Published : 23 Aug 2019 12:47 PM
Last Updated : 23 Aug 2019 12:47 PM
வா.ரவிக்குமார்
ஆகஸ்ட் 29: எம்.கே.ராதா நினைவு தினம்
மன்னரின் வம்சம் இதோடு அழிந்தது… என்று வில்லன் நடிகர் கூற, இரண்டு கைகளிலும் பெரிய கத்தியைச் சுற்றியபடி “யார் சொன்னது?’’ என்பார் எம்.கே.ராதா. `அபூர்வ சகோதரர்கள்’ (1949) படத்தின் முடிவுக் காட்சி இது. இந்தக் காட்சியில் அப்பாவின் இந்த வசனத்துக்குத் திரை கிழியும் அளவுக்குக் கைதட்டல் அரங்கை அதிரவைக்கும்” என்கிறார் ராதா விஜயன். நாடகத் துறையிலிருந்து வெள்ளித் திரையில் உச்சம் தொட்ட நடிகர்களில் அந்தக் கால சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே.ராதா.
அவருடைய இளைய மகன்தான் ராதா விஜயன். திரைத் துறையிலும் திரைக்கு வெளியேயும் எம்.கே. ராதா நடிப்பில் மிகப் பெரிய ஆளுமையாக அந்நாளில் இருந்தவர். சிங்கப்பூரில் மிர்ரா ஃபைன் ஆர்ட்ஸ் இசைப் பள்ளியை 25 ஆண்டுகளாக நடத்திவருபவர் கிதார் கலைஞர் ராதா விஜயன். சிங்கப்பூர் வரலாற்றிலேயே முதன்முதலாக அங்கிருக்கும் குழந்தைகளை அகபெல்லா பாணியில் சேர்ந்திசையில் பாரதியின் பாடல்களைப் பாடவைத்தவர் ராதா விஜயன் என்று பதிவாகியிருக்கிறது.
சுதர்சனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன், வி.குமார், இளையராஜா, கங்கை அமரன் எனப் பல இசையமைப்பாளர்களிடம் கிதாரிஸ்டாகப் பணிபுரிந்திருக்கிறார் ராதா விஜயன். தன்னுடைய தந்தை எம்.கே. ராதாவைப் பற்றிய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து... தமிழ்க் கதாநாயகர்களில் முதன்முதலாக இரட்டை வேடங்களில் அப்பா நடித்த படம் `அபூர்வ சகோதரர்கள்’. அந்தப் படத்தில் விஜயன், விக்ரம் என்று இரட்டை வேடங்களில் அப்பா நடித்திருப்பார். அதில் அப்பா ஏற்று நடித்திருந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரான விஜயனே எனக்குப் பெயரானது.
குதிரைச் சவாரி; கத்திச் சண்டைப் பயிற்சி
எம்.ஜி.ஆர்., சிவாஜி, நம்பியார் போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் எல்லோரும் வீட்டுக்கு வருவார்கள். எம்.ஜி.ஆர். சித்தப்பா, சிவாஜி சித்தப்பா, நம்பியார் மாமா.. என்றுதான் அழைப்போம். அப்படியொரு குடும்ப நட்பை எல்லோரிடமும் கொண்டிருந்தார் அப்பா. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., நம்பியார், என்னுடைய அப்பா மூவருமே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதிகாலையிலேயே அப்பா கடற்கரைக்குச் சென்று குதிரைச் சவாரி செய்வார்.
அதன்பின் ஒருமணி நேரம் கத்திச் சண்டைப் பயிற்சி செய்வார். இந்த முறையான பயிற்சியால்தான், தமிழ்த் திரையில் முதன்முதலாக இரண்டு கத்திகளை வைத்து, சண்டைக் காட்சிகளில் அவரால் நடிக்க முடிந்தது.
விவசாயத்தை மையப்படுத்திய படம் ஒன்றில் நெல்மூட்டையை முதுகில் தூக்கிப் போகும் ஒரு காட்சியைப் படம்பிடிக்க, மூட்டைக்குள் பஞ்சை அடைத்து எடுக்கலாம் என்றனர். அதற்கு அப்பா நெல்லையே நிரப்புங்கள். அப்போதுதான் அந்தக் காட்சி நம்பகத்தன்மையோடு இருக்கும் என்று நெல்மூட்டையைத் தூக்கியே நடித்திருக்கிறார்.
நேரத்தின் அருமை தெரிந்தவர்
கச்சேரி, ஒலிப்பதிவு எதுவாக இருந்தாலும் குறித்த நேரத்துக்கு முன்பாகவே என்னை அந்த இடத்துக்குச் சென்றுவிடு என்பார். ``ஒலிப்பதிவுக் கூடத்துக்கு கால்ஷீட் நேரத்துக்கு அரைமணி நேரம் முன்னதாகவே சென்றுவிடு… உன்னுடைய நேரத்தைத் தயாரிப்பாளர் வாங்கியிருக்கிறார். அவருடைய காசை வீணடிக்காதே” என்பார்.
`நவாப்’ ராதா
மேஜர் சுந்தர்ராஜன் குழுவினரோடு ஒருமுறை வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்தேன். அப்போது அவர் என்னுடைய தந்தைக்கு `நவாப்’ ராதா என்னும் புகழ் எப்படி வந்தது என்று கூறினார். என்னுடைய அப்பா ராதா ஒரு நாடகத்தில் நவாப் வேடம் ஏற்றிருந்தாராம். நாடகத்தின் முடிவில் உயரமான சிம்மாசனத்திலிருந்து நவாப் படிக்கட்டில் உருண்டு விழுவது போன்ற காட்சியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விழுவாராம். இதைப் பார்ப்பதற்கென்று கூட்டம் கூடுமாம். அதிலிருந்தே அவரின் பெயரோடு `நவாப்’ சேர்ந்துகொண்டது என்றார்.
நன்றி மறக்காத குணம்
அப்பாவிடம் நான் பார்த்து வியந்த குணங்களில் ஒன்று, அவருடைய நன்றி மறக்காத குணம். ஜெமினி பிக்சர்ஸின் முதன்மை நடிகராக சந்திரலேகா போன்ற எண்ணற்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் அப்பா. `ஜெமினி ’ எஸ்.எஸ்.வாசன் மீது அப்பாவுக்கு அளவு கடந்த பக்தியும் பாசமும் இருந்தன. வாசன் அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் வீட்டுத் திருமணத்துக்கு அப்பா சென்றிருக்கிறார். மணமக்களை வாழ்த்திவிட்டு, அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அப்பாவை வழியனுப்ப வந்த வாசனின் மகன் பாலசுப்பிரமணியன், “எங்களின் வீட்டுத் திருமணத்துக்கு வந்துவிட்டுச் சாப்பிடாமலேயே போகிறீர்களே..” என்றார். அதற்குப் பதிலாக அவரிடம் அப்பா, “எங்கள் வீட்டில் நாங்கள் சாப்பிடுவதும் உங்கள் தந்தை கொடுத்ததுதான்!” என்று சொல்லியிருக்கிறார்.
பிறர் செய்த நன்றியை மறக்காத குணத்தைக் கொண்டிருந்த அப்பா, பலருக்கும் திரைத் துறையில் நிறைய உதவியிருக்கிறார். அப்படி உதவி பெற்றவர்கள் தங்களின் நன்றியை வெளிப்படுத்த முயலும்போது, அதையும் எந்தக் காலத்திலும் அப்பா ஏற்றுக் கொண்டதில்லை. கடைசிவரையில் அப்பா யாரிடமும் எந்த உதவியையும் கேட்டதே இல்லை. எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன் அப்பாவைப் பார்க்க வந்தார். `உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். அதை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை’ என்று எம்.ஜி.ஆர். என்னுடைய அப்பாவிடம் சொன்னார். அதற்கு அப்பா, `தம்பி, நீங்கள் இவ்வளவு உயரிய பதவிக்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய பிள்ளைகள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கின்றனர்’ என்றார்.
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT