Published : 31 Jul 2015 10:30 AM
Last Updated : 31 Jul 2015 10:30 AM

அண்ணாவின் செல்லப்பிள்ளைக்கு 100 வயது!- கே.ஆர். ராமசாமி நினைவலைகள்

திரைப்படத்தை சக்தி வாய்ந்த ஊடகமாகப் பார்த்த அரசியல் தலைவர்களுள் அண்ணாவும் ஒருவர். திராவிட இயக்கத்துக்கு அது தேவை என்று கருதினார். அவர் திரைப்படங்களுக்கு எழுதியது குறைவே. ஆனால், அவரது திரை எழுத்து தமிழ் சீர்திருத்த சினிமாவுக்கு உரமாக அமைந்தது. அப்படி அவர் முதன்முதலில் கதை, வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து புகழின் உச்சியைத் தொட்டவர்தான் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி. அண்ணாவின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கே.ஆர். ஆரின் கலைவாழ்க்கை தொடங்கியது ஏழு வயதில்.

அண்ணாவின் பார்வையில்

ஒருமுறை கே.ஆர். ராமசாமி பற்றி அண்ணா கூறும்போது, “நண்பர் கே.ஆர். ராமசாமி கலை உலகில் ஒரு கருவூலம். காசுக்காக மட்டுமே நடிக்காத ஒரு கடமை வீரர். நிலம் பிளந்து விழ நேர்ந்தாலும் நெஞ்சம் குலையாத ஒரு கொள்கைத் தங்கம். எனக்கும் அவருக்கும் ஏற்பட்டுள்ள அன்பும் பிணைப்பும் எளிதிலே அறுந்து விழக்கூடிய வைக்கோல் வடம் அல்ல. எப்போதுமே அறுந்துவிடாத எஃகு கம்பி, என்னைப் பார்க்காமல் அவரோ, அவரைப் பார்க்காமல் நானோ இருக்க முடியாத ஒரு நட்புச் சங்கிலி எங்களைப் பிணைத்திருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறையிலே சேர்ந்து அவருடைய எழுச்சியூட்டும் இலட்சியங்களைப் பரப்பும் எழுத்தாளனாக, பேச்சாளனாக இருந்துவந்த என்னை முதன்முதலில் கலையுலகம் பற்றியும் சிந்திக்க தூண்டியவர் நடிகமணி டி.வி. நாரயணசாமி. அந்தக் கலையார்வம் கருகிய மொட்டாகிவிடாமல் காய்த்திடவும், கனிந்திடவும் இன்று எனக்கு ஊக்கமூட்டுபவர், உதவிவருபவர், என் இனிய நண்பர்” என்று கே.ஆர். ராமசாமியை கொண்டாடியிருக்கிறார்.

ஆறு தகுதிகளும் நாடக வாழ்க்கை

நாடகக் கலையின் மூலம் மக்களைத் திருத்திப் பகுத்தறிவுப் பாதைக்குத் திருப்பிய முதல் நடிகர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி. கும்பகோணத்துக்கு அருகே ‘அம்மாசத்திரம்’ என்ற சிற்றூரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இராமபத்திர செட்டியார், குப்பம்மாள் ஆகியோருக்கு 14.4.1914-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த கே.ஆர். ராமசாமி அவர்கள் தமது ஏழாவது வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடிகனாகச் சேர்ந்தார்.

ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடித்தார். அந்த காலத்தில் பாய்ஸ் கம்பெனியில் நடிகனாகச் சேர்வதற்கு ஆறு தகுதிகள் தேவை. 1. வயது 2. தோற்றப் பொலிவு 3. குரல் வளம் 4. பாடும் திறன் 5. இசை ஆர்வம் 6. நடிப்புத் திறன். இவை ஆறும் நிரம்பிய ஆணழகனாக ராமசாமி விளங்கியதால் நாடக கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சின்னச் சின்ன வேடங்கள் வழியே கதாநாயகனாக உயர்ந்து பெரும் புகழ் பெற்றார்.

திரைப் பிரவேசம்

நாடக கம்பெனியிலிருந்து ஒரு கட்டத்தில் விலகிய கே.ஆர். ராமசாமி திரைக்கலையின் வீச்சைப் புரிந்துகொண்ட அதில் ஈடுபட முன்வந்தார். அதே நேரம் நாடக மேடையை விடவும் அவருக்கு மனமில்லை. டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற நாடகமான ‘குமாஸ்தாவின் பெண்’ திரைவடிவம் பெற்றது. அப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார் கே.ஆர்.ஆர். அந்தப் படத்தின் துணை இயக்குநர்களாக பணியாற்றிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு பின்னாளில் ‘பூம்பாவை’என்ற படத்தை இயக்கினார்கள். அவர்களுடைய பரிந்துரையினால் அந்தப் படத்தின் கதாநாயகன் வாய்ப்பு கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. இவருக்குப் படத்தில் ஜோடியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.

கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘தெய்வ நீதி’, ‘கிருஷ்ண பக்தி’ ‘கங்கணம்’ஆகிய படங்களில் நடித்தார். எல்லாப் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. திரைப்படத்துக்கு இணையாக நாடகம் செழித்து நின்றதால் பக்தி நாடகங்களை விடுத்து சமூக நாடகங்களில் நடிக்கத் தயாரானார் கே.ஆர். ராமசாமி. கலைவாணர் என்.எஸ்.கே. மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரைச் சூட்டி ‘கிருஷ்ணன் நாடக சபா’ என்ற பெயரில் சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கினார்.

பெரியாரின் திராவிட இயக்கக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கே.ஆர். ராமசாமிக்கு அண்ணாவின் நட்பு கிடைத்தது. இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். கே.ஆர். ராமசாமி நடிப்பதற்காகவே ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்கள் எழுதினார் அண்ணா. பகுத்தறிவுக் கருத்துகளைத் தீயாகப் பரப்பிய இந்த இரண்டு நாடகங்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.

“அண்ணாவின் நீண்ட வசனங்களை உணர்ச்சி ததும்பப் பேசி அதற்கு மெருகூட்டியவர் கே.ஆர். ராமசாமி. புராண, சரித்திர நாடகங்களே வெற்றி பெறும் என்றிருந்த காலகட்டத்தில், ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் நடத்தி சுயமரியாதைக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச்செல்வதில் வெற்றி கண்டவர்” என்று திமுக தலைவர் கருணாநிதி, கே.ஆர். ராமசாமியைப் பற்றி நினைவுகூர்ந் திருக்கிறார்.

மறுப்பும் ஏற்பும்

வேலைக்காரி நாடகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் அதைத் திரைப்படமாகத் தயாரிக்கும் உரிமையை ஜூபிடர் நிறுவனம் வாங்கியது. நாடகத்தில் நடித்த கே.ஆர். ராமசாமியையே நாயகனாகவும் ஒப்பந்தம் செய்தது. நண்பருக்காக அண்ணா முதல்முறையாகத் திரைக்கதை, வசனம் எழுதினார். கே. ஆர். ராமசாமிக்கு வி.என். ஜானகி ஜோடியாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்று 100 நாட்கள் ஓடியது.

படத்தின் வெற்றியைக் கண்ட என். டி. ராமராவ் அதன் தெலுங்கு மறுஆக்கத்தில் விரும்பி நடித்தார். இந்தியிலும் வேலைக்காரி மறுஆக்கம் செய்யப்பட்டது. வேலைக்காரியின் இந்திப்பட மறு ஆக்கத்தை வாங்கி வெளியிட்ட இந்திப்பட விநியோகஸ்தர் தாராசந்த், அண்ணாவின் அறிவாற்றலைப் புகழ்ந்து பேசிப் பேட்டியளித்தார். அது இந்திப் பத்திரிகைகளில் வெளியானது.

வேலைக்காரி படத்தின் வீச்சைக் கண்ட கே. ஆர். ராமசாமி புராண இதிகாசப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். ‘காஞ்சனா’, ‘சுகம் எங்கே’, ‘செல்லப்பிள்ளை’, ‘நீதிபதி’ ‘அவன் அமரன்’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கே.ஆர். ஆர் கடைசியாக நடித்த படம் ‘நம் நாடு.’

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அது எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தபோது கலையுலகின் சார்பாக முதல் மேலவை உறுப்பினராகும் (எம்.எல்.சி) வாய்ப்பைப் பெற்ற முதல் நடிகர். தோழர் அண்ணாதுரை என்று அழைக்கப்பட்டுவந்தவரை ‘அறிஞர் அண்ணா’ என்று அழைத்திடுவதற்குக் காரணம் கே.ஆர்.ஆர்தான். ‘ஓர் இரவு’ நாடகம் தஞ்சையில் அரங்கேறியபோது ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரத்தில் கதை உரையாடல் - அறிஞர் அண்ணா என்று போட்டு விளம்பரம் வெளியிட்டவர் இவர்தான்.

திமுகவின் வளர்ச்சிக்காகத் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் வாரி வழங்கிய கே.ஆர்.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை ‘திராவிட இயக்கத் தொடர்பியலின் கதாநாயகன்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கருத்தரங்காக வரும் 05.08.15 அன்று கொண்டாடுகிறது.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x