Published : 16 Aug 2019 09:57 AM
Last Updated : 16 Aug 2019 09:57 AM

தேசிய திரைப்பட விருதுகள் 2019: விடுபட்ட படங்கள் உணர்த்தும் செய்தி!

குணால் ரே

திரைப்படக் கலையை மேன்மையுறச் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டவை தேசிய திரைப்பட விருதுகள். 2019 ஆகஸ்ட் 9 அன்று அறிவிக்கப்பட்ட 66-வது தேசிய திரைப்பட விருதுகள் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளிலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது கலவையான உணர்வுகளையே ஏற்படுத்தியுள்ளன. திரைப்படங்களின் தரத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட அளவுகோல்களை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றனவா என்று யோசிக்கத் தோன்றுகிறது. விருதுகள் குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு ஆண்டும் கீழிறங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகளைப் பொறுத்தவரை ‘பதாய் ஹோ’ படத்துக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அது மைய நீரோட்ட பாலிவுட் படங்களின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதுவரை பாலிவுட் விவாதித்திராத சில விஷயங்களைத் தொட்டது. பெரும்பாலும் இந்திப் படங்களில் அப்பா -அம்மா கதாபாத்திரங்கள் துணைக் கதாபாத்திரங்களாகச் சுருக்கப்பட்டுவிடுவர். ஆனால் ‘பதாய் ஹோ’வில், தங்கள் மூத்த மகனின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள இணையரின் காதலுக்கும் விருப்பங்களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தன. அந்தத் தந்தை தன் மனைவியைப் பார்த்து காதல் கவிதைகளைப் பாடுகிறார். அவர்களுக்கிடையிலான தாம்பத்ய உறவு எந்தச் சுணக்கமும் இல்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கு முன் இந்தி சினிமாவில் இப்படியெல்லாம் பார்த்திருக்கிறோமா என்ன?
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்த ஆயுஷ்மான் குரானா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற இருவரில் ஒருவர். இவரது அறிமுகப் படமான ‘விக்கி டோனரி’ல் தொடங்கி, அண்மையில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ வரை பல படங்களில் வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்திருக்கிறார். இவ்வாறு சில படங்களுக்கும் கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதைப் பாராட்டினாலும் உண்மையில் இவை மட்டும்தான் 2018-ல் வெளியான சிறந்த படைப்புகளா?

புறக்கணிக்கப்படத் தமிழ், மலையாளப் படங்கள்

தேசிய விருதுகளைப் பெற்ற படங்களைத் தாண்டி, 2018-ல் தமிழிலும் மலையாளத்திலும் இந்திய சினிமாவின் பல துணிச்சலான முயற்சிகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில், சாதி ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துக்காட்டும்விதமாக, மற்ற அனைவருக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தி, சாதிக் கொடுமைகளைக் களைய அனைவரையும் அது குறித்த உரையாடலுக்கு அழைத்தது மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’.

வட சென்னை மக்களின் வாழ்க்கையை, அங்கு உருவாகிவந்த ரவுடியிஸத்தை, அதைப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல் கணக்குகளை அபாரமான திரைமொழியுடன் பேசியது வெற்றிமாறனின் ‘வட சென்னை’. மும்பை தாராவியில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் நில உரிமையைப் பேசியது பா.ரஞ்சித்தின் ‘காலா’. விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில், மலைப் பகுதிகளில் வாழும் நிலமற்ற கூலித் தொழிலாளிகளின் அசலான வாழ்வியல் பதிவான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகியவை எந்த விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மலையாளத்தில் ஜக்காரியா முகம்மதுவின் ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’, கால்பந்து விளையாட்டு மீதான கேரள மக்களின் காதலை மையமாகக் கொண்டது. நைஜீரியாவிலிருந்து கேரளத்தின் ஒரு குக்கிராமத்துக்கு வந்து சேரும் கால்பந்து வீரரைச் சுற்றி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளைப் பேசிய இந்தப் படம், மாநில மொழிகள் பிரிவில் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. ஆனால் இது, மொழி எல்லையைத் தாண்டிய அங்கீகாரத்துக்கு உரியது.

பொதுவாக இந்தியாவில் உருவாகும் விளையாட்டு சார்ந்த படங்கள் தீவிரமான தேசியவாதத்தை முன்வைப்பவை. வறுமையிலிருந்து வளமைக்கு உயர்பவர்களின் கதையைப் பேசுபவை. வலியவரே வாழ்வார் என்ற கருத்தாக்கத்துக்கு வலுவூட்டுபவை. ஆனால் ‘சூடானீஸ் ஃப்ரம் நைஜீரியா’ இதுபோன்ற மரபுகளை எல்லா வகைகளிலும் உடைத்திருந்தது. மக்களிடம் ஊறியிருந்த கால்பந்து விளையாட்டைப் படம்பிடித்துக் காட்டியது. இது தவிர லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் ‘ஈ.ம.யா’, அமல் நீரத்தின் ‘வரதன்’, பி.அஜித்குமாரின் ‘ஈடா’ போன்ற படங்கள் புதுமையான கதைகளையும் மனதைக் கவரும் நடிப்புகளையும் கொண்டிருந்தன. திரை மொழியின் புதிய சாத்தியங்களையும் திறந்துவைத்தன. இப்படிப்பட்ட படங்கள், விருதுகள் பட்டியலில் விடுபட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

விருதுகளைத் தாண்டி

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மைய நீரோட்ட அரசியல் பார்வையிலிருந்து விலகிச் செல்லும் படங்கள் திரைப்படத் துறைக்கான முக்கிய விருதுப் பட்டியல்களில் இடம்பெறாமல் போவது ஒரு போக்காகவே உருவாகிவிட்டதாகத் தோன்றுகிறது. மிகை தேசியப் பெருமிதத்தை முன்வைக்கும் ‘உரி’, ‘பத்மாவத்’ போன்ற படங்களுக்கு விருது அளிக்கப்பட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் படைப்பாளிகள் விருதுகளுக்காக மட்டும்தான் படம் எடுக்க வேண்டுமா என்ன? படங்கள் அவை கூறிய கதைகளுக்காக நினைவுகூரப்படுகின்றனவே தவிர, அவை பெற்ற விருதுகளுக்காக அல்ல. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள சில திரைப்படங்கள் அவற்றின் உள்ளடக்கம், உருவாக்கம் சார்ந்த சிறப்புகளுக்காகக் கால எல்லைகளைக் கடந்து எப்போதும் பார்க்கப்படும். விருது கிடைக்கிறதோ இல்லையோ, திரைப்படங்கள் மாறுபட்ட கதைகளையும் குரல்களையும் பதிவுசெய்துகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் பன்மைத்துவம்தான் நம் ஆழமான பலம்.

(சுருக்கமாகத் தமிழில் - கோபாலகிருஷ்ணன்.
தமிழ்ப் படங்கள் பற்றிய தகவல்களைக் கட்டுரையில் இணைத்தவர் மொழிபெயர்ப்பாளர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x