Published : 13 Sep 2019 11:34 AM
Last Updated : 13 Sep 2019 11:34 AM
பி.ஜி.எஸ். மணியன்
இன்று திரைப்பாடல் என்பது கதையை நகர்த்தும் கருவியாக மாறிக்கொண்டு வருகிறது. இது வரவேற்கத் தக்க மாற்றம். ஏனென்றால், திரைப்படம் என்பது பல கலைகளை ஒருங்கிணைக்கும் அற்புத ஊடகம் என்றாலும் அதன் தனித்துவம் என்பது காட்சி வழியாக மனிதர்களின் மனத்தை மயக்கும் மாயத்தைச் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது.
அப்படியிருக்கையில் ஒரு கதாபாத்திரத்தின் குணத்தையும் பராக்கிரமங்களையும் காட்சிகளின் வழியாக நிறுவுதலே அந்தக் கலையின் இயல்புக்கு ஒத்துப்போகக் கூடியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் ஆகும். ஆனால், இந்த அம்சத்தை நமது படைப்பாளிகள் புரிந்துகொள்ள 100 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இன்றும் சில கதாநாயகர்களுக்கு அறிமுகப்பாடல் படத்தில் இடம்பெறுவது திரைப்படக் கலையை ‘மிஸ்யூஸ்’ செய்வதற்கு ஓர் உதாரணம். ஆனால் கறுப்பு வெள்ளை காவிய சினிமாக்களின் கால கட்டத்தில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும்போது அவனைப் புகழ்ந்து பாடல் காட்சி அமைப்பது ஒரு பெரும் வழக்கமாக நிலைபெற்றிருந்தது. அல்லது கதாநாயகனே ஒரு பாடலைப் பாடிக்கொண்டுதான் அறிமுகமாவார்.
ஆனால், வில்லன் கதாபாத்திரத்தைப் புகழ்ந்து, அவனது பெருமைகளைப் பேசும் வகையில் பாடல் காட்சி அமைந்த படம் ‘சம்பூர்ண ராமாயணம்’. வில்லனின் அறிமுகமே ஒரு பாடல் காட்சியின் வாயிலாகத்தான்.
ராமாயணக் கதையில் வில்லன் யார்? ராவணன் தானே? அந்த ராவணன் அறிமுகமாகும் முதல் காட்சியே ஒரு பாடல் காட்சிதான். அவ்வளவு ஏன்? இந்தப் படத்தில் ராமனாக நடிக்கும் என்.டி. ராமா ராவுக்கே பாடல் காட்சி கிடையாது. ராவணனுக்கு மட்டும் தான் பாடல். அதுவும் ஒன்றல்ல மூன்று பாடல்கள்! இதில் இன்னொரு சுவாரசியமான முரண் இருக்கிறது. அந்தப் பாடல்கள் அனைத்தையும் ராவணனுக்காகப் பின்னணியில் பாடியிருப்பவர் ராமன்.
சாதாரண ராமன் இல்லை. ஜெயராமன்!
ஆம்..சி.எஸ். ஜெயராமன் தான் ராவணனாக நடித்திருக்கும் டி.கே. பகவதிக்குப் பின்னணி பாடி இருக்கிறார். ராவணன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே இவர் தான் பாடியிருக்கிறார். ராம - ராவண யுத்தம். முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து ‘இன்று போய் நாளை வா’ என்று மனிதனான ராமனால் அனுப்பி வைக்கப்பட்ட ராவணன், வெறுங்கையோடு இலங்கை திரும்புகிறான்.
எப்படித் திரும்புகிறான்?
அதுவரை கம்பீரமாக நிமிர்ந்தே நின்று பழக்கப்பட்ட அவன், முதல் முதலாக பூதலம் (பூமி) என்னும் நங்கை தன்னையே நோக்கிடப் போர்க்களத்திலிருந்து திரும்புகிறான். அவனது மனநிலையைக் கம்பனின் அடியொற்றி எளிய வார்த்தைகளில் மருதகாசி அற்புதமாக வடிவமைக்க, ‘திலங்’ ராகத்தில் இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் விதமும் அதை சி.எஸ். ஜெயராமன் பாடி இருக்கும் அழகும் அலாதியானவை.
‘இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும்
நிலை இன்றே ஏன் கொடுத்தாய்..’
சிவபெருமான் முன்னால் கசிந்துருகி தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறான் ராவணன். ஒரே வார்த்தையில் இருபொருள் தொனிக்கும் சிலேடை வகையில் மருதகாசி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார்.
சாதாரணமாக ‘மண்மகள்’ என்ற வார்த்தை பூமாதேவியைக் குறிக்கும். ‘நிலம் நோக்கி தலை குனிந்து வரும் நிலையை எனக்கு ஏன் கொடுத்தாய்?’ என்று ராவணன் குமுறுவதாகப் பொதுப்படையாகப் பார்த்தால் அர்த்தம் தொனிக்கும்.
ஆனால் கம்பன், ராவணன் நாணத்தால் வருந்தக் காரணம் என்று சொல்வது எதைத் தெரியுமா? ‘வானவர் சிரிப்பார்கள். மண்ணில் உள்ள அனைவரும் நகைப்பார்கள். தனது கட்டுப்பாட்டில் உள்ள பகைவர்கள் எல்லாரும் தனது தோல்வியைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார்களே’ என்று அதற்கெல்லாம் ராவணன் வருந்தவில்லையாம்.
‘வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் - நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்’
- ‘தான் கவர்ந்து வந்த சீதை ராமனிடம் தான் தோற்றதை அறிந்தால் சிரிப்பாளே’ என்றுதான் அவமானத்தால் புழுங்கினான் ராவணன் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இப்போது மருதகாசியின் பாடல் வரியை மறுபடி பார்த்தால், மண்மகள் என்ற வார்த்தைக்கு ‘மண்ணின் மகள்’ அதாவது பூமாதேவியின் மகளான சீதா தேவி என்ற அர்த்தம் கிடைக்கிறதல்லவா? அதாவது ‘மண்ணின் மகளான சீதாதேவியின் இளக்காரமான நகைக்கும் முகத்தைக் கண்டு மனம் அவமானத்தால் கலங்குகிறதே.
இந்த நிலையை ஏன் கொடுத்தாய்?’ என்று கலங்குகிறான் ராவணன்
பொதுவாக, உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அவமானம் ஏற்பட்டால் அவன் தனக்குள் எப்படி மறுகிப்போவான், தனது சாதனைகளைப் பட்டியல் போடுவதில் தொடங்குவான் அல்லவா? இதில் சரணத்தில் முதல் இரண்டு அடிகளில் அப்படி ராவணன் பட்டியல் போடுவதாகத் தொடங்குகிறார் மருதகாசி.
‘எண்திசை வென்றேனே - அன்று
இன்னிசை பொழிந்துன்னைக் கண்டேனே’
அதற்கு மேல் பேச முடியாமல் அவனது தற்போதைய நிலை மனத்தில் உறுத்த மீண்டும் ‘மண்மகள் முகம் கண்டே’ என்று குமுறத் தொடங்கி விடுகிறான் அவன். அந்தக் குமுறலைப் படத்தைப் பார்க்காமலே துல்லியமாகக் கேட்பவரை உணரவைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் என்றால் அதுதான் கே.வி. மகாதேவன்.
‘எண்திசை வென்றேனே...’ என்ற வார்த்தைகளை அவனது உயர்வைக் காட்டும் விதமாக உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், மெல்ல மெல்லக் கீழிறங்கி கடைசியில் ‘மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்’ என்ற வரிகளுக்கு மீண்டும் வந்து முடிக்கும் போது, அவனது மனக்குமுறலைப் பிரதிபலிக்கும் வண்ணம் மறுபடி உச்சத்துக்கே கொண்டுபோய் நிறுத்திப் பாடலை அப்படியே முடித்திருக்கிறார் மகாதேவன். ‘திலங்’ ராகத்தையே உச்சத்துக்கு ஏற்ற, அவருக்கு இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமனின் குரல்வளம் பேருதவி புரிந்திருக்கிறது.
இன்றளவும் படத்தின் பெயர் சொன்னால் உடனே நினைவுக்கு வரும் பாடலாக ‘இன்று போய் நாளை வாராய்’ பாடல் நிலைத்திருப்பது ஒன்றே பாடலின் பெருவெற்றிக்குச் சாட்சி. நானும் கூட.. இந்த அத்தியாயத்துடன் சென்று. வெகு விரைவில் மீண்டும் இந்து டாக்கீஸ் வாசகர்களைச் சந்திக்க வருவேன்.
தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT