Published : 30 Aug 2019 11:48 AM
Last Updated : 30 Aug 2019 11:48 AM
இப்படி நான் பேசவே இல்லையே, ஆனால் நான் சினிமாவில் பேசும் வசனம் இப்படித்தான் இருக்கும்” என்றார். ‘இது பத்திரிகைத் தமிழ் அம்மா’ என்றேன். “இதோ பாருங்கள் மிஸ்டர் கோபால்.. நான் என் வாழ்க்கைச் சம்பவங்களைத் தெலுங்கில் எழுதி வைத்திருப்பதைப் படிக்கிறேன்”என்று நீளமாக ஒரு வாக்கியம் சொன்னார்.
“இதேபோல்தான் நாங்கள் பேசவும் செய்வோம். தமிழ்நாட்டில் நீங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தனித்தனியே நடை வைத்திருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் காதலர்கள் பேசும் வசனம், இலக்கணச் சுத்தமாக இருக்கிறது. இதைக் கேட்டாலே சிரிப்பு வருகிறது. நிஜத்தில் காதலர்கள் இப்படித்தான் பேசிக்கொள்வார்களா?” என்றார்.
நான் குறுக்கிட்டு,‘ ஆனால் அந்த மாதிரி செயற்கையான தூய தமிழ்கூட உங்கள் வசன உச்சரிப்பிலும் பாட்டிலும் புதுமெருகோடு கேட்கவே இனிமையாக இருக்கிறது. பல வருடங்கள் தமிழ்ப் பயிற்சி இருந்தால்தான் இது சாத்தியம். நீங்கள் தெலுங்குப்பட உலகிலிருந்து தமிழுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்தத் திறமையைப் பார்க்க முடிந்தது. இது எப்படிச் சாத்தியம்?’ என்றேன். நான் எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல் சற்று ஆச்சரியமும் பெருமையும் பொங்க என்னைப் பார்த்தார்.
“அதில் ஒரு ரகசியம் இருக்கிறது!” என்று சொல்லிச் சிரித்தார் பானுமதி. “தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கு மொழியில் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். நான் அப்படியே தமிழில் பேசுவது போலவே பேசிவிடுவேன். ‘அது சரி, ஆனால் தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கில் எழுதுவதற்கு இரண்டு மொழிகளிலும் பாண்டித்யம் இருக்கணுமே!’ என்றேன்.
முகத்தில் எதிர்காலம் காணலாம்
“உண்மைதான். அப்படித் தெலுங்கிலும் தமிழிலும் புலமை பெற்ற ஒருவர் தெலுங்கில் எழுதி, ஏற்றஇறக்கங்களோடு பேசவும் கற்றுக்கொடுத்து உதவினார். திறமைசாலியான அந்த இளைஞர் சுறுசுறுப்புடன் வளையவருவதைப் பார்த்துவிட்டு ஒருநாள் ‘பார்த்துக்கொண்டே இருங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் உங்களைத் தேடிவரப்போகிறது!’ என்றேன் ‘நன்றி அம்மா’என்றார் அவர் பணிவுடன்.
வதனத்தைப் படிப்பது (Face reading) ஒரு கலை.நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களைப் பார்ப்பேன் என்பதைவிட, படிப்பேன் என்பதே சரி. இந்த இளைஞர் முகத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். நான் சொன்னது பலித்தது. பிற்காலத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்த அந்த இளைஞர்தான் இயக்குநர் ஏ. பீம்சிங்.
ஆகா! பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசிதீரும்’, ‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற திரைக்காவியங்களை மறக்க முடியுமா? பீம்சிங்கின் புதல்வரும் இன்றைய தமிழ்சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் திகழும் எடிட்டர் பி.லெனினுடன் அண்மையில் உரையாடிக் கொண்டிருந்தபோது, “அப்பாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராமநாதன் அவரது இயக்கத்தில் வெளிவரவிருந்த ‘பட்டத்துராணி’ என்ற படத்தில் பானுமதியை நடிக்கவைக்க விரும்பினார்.
அப்பா சொன்னார் என்பதற்காகவே படத்தைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் பானுமதி. அந்த அளவுக்கு அப்பாவின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்” என்ற தகவலைப் பகிர்ந்துகொண்டார். இப்போது பானுமதி பீம்சிங் பற்றிக் கூறியபின் ‘லைலா மஜ்னு’ படம் பற்றிப் பகிரத் தொடங்கிய இடத்துக்குத் திரும்புவோம்.
வேண்டா வெறுப்பாக ஒரு கதாபாத்திரம்
“பூனாவிலிருந்து திரும்பிய கையோடு என் கணவர் ‘லைலா மஜ்னு’ படத்தைத் தொடங்கினார். வாஹினி ஸ்டுடியோவில் பாலைவன செட் போடப்பட்டது. பாலைவனச் சோலை, ஒரு பாழடைந்த கட்டிடம், அங்கேதான் லைலாவும் மஜ்னுவும் தினமும் சந்திப்பார்கள். ஈச்ச மரங்கள், ஒரு சிறிய குளம். மணல் அவ்வளவுதான். பாலைவனம் செட் ரெடி. படப்பிடிப்பு இரவில் தான் நடக்கும். இந்தப் படத்துக்கு பி.எஸ். ரங்கா ஒளிப்பதிவு செய்தார். ‘துளசிதாஸ்’ படம் எடுத்துப் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். அவருக்கு எங்கள் படத்தில் வாய்ப்புத் தந்தார் என் கணவர். இது பி.எஸ். ரங்காவின் வாழ்க்கையில் திருப்புமுனையானது.
‘லைலா மஜ்னு’ படப்பிடிப்பு நடக்கும்போதே ‘ரக் ஷ ரேகா’ தெலுங்குப் படத்திலும் நடித்து வந்தேன். நாகேஸ்வரராவும் அஞ்சலிதேவியும் அதில் சக நடிகர்கள். அப்படத்தின் இயக்குநர் பத்மநாபனுடன் தொடக்கத்திலிருந்தே என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இந்தப் படத்துக்காக நான் அணிய வேண்டிய ஆடை, அலங்காரம், ஆபரணங்கள் என்னை எரிச்சலடைய வைத்தன. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மனசுக்குப் பிடித்திருந்தால் இதையெல்லாம் பொருட்படுத்தியிருக்க மாட்டேன்.
ஆனால், மனம் ஒன்றாத கதாபாத்திரம் அது. அலட்சியமாக நடித்துக் கொடுத்தேன். அந்தக் காட்சிளே படத்தில் உச்சக்கட்டமாகப் பேசப்பட்டன. படம் வெளிவந்தபோது வேண்டா வெறுப்பாக நான் நடித்துக் கொடுத்த காட்சிகள் ‘ஆஹா ஓஹோ’ என்று பலராலும் புகழப்பட்டதை என்னவென்று சொல்ல!? படம் நூறு நாட்கள் ஓடியது. அந்தப் படத்தை இன்றுவரை பார்த்ததுகூட இல்லை.
வழித்துணையாக வந்தப் பெண்
‘ரக்ஷ ரேகா’ படப்பிடிப்பின்போது இரவு வீடு திரும்பிய நேரம் தயாரிப்பாளர் அனுப்பிவைத்த கார் தகராறு செய்தது. மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. கார் ஓட்டுநர் தடுத்தும் கேட்காமல் நான் காரைவிட்டு இறங்கித் தலையில் முக்காடிட்டு நடக்கத் தொடங்கிவிட்டேன். சற்றுதூரம் நடந்ததும் ‘அம்மா... அம்மா...’ என்ற குரல் கேட்டது. குரலை வைத்து அது என்னுடன் நடித்த சக நடிகையான சூர்யகாந்தம் என்று புரிந்தது. சூர்யகாந்தம் என்னை அந்தக் கோலத்தில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். நான் நடந்ததைச் சொன்னேன்.
சூர்யகாந்தமும் நானும் பலவிஷயங்களைப் பேசிச் சிரித்தபடி நடந்தோம். என் வீடுவரை பத்திரமாக கொண்டுவந்துவிட்டுச் சென்றார் சூர்யகாந்தம். அவருக்கு என் கணவரிடம் சொல்லி ‘ரத்னமாலா’ படத்தில் கதாநாயகனைச் சீண்டும் குறும்புக்காரப் பெண் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு ‘லைலா மஜ்னு’விலும் ஒரு கேரக்டர் கொடுத்தேன். பரணி பிக்சர்ஸ் படங்களில் அவருக்கு வாய்ப்பு தந்துவந்தேன்.
என்னோடு அன்றொருநாள் இரவில் வீடுவரை துணைக்குவந்த சூர்யகாந்தம் என் எல்லாப் படங்களிலும் எனக்குத் துணையாக வருமாறு பார்த்துக்கொண்டேன். அவரும் எவ்வளவு சின்ன ரோலாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். ‘லைலா மஜ்னு’ படமாக இருந்தாலும் பரணி பிச்சர்ஸ் எடுத்த வேறு படம் சம்பந்தப்பட்ட எந்த வேலையிலும் நான் தலையிடுவதில்லை. சூர்யகாந்தம் போன்றவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதோடு சரி.
வாசனும் சாவித்திரியும்
அதேபோல படத்தில் என் ரோல் பெரியதா, சிறியதா என்று கிஞ்சித்தும் கவலையும் படமாட்டேன். எவ்வளவு சின்ன ரோல் ஆனாலும் நடித்துக் கொடுப்பேன். நாகேஸ்வரராவ் சொல்லுவார். ‘மேடத்துக்குப் பொறாமையோ, குறுகலான மனமோ கிடையாது. அவருக்குக் கொடுக்கப்பட்ட ரோல் எப்படி இருந்தாலும் நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்’.
படப்பிடிப்பின்போது ஒருநாள் முழுவதும் நடித்துக் கொடுத்துவிட்டு இரவிலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது உண்டு. வாக்குக் கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது காப்பாற்றியே தீருவேன். கொஞ்சம்கூடக் களைப்போ சோர்வோ இல்லாமல் நடித்துக்கொண்டே இருப்பேன். இதை வாசன் கூர்ந்து கவனிப்பார். அவருக்குக் கொட்டாவியாக வந்தாலும் நான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஓய்வெடுக்க செல்லவே மாட்டேன். வாசன் களைத்துப்போய் ‘பானுமதி.. இன்றைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்வோம்’ என்பார்.
‘இல்லை சார்... இந்தக் காட்சியை முழுசாக முடித்து விடுவோம்” என்பேன். அவரோ ‘லஞ்ச் பிரேக் வந்துவிட்டதே!’ என்பார். நான் ‘ இல்லை... இல்லை... காட்சி முடியட்டும்” என்பேன் பிடிவாதமாக. அவர் இதைப் பற்றிப் பாராட்டிப் பேசும்போது ‘அசதி என்பது அவள் அகராதியில் இல்லை. நடித்து முடிக்காமல் செட்டைவிட்டு நகரவே மாட்டாள். எத்தனை மணி நேரம் ஆனாலும் நின்றுகொண்டே இருப்பாள். உட்காரவே மாட்டாள். இப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்டை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை. டியூட்டியில் நான் என்னை எமன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பானுமதி எமனியாக இருக்கிறாள்’ என்பார்.
எஸ்.எஸ்.வாசன் வாயால் இப்படி ஒரு பாராட்டைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! அதே வேளை என்னைப் பிடிக்காத வேறு சிலர் திரையுலகில் ஒரு வீண் அபவாதத்தைப் பரப்பத் தொடங்கினார்கள். ‘பானுமதி ஆணவம் பிடித்தவர். யாராக இருந்தாலும் தூக்கியெறிந்து பேசுவார், ‘அவரை வைத்துப் படம் எடுப்பது கஷ்டம்’ இப்படி.
அப்போது ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு பிரச்சினையால் அந்தப் படத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதுவரை நான் நடித்த காட்சிகளை ‘ரஷ்’ போட்டுப் பார்த்தே சக நடிகர்கள் என் நடிப்பு அபாரமாக இருந்தது என்றார்கள். ஆனால் விதியை வெல்ல யாரால் முடியும்?
நான் மிஸ்ஸியம்மாவில் தொடர்ந்து நடித்திருந்தால் திரையுலகத்துக்கு சாவித்ரி என்ற ஒரு திறமைசாலியான கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார்! ‘மிஸ்ஸியம்மா’ மிஸ் ஆனதில் வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் சாவித்திரியின் வருகைக்கு நான் வழிவிட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும்!” என்று நிறுத்தியவரிடம் ‘மிஸ்ஸியம்மா படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது மேடம்?’ என்றேன். ‘அது பற்றி நாளை பேசுவோம்’ என்றார். நீங்கள் அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்கள்தானே..?
- தஞ்சாவூர்க் கவிராயர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT