Published : 30 Aug 2019 11:48 AM
Last Updated : 30 Aug 2019 11:48 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ஒரு பாடகனின் இசை

சூப்பர் சிங்கர் 2009 நிகழ்ச்சியில் தனித்த குரலால் வசீகரித்த இளைஞர் அஜீஸ். 2010-ல் வெளியான ‘கோவா’ படத்தில் இடம்பெற்ற ‘இதுவரை’ பாடல் மூலம் அறிமுகமாகி பிஸியான பின்னணிப் பாடகாராக வலம் வந்துகொண்டிருப்பவர். தற்போது இசையமைப்பாளராகவும் பிஸியாகி இருக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்துள்ள ‘சர்பத்’ படத்துக்கு அஜீஸ்தான் இசையமைப்பாளர்.

காதல் கதையான இதில் ஐந்து பாடல்கள். அதில் ஒன்றான ‘கரிச்சான் குயிலே’ என்ற பாடலை அஜீஸே பாடியிருக்கிறார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுபற்றிக் கேட்டபோது “இசைதான் என் ஜீவன். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு மற்ற நான்கு பாடல்களை எப்போது வெளியிடுவீர்கள்” என்று கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார். ஏற்கெனவே ‘பாம்புச் சட்டை’ ‘திரி’, ‘வல்லவனுக்கும் வல்லவன்’ ஆகிய மூன்று சிறிய படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ‘சர்பத்’ தன்னைப் பிரபலமாக்கிவிடும் என்று நம்புகிறார்.


‘அடவி’ மனிதர்களின் மறுபக்கம்!

‘நந்தா’ படத்தில் சிறுவயது சூர்யாவாக நடித்தவர் வினோத் கிஷன். இவர் நாயகனாக நடிக்க, அம்மு அபிராமி நாயகியாக நடித்துவரும் படம் ‘அடவி’. அஜித் நடித்த ‘ஆழ்வார்’, விக்ரம் நடித்த ‘கிங்’, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளரான
ரமேஷ் ஜி இயக்கிவரும் படம். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது “ அடவி என்றால் காடு. காட்டை பூர்வீகமாகக் கொண்டிராத நகரில் வாழும் மக்கள், தங்கள் பேராசைக்காக அதை அழிக்கிறார்கள். காடும் அதில் வாழும் உயிர்களும் அழிவதை வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் அங்கே பழங்குடிகளாக வாழும் மக்கள் இருக்கிறார்கள். அந்தச் சாமானிய மக்களில் சிலரே கதையின் நாயகர்களாக மாறி, அதைத் தட்டிக்கேட்டால் என்ன நடக்கும் என்பதை உண்மையும் கற்பனையும் கலந்து படமாக்கியிருக்கிறோம்” என்கிறார்.


கோலிவுட் வந்த ஹாலிவுட்

அசோக் அமிர்தராஜ், மனோஜ் நைட் ஷியாமளன் தொடங்கி ஹாலிவுட்டில் தடம்பதித்த தமிழர்கள் பலர். இந்த வரிசையில் தற்போது இடம்பிடித்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த டெல் கணேசன். அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் வெற்றிகரமான தொழில் அதிபராக இருக்கும் இவர், ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

வரும் ‘ஹாலோவீன்’ பண்டிகையை ஒட்டி வெளியிட ‘டெவில்ஸ் நைட்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கும் அவர், அதில் புராதன மியூசியம் ஒன்றின் காப்பாளர் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வசித்துவரும் தமிழ் நடிகரான நெப்போலியனை நடிக்கவைத்திருக்கிறார். முழுவதும் ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இசையை, கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினரை சென்னைக்கு அழைத்துவந்து வெளியிட்டிருக்கிறார்.


ஈரானிய சினிமாவிலிருந்து...

ஈரானிய சினிமாக்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தாக்கத்தை செலுத்தி வந்திருக்கின்றன. ஈரானிய இயக்குநர்களான மஜித் மஜிதி, அஸ்கார் பர்கதி ஆகிய இயக்குநர்கள் இங்கே பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். இயக்குநர்களைத் தாண்டி தற்போது நடிகர்களும் தமிழ் சினிமாவுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘கோமாளி’ படத்தைத் தொடர்ந்து, அஹமத் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாகவிருக்கிறார் ஈரானிய நடிகை ஒருவர்.

‘ஜன கண மன’ என்று தற்காலிகமாகத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதில் ஒருவர் தாப்ஸி. மற்றொருவர் ஈரானிய சினிமாக்கள், சில இந்தித் தொலைக்காட்சித் தொடர்கள் வழியாகப் புகழ் பெற்றிருக்கும் எல்நாஸ் நூரூஸி. இதுவரை ஜெயம் ரவி படங்களுக்கு இசை அமைத்திராத ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார்.


சரிவுக்குத் தீர்வு?

தனது நடிப்பில் மூன்று படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததில் கவலை அடைந்துவிட்டாராம் நயன்தாரா. இந்தச் சரிவிலிருந்து மீண்டு எழ பலரிடமும் கதை கேட்டிருக்கிறார். எதிலும் திருப்தி இல்லை என்ற நிலையில் தற்போது மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன், அந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் வழியாகத் தயாரிக்கவும் செய்கிறார் என்கிறார்கள்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான ‘அவள்’ என்ற அமானுஷ்ய திரில்லர் படத்தை இயக்கியவர்தான் இந்த மிலிந்த் ராவ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிலிந்த் ராவ் சொன்ன கதையைக் கேட்டு ‘விருப்பமில்லை’ என்று முன்பு நிராகரித்த கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x