுலத்தில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டு மாயக்குதிரை கட்டைக்கூத்து அண்மையில் மூன்று நாட்களுக்கு சென்னையில் நடந்தது. இதுபோல் அருகிவரும் கலை வடிவத்தைக் காணும் வாய்ப்பு மாநகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் சென்னை வாணி மகாலிலும் ஸ்பேசஸ் அரங்கிலும் ‘மாயக் குதிரை’யை எனும் கட்டைக்கூத்தை மேடையேற்றியது சென்னையின் ஷ்ரத்தா அமைப்பு.
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான கட்டைக்கூத்தில் இசை, வசனம், நடனம், ஒப்பனை, உடையலங்காரம் எனப் பல்வேறு நாடகக் கூறுகளும் பின்னிப்பிணைந்திருக்கும். கட்டைக்கூத்தில் நமது புராணங்களில் இடம்பெற்றுள்ள பேரரசர்கள், முனிவர்கள், கடவுளர்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார்கள்.
கட்டைக்கூத்தின் இத்தகைய பாரம்பரிய வடிவத்தின் எல்லைகளைத் தாண்டி, புதிய கற்பனைகளுக்கும் அதில் இடமுண்டு என்பதை எடுத்துக்காட்டி ஆச்சரியப்படுத்தியது ‘மாயக் குதிரை’
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் அக்கா மண்டோதரியும் தம்பி தாண்டவராயனும் அவர்களுக்குள் எழும் சிறுசிறு சண்டைகளுக்குப் பின், சமாதானமாகி மரங்கள் சூழ்ந்த பகுதியில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனர்.
அங்கே விநோதமான மொழி பேசும் வேற்றுக் கிரக வாசிகள் இருவரைச் சந்திக்கின்றனர். அவர்களின் செய்கைகளைக் கொண்டு, அவர்களால் பறப்பதற்கு சக்தி இல்லாமல் போய்விட்டதை உணர்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் சக்தி கிடைப்பதற்கு அந்தக் குழந்தைகள் தங்களின் குரங்கு நண்பனான ஆதியின் உதவியை நாடுகின்றனர். ஆதி, அவர்களை பரந்தாமன் எனும் ஆமை, மகாபூதம், மருத்துவர் என்று ஒவ்வொருவரிடமும் அழைத்துப் போகிறது. அந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு சக்தி கிடைத்ததா, அவர்களின் உலகத்துக்குப் போகமுடிந்ததா என்பதை பொ.ராஜகோபாலின் எழுத்து, இயக்கத்தில் உருவான `மாயக்குதிரை’ பரபரப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தது .
ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இணைப்பைப் பொருத்தமான வசனங்களின் மூலமே பார்வையாளருக்கு நேர்த்தியாக உணர்த்திவிடுகிறார்கள். வசன உச்சரிப்பு, உடல் மொழி, உடையலங்காரம் (ஹன்னா டி புருய்ன்), சிறப்புக் கலை வடிவம், அரங்க நிர்மாணம் என எல்லாவற்றிலும் அந்தச் சிறுவர்களின் பங்களிப்பு வியக்க வைத்தது. குறிப்பாக, மகாபூதமாகத் தோன்றிய சிறுவன் அர்ஜுன், நடிப்பில் ஒரு குட்டி பூதமாக அசத்தினான்.
‘கட்டைக்கூத்து குருகுலம்’ என்னும் அமைப்பின்கீழ், ஆறு வயதிலிருந்து சிறுவர் சிறுமியர் இங்கு அமைந்திருக்கும் பள்ளியில் கல்வியோடு கூத்துப் பயிற்சியும் பெற்று வருகின்றனர். இந்தக் குருகுலத்தில் பயிலும் மாணவ மாணவியர் பெரும்பாலும் சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பச் சூழலில் இருந்து வந்து கற்பவர்கள். பாரம்பரியமாக ஆடப்பட்டுவரும் கட்டைக்கூத்தில் பெண்கள் இடம்பெற மாட்டார்கள். ஆனால், இந்தக் குருகுலத்தின் மற்றுமொரு தனித்தன்மை, பெண்களையும் கட்டைக்கூத்தில் பங்கேற்க வைத்திருப்பதுதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT