Published : 27 Sep 2019 09:11 AM
Last Updated : 27 Sep 2019 09:11 AM
இந்திக்குச் செல்லும் ‘கோகிலா’
நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய இருக்கிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். நயன்தாரா, யோகிபாபு கதாபாத்திரங்களில் யார் நடிப்பார்கள் என்பது தெரியாத நிலையில், படத்தின் இயக்குநரான நெல்சனுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
ராஜமுந்திரியில் ‘இந்தியன்’
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன்’ வெளியாகி 23 ஆண்டுகளுக்குப்பின் அதன் இரண்டாம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறது அதே கூட்டணி. லைகா நிறுவனத் தயாரிப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அங்கே சிறைச்சாலை சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். ‘எந்திரன்’ படத்தில் ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய ரத்னவேலு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
பதினேழு விருதுகள்
இலங்கையில் 2009-ல் நடந்த முள்ளிவாய்க்கால் போரின்போது நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. புதுமுகங்களின் நடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். தணிகைவேல் முதல் முறையாகத் தயாரித்திருக்கும் படம்.
நாற்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடலுக்குத் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை எனப் பல பிரிவுகளில் பதினேழு விருதுகளைப் பெற்றிருக்கிறது. புதியவன் ராசையா இயக்கத்தில் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. படத்தை பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், அதன் ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார்.
பி.லெனின் எழுத்தில்..
மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் உட்பட முத்திரை பதித்த பல இயக்குநர்களின் படங்களை எடிட் செய்தவர் பி.லெனின். ஐந்து தேசிய விருதுகளைப் பெற்ற இவர் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற இவரது கதை, திரைக்கதை, வசனத்தில் ‘கட்டில்’ என்ற திரைப்படம் உருவாகிறது. பிரபல குணச்சித்திர நடிகரும் ‘யமுனா’ என்ற படத்தை இயக்கிவருமான இ.வி.கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்குகிறார். மேப்பிள் லீஃப்ஸ் என்ற படநிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
டிசம்பரில் கோலாகலம்!
இண்டோ சினி அப்ரிஷியேசன் ஃபவுண்டேசன் திரைப்படச் சங்கமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் 17-வது சென்னை சர்வதேசத் திரைப்படவிழா வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கி 19 வரை 8 நாட்கள் நடக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே கலைவாணர் அரங்கத்தில் தொடக்கவிழா நடக்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ ஆகிய திரையரங்குகளிலும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மைய அரங்கம், மந்தைவெளியில் உள்ள தாகூர் திரைப்பட மைய அரங்கம் ஆகிய ஆறு இடங்களில் திரையிடல் நடக்க இருக்கிறது. சென்னையின் முக்கிய சர்வதேசப் படவிழாவான இதன் இலச்சினை போஸ்டரை செப்டம்பர் 30 அன்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிடுகிறார்.
அஜித்தின் அடுத்த நாயகி
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஏற்கெனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். இதை படக்குழு விரைவில் உறுதி செய்யும் என்கிறது அஜித் வட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT