Published : 09 Aug 2019 10:11 AM
Last Updated : 09 Aug 2019 10:11 AM
டோட்டோ
ஃபகத் பாசில் பிறந்த நாள்: ஆக. 8
அப்படியொரு முகத்தை வைத்துக்கொண்டு எப்படி இவரால் வில்லத்தனம் செய்ய முடிகிறது என்று ‘வேலைக் காரன்’ படத்தில் ஃபகத் பாசிலைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் வேம்புவின் கணவன் முகிலாக வந்தபோது, ‘இவர் வேற லெவல் நடிகர்ப்பா...’ என்றார்கள். ஆனால், ஃபகத் பாசிலை மலையாளப் படங்களில் பின்தொடர்ந்து வரும் ரசிகர்களோ, ‘தமிழில் அவருக்குப் போதுமான தீனி கிடைக்கவில்லை’ என்றார்கள்.
“நாம் எங்கே தோற்கிறோமோ, அங்கேதான் நம்மைச் சரிசெய்யத் தொடங்குகிறோம்”என்று கூறியிருக்கும் ஃபகத், வணிகத் தோல்விகள் தனக்குள் இருக்கும் நடிகனைப் பலவீனப்படுத்திவிட முடியாது என்று நம்பும் நடிகர். மோகன்லால், நதியா, ஷாலினி ஆகியோரைத் திரைக்கு அறிமுகப்படுத்திய பிரபல மலையாள இயக்குநர் ஃபாசிலின் மூத்த மகன்.
எல்லா இயக்குநர்களையும் போல 2002-ல் ‘கையெத்தும் தூரத்து’ என்னும் படத்தில் ஃபகத்தை அறிமுகம் செய்தார் ஃபாசில். படத்தின் தோல்வியும் விமர்சனங் களும் 19 வயதான ஃபகத்தின் திரைப்பயணம் தொடர்வதைக் கைக்கு எட்டாத தூரமாகிவிட்டன. பின்னர், அமெரிக்காவின் மியாமி நகரத்தில் பொறியியல் படிக்கச் சென்று, அது பிடிக்காமல் பின்னர் தத்துவம் படித்துத் திரும்பினார். ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2009-ல் ‘கேரள கஃபே’ படத்தில் நான்காம் கதையான ‘மிருத்யுஞ்சயம்’ குறும்படத்தில் நடித்தார்.
வினித் ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து அர்ஜுன் என்னும் சுயநலம் கொண்ட பணக்காரத் தொழிலதிபராக 2011-ல் நடித்த ‘சப்பா குரிஷு’படம் கவனிக்கப் பட்டது. எந்தக் கதாநாயகனும் எளிதில் ஏற்கத் துணியாத எதிர்மறை நாயகனாக ‘22 ஃபீமேல் கோட்டயம்’, சந்தர்ப்பவாத நாயகனாக ‘டாக்டர் அருண் குமார்’ கதாபாத்திரத்தில் வந்த ‘டயமண்ட் நெக்லஸ்’ ஆகிய இரு படங்களும் ஃபகத் எனும் நடிகரை மலையாளத் திரையுலகில் உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
பலவித வண்ணங்கள்
அன்னாவை உருகி உருகிக் காதலிக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ரசூலாக (அன்னயும் ரசூலும்), குழம்பிய மனநிலை கொண்ட கதாசிரியர் பிரேமனாக (நத்தொலி ஒரு செறிய மீனல்லே), தேவாலயத்துக்கு கிளாரினெட் இசைக்கருவியை வாசிக்கும் சாலமனாக (ஆமென்), ஒரு அமானுஷ்யப் பெண்ணை மணந்த, சிதைந்த முகம் கொண்ட கட்டிட நிபுணர் ஸ்ரீனியாக (அகம்), ஈராக் தூதரக அதிகாரியாக (டேக் ஆஃ ப்), ஒரே இரவில் பல நிகழ்வுகளை எதிர்கொள்ளும் தொழிலதிபர் அஜ்மலாக (5 சுந்தரிகள்), ஜீனியஸ் கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோவாக (ஆர்டிஸ்ட்), பைக் ரேசர் தாஸாக (பெங்களூர் டேஸ்), குறுக்குவழியில் வைரம் தேடும் சிபியாக (கார்பன்), மனைவியைக் காப்பாற்றப் போராடும் அபி மேத்யுவாக (வரதன்) எனக் கடந்த எட்டு ஆண்டுகளில் பலவித வண்ணங்களில் இவர் நடித்துக் குவித்த கதாபாத்திரங்கள், மலையாள ரசிகர்களிடம் மிக நெருக்கமாக உரையாடிக்கொண்டிருப்பவை.
திரையில் தன் இருப்பை போகிற போக்கில் பார்வையாளர்கள் கடந்துசென்றுவிட ஃபகத் அனுமதிப்பதில்லை. தனது நடிப்பின் நுட்பங்களை மீண்டும் நினைவுகூர்ந்து சிலாகிக்க வைத்துவிடும்படியான கதாபாத்திரங்களைக் குதூகலத்துடன் ஏற்றுக்கொள்வதில் மலையாளக் கரையோரத்தில் முக்கிய நடிகராகியிருக்கிறார். அந்த வகையில் இவரின் முக்கிய திரைப்பிம்பங்களாக ஆட்டோ ஓட்டுநர் ரசூல் (அன்னாயும் ரசூலும்), இடுக்கியில் ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் சிறிய பிரச்சினையில் சிக்கிய சாதாரண ஒளிப்படக் கலைஞன் மகேஷ் (மகேஷிண்டே பிரதிகாரம்), ஒரு அழுத்தமான சிறு திருடன் பிரசாத் (தொண்டி முதலும் திருக் சாட்சியும்) ஆகியவை.
திருடன் பிரசாத்தாக வெறும் பார்வை நடிப்பிலேயே தங்கச் சங்கிலியைக் களவாடும் காட்சியில் தொடங்கி, படத்தின் வேறு எந்த ஒரு காட்சியிலும் ஒரு நட்சத்திர நடிகன் நினைவுக்கு வரவே இல்லை என்பதில் ஃபகத்தின் நடிப்பின் சில துண்டுகளை நாமும் ரசித்துத் தெரிந்துகொள்ளலாம்.
நடிகர்களை ரசிக்கும் நடிகர்
இதுவரையிலான இவரது நடிப்பின் உச்சம் அல்லது கதாபாத்திரமாக சிறந்தது என்று ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தைச் சொல்ல வேண்டும். தீர்மானிக்க முடியாத தன்மை கொண்ட கதாபாத்திரமாக, மீசையைத் திருத்தி ‘ஐ ம் எ கம்ப்ளீட் மேன்’ என்று கூறும் அறிமுகப் படலத்தில் தொடங்கி, உச்சக்கட்ட காட்சியில் மூலையில் கதறி அழும் குரூர ஆச்சரியம்வரை ஷம்மியாக வாழ்ந்துகாட்டி, தனது முந்தைய கதாபாத்திரங்களை முந்தியிருந்தார். நடிப்பில் மோகன்லாலைக் குறிப்பிட்டும், “பத்து ஃபகத் சேர்ந்தாலும் ‘கம்மட்டிப் பாடம்’ விநாயகனுக்கு ஈடுகொடுக்க முடியாது ”என்று சொல்லி தனக்குப் பிடித்தமான நடிகர்களை ஆழ்ந்து ரசிப்பதிலும் ஆச்சரியப்படுத்தும் நடிகராக இருக்கிறார் ஃபகத்.
“எந்த நடிப்புப் பயிற்சிக்கும் நான் போனதில்லை, ஏற்கும் கதாபாத்திரத்தை பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வேனே தவிர, எனது படங்களின் திரைக்கதைகளைப் படித்ததில்லை” எனப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் ஃபகத், தன் மீது நட்சத்திர நிழல் படியாமல் பார்த்துக்கொள்ள விதவிதமான கதாபாத்திரங்களை நாடுவதை சிறந்த உத்தியாகக் கடைப்பிடிக்கிறார். ரசிகர் மன்றங்கள் வேண்டாம், பேட்டிகள் கூடாது, சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லிக்கொண்டிருப்பது ஆகியவை தனக்குத் தேவையற்றவை எனக் கருதுகிறார் ஃபகத் பாசில்.
‘தொண்டி முதலும் திருக் சாட்சியும்’ படத்தில் நடித்தமைக்காகச் சிறந்த துணை நடிகருக்கான குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, விழாவில் விருதைக் குடியரசுத்தலைவர் வழங்கப் போவதில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, தார்மிகக் கோபத்துடன் விருதை வாங்காமல் ஊர் திரும்பிய தென்னகக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.
தொடர்புக்கு: tottokv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT