Published : 09 Aug 2019 11:30 AM
Last Updated : 09 Aug 2019 11:30 AM

மற்றும் இவர்: அத்தனை எளிதல்ல; அம்மா வேடம்!

டி. கார்த்திக்

தற்காலத் தமிழ் சினிமாவில் ‘ஸ்வீட் மம்மி’கள் என்றால், வெகுசிலரே சட்டென நினைவுக்கு வருவார்கள். அனுபமா குமாரும் அவர்களில் ஒருவர். அண்மையில் வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு 2’ படத்தில் நாயகன் விக்ராந்தின் வெள்ளந்தியான அம்மாவாக நடித்திருந்தார். நாற்பத்தைந்து வயதாகும் அனுபமாவுக்கு மாடல், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர் எனப் பல முகங்கள் உண்டு.

அனுபமாவின் சொந்த ஊர் கோவை. அவருடைய அப்பா ராணுவத்தில் இருந்ததால், சண்டிகர், அஸ்ஸாம், டெல்லி என குடும்பம் வட இந்தியாவில் வலம் வந்ததில் டெல்லியில் பள்ளிக் கல்வியை முடிந்து இளங்கலையில் ஆங்கில இலக்கியத்தைக் கற்றிருக்கிறார். படித்துக்கொண்டிருக்கும்போதே யு.ஜி.சி. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க, அப்போது முதல் தொற்றிக் கொண்டது மாஸ் மீடியா மீதான மோகம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா நடிப்பின் மீதும் நாட்டம் வந்துவிட ‘உன்னை தொலைக்காட்சிக்கு அனுப்பியதே பெரிய விஷயம்’ என பெற்றோர் அதற்குத் தடைபோட்டுவிட்டார்கள்.

நடிப்பு ஆசையால் டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றி அனுபமா, அங்கே விளம்பரப் படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள, அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசத் தொடங்கியது. பிஸியான மாடலாக சுமார் 500 விளம்பரப் படங்களில் நடிக்க அவரது முகம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. அப்போது சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், பெற்றோர் தங்கள் 144 தடை உத்திரவில் உறுதியாக இருக்க, ‘போனால் போகட்டும் போடா’ என்ற மனநிலையுடன் சினிமா கனவை மூட்டைகட்டி வைத்தார் அனுபமா.
அப்படிப்பட்டவருக்கு திருமண வாழ்க்கை வரமாக அமைந்தது.

கணவரின் ஊக்குவிப்பால் ‘இஷ்கியா’ என்ற இந்திப் படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமனார். இந்தியில் தொடங்கிய அவருடைய சினிமா வாழ்க்கை தமிழுக்கு எப்படி மடை மாறியது?
“சேரன் இயக்கத்தில் 2009-ல் வெளியான ‘பொக்கிஷம்’தான் என்னுடைய முதல் தமிழ் படம். அந்தப் படத்தில் 65 வயது மூதாட்டி வேடத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 35 வயதுதான். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்த கதாபாத்திரம் இது” என்று தமிழில் அறிமுகமான கதையைச் சொல்லும் அனுபமா, அதன்பின் தமிழ் சினிமாவின் அழகான அம்மாவாக அதே புன்சிரிப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

“ அம்மா, குணச்சித்திரம் என கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் கதையைக் கேட்காமல் நடிக்க மாட்டேன். 25 வயது கர்ப்பிணி தொடங்கி குடுகுடு கிழவி வரை விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன்” என்கிறார்.
சேரனின் ‘பொக்கிஷ’த்துக்குப் பிறகு ‘அய்யனார்’, ‘ஆடுபுலி’, ‘வம்சம்’, ‘துப்பாக்கி’, ‘மீகாமன்’ , ‘நீர்ப்பறவை’, ‘மூடர்கூடம்’,

‘நீதானே என் பொன் வசந்தம்’ எனத் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’, ‘வெண்ணிலா கபடிக் குழு 2’ என இவரது பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாம் அம்மா வேடங்களே. உங்களைவிட வயது அதிகமுள்ளவர்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டால், வெடித்துச் சிரிக்கிறார்.

“என்னைவிட அதிக வயதுள்ள நாயகன்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது சிரிச்சுக்குவேன். படப்பிடிப்பிலேயேகூட நடிக்குறவங்க கலாய்ப்பாங்க. ஆனால், இது எல்லாமே இயக்குநர், “ஷாட் ரெடி” என்று சொல்லும்வரைதான். நடிக்கக் தொடங்கிவிட்டால், கதாபாத்திரத்தில் மட்டும் மனம் லயித்திருக்கும். எதிரே நடிப்பவர் என் மகன் என்ற நினைப்பு வந்துவிடும். உடல்மொழியும் மாறிவிடும்.” என்று யதார்த்தமாகப் பேசுகிறார் அனுபமா.

அம்மா போன்ற குணச்சித்திரக் கதாபாத்திங்களில் பெரிய வித்தியாசம் காட்ட வாய்ப்பிருக்காது. ஆனால், ‘வம்சம்’ படத்தில் இரண்டு மாறுபட்ட வயதுகளில் தோன்றியதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். “அந்தப் படத்தில் 25 வயசுல ஒரு தோற்றம். 45 வயசுல ஒரு தோற்றம். ஒரு தோற்றத்துக்கு ஒல்லியாக வேண்டியிருந்தது. இன்னொரு தோற்றத்துக்கு குண்டாக வேண்டியிருந்தது. குண்டாக நிறையச் சாப்பிட்டேன். ஒல்லியாக ஒரு மாசம் அவகாசம் கொடுத்தார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்தேன். பட்டினி கிடந்தேன். மேக்-அப்பிலும் மெனக்கெட வேண்டியிருந்தது.” என்று ‘வம்சம்’ அம்மாவின் இரு பரிமாணம் பற்றி விவரிக்கிறார் அனுபமா.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட இவர், தற்போது ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தன்னுடைய 14 வயது மகனுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால், கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் சினிமாவைத் தாண்டி ‘இணையத் தொடர், ஒன்றிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். “அடுத்து என்ன செய்வோம் என்பது நம் கைகளில் இல்லை” எனும் அனுபமாவுக்கு இயக்குநராகும் ஆசையும் இருக்கிறது. “எதிர்காலத்தில்
அதையும் பார்ப்பீர்கள்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

ரோல் மாடல்?

ஸ்ரீவித்யா.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

‘பாபநாசம்’ படத்தின் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் போன்ற நுணுக்கம் நிறைந்த காவல் அதிகாரி.

அம்மா நடிகர்களில் உங்களுக்குப் போட்டி?

சிவரஞ்சனி. ரொம்ப அழகானவர். பிரமாதமாக நடிக்கக்கூடியவர். அவரே என் போட்டியாளர்.

‘மை சன் இஸ் கே’?

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற படம். பட ரிலீஸுக்காகக் காத்திருக்கிறேன்.

அடுத்த படங்கள்?

4 படங்கள் வர இருக்கின்றன. இதில் நானும் கிஷோரும் இணைந்து தயாரித்த ‘கதவு’ என்ற படமும் அடக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x