Published : 02 Aug 2019 12:31 PM
Last Updated : 02 Aug 2019 12:31 PM

திரைப் பார்வை: இரண்டாம் இடத்தில் காதல்! (டியர் காம்ரேட் - தெலுங்கு)

டோட்டோ 

வியாபாரத்தை முன்னிறுத்திப் படைக்கப்படுபவை இந்திய வெகுஜன சினிமாக்கள். ‘காதலுக்கு மரியாதை’ -‘கண்ணுக்குள் நிலவு’, ‘சின்ன தம்பி’- ‘கிழக்குக் கரை’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ -  ‘உயிரிலே கலந்தது’  என்ற வரிசையில் வெளியான  இணைப்படங்களுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு.  

முதலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே நட்சத்திர ஜோடியை வைத்து  இரண்டாம் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கறுப்பு வெள்ளைக் காலம் தொடங்கி எல்லா மொழிகளிலும் இந்த வியாபார உத்தி சினிமா வியாபாரிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘டியர் காம்ரேட்’ இத்தகைய வசூல் அறுவடையை எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட படம். வெறும் ரூ.6 கோடி முதலீட்டில் கடந்த சுதந்திர தினத்தன்று  வெளிவந்து சுமார் ரூ.130 கோடி வசூல் செய்தது ‘கீத கோவிந்தம்’ என்ற தெலுங்குப் படம்.

அப்படத்தின் பாடல்களும் வியாபாரமும் முதன்மை ஜோடியின் ரசவாதமும்  தெலுங்குத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தன. இந்த வியாபாரத்தை இன்னும் விரிவாகச் செய்திட, நேரடியாகவும்  மற்ற தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் ‘டியர் காம்ரேட்’ வெளியாகியிருக்கிறது.  

காக்கிநாடா நகரத்தில் புகழ்பெற்ற, சமரமற்ற கம்யூனிசச் செயற்பாட்டாளராக இருந்து, தற்போது முதுமையின் மடியில் வாழ்ந்துகொண்டிருப்பவர் சாருஹாசன். கல்லூரி மாணவரான பாபி என்ற சைதன்யாவின் தாத்தா. அவர் மேலுள்ள ஈர்ப்பால், அவரைப் போலவே , எதற்கும் துணிந்து தைரியமாகப்  போராடும் மாணவர் தலைவராக இருக்கிறார் பாபி. இவருக்கும் கிரிக்கெட்டே வாழ்க்கை என நினைத்து வாழும் லில்லி  என்கிற அபர்ணா தேவிக்கும் இடையிலான நிகழ்வுகள், பிரச்சினைகள் அவற்றுக்கு மத்தியில் மலர்ந்த காதல், அதன் நீட்சி ஆகியவைதான் கதை.
கௌரவத் தோற்றத்தில் வந்தது  தவிர்த்துப் பார்த்தால் விஜய் தேவரகொன்டாவுக்கு இது 11-ம் படம்.

ராஷ்மிகாவுக்கு 8-ம் படம். அதீதக் கோபம், திமிர், தாடி, மென் காதல், முத்தம், அடிதடி, புகை, குடி, தன்னை மாற்றிக்கொள்ளத் தவிப்பது  என ஏற்கெனவே பழகிப்போன ஒரு கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா வெகுநிறைவாகச்  செய்திருக்கிறார்.  ‘அர்ஜுன் ரெட்டி’யில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் நிழல் இதிலும் தொடர்கிறது. இந்தப் படத்தில் சற்றுக் கூடுதலாக, கதையின் பின்பகுதியில் கதாநாயகிக்குச் சகஜமாக இடம் கொடுத்துவிட்டு நகர்ந்து நிற்கும்போது பாபி வெறும் ‘அர்ஜுன் ரெட்டி’ அல்ல என்பது ஈர்ப்புடன் பதிவாகியிருக்கிறது.

ஒரு காலத்தில் அமிதாப் பச்சனுக்குப் பொருந்திப்போன கோபக்கார இளைஞன் கதாபாத்திரங்கள்  இவருக்கும் எல்லாப் படங்களிலும் பொருத்திப்போகின்றன. ஆச்சரியகரமாக, லில்லியாக வரும் ராஷ்மிகாவுக்கு நடிக்க அதிகம் வாய்ப்புள்ள கதை என்பதால் அதைக் குறைவில்லாமலும்  ஒப்பனையில்லாமலும்  செய்திருக்கிறார்.  கதையின் பாதியில் வரும் குணநலன் மாற்றங்கள், ஒரு திருமணத்தில் சந்தர்ப்பமாக வெளிப்படும் காதல், இழையும் அன்னியோன்யம் என விஜய்-ராஷ்மிகாவின் உறுத்தாத நெருக்கம்,  அந்த இணையின்  ரசவாதத் தொடர்ச்சியாக மாறிவிடுகிறது.

லில்லியின் அக்கா ஜெயாவாக மலையாள நடிகை சுருதி ராமச்சந்திரன் அழகான தேர்வு. ஒருவன் எப்போது காம்ரேட் ஆகிறான் என்பதைக் கூறும் தாத்தா சாருஹாசன் அதிராத, பழுத்த அனுபவ முதுமையை வெளிப்படுத்தும் சில காட்சிகள் உணர்வூட்டம் தருபவை. அதேபோல அம்மா கல்யாணி, கிரிக்கெட் அணியின் தேர்வு  அதிகாரியாக வரும் ரமேஷ் ராவ் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதுடன், அவற்றை ஏற்ற நடிகர்கள் அவற்றுக்கு வலிமை சேர்த்துச் சென்றிருக்கிறார்கள்.

 முதல் படமே பெரிய பட்ஜெட் என்பதை உணர்ந்து திறம்பட இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பரத் கம்மா. ஆனால், நீளமான  கதை சொல்லல் (கிட்டத்தட்ட 3 மணி நேரம்),  ‘மௌன ராகம்’ முதல் ‘காற்று வெளியிடை’ வரை  எல்லா மணிரத்னம் படக்  காட்சிகள், அர்ஜுன் ரெட்டியை  நினைவுபடுத்தும்  காட்சிகள், ‘பிரேமம்’, ‘மோட்டார் சைக்கிள் டயரீஸ்’ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் உலவிய கதாபாத்திரங்களின் நிழல் ஆகியவை இயக்குநரிடன் தனித்துவம் இல்லை என்பதைக் காட்டுகின்றன.  

சிவப்புக் கொடி கட்சிப்  பின்னணி,  ‘பிரேமம்’ படத்தைப் பிரதி எடுத்ததுபோன்ற அடிதடி, மழைக் காட்சிகள் என,  மற்ற தென்னிந்திய ரசிகர்களின் வட்டார உணர்வைத் தொடர்புபடுத்தும் காட்சியமைப்புகள் வியாபார உள்நோக்கம் கொண்டவை என்றாலும் திறமையான உள்நுழைப்புகள். முதல் பாதியில் திரைக்கதை தள்ளாடினாலும்  கிரிக்கட் தேர்வில் நடக்கும் குளறுபடிகள், அதிகாரச் சீண்டல்கள், நிகழ்கால ‘மீ டூ ’ வெடிப்புகள் என்று ‘டாபிகல்’ ஆகக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.  

நீண்ட கதை சொல்லலைப் பொறுத்துக்கொள்ளச் செய்வதில்  ஜஸ்டின் பிரபாகரனின் இசை பெரும்பங்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. சித் ஸ்ரீராம், ஐஸ்வர்யா ரவிச்சந்திரனின் மாயக்குரலில்  வரும் ‘கடலல்லே’ பாடல் ஓர்  உதாரணம்.  தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் புகழ் பெற்ற இரட்டையர்களான  சுஜித் சாரங்கின்  ஒளிப்பதிவும் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும்  கதையின் நீட்சியை, காட்சிகளின் அறுபடாத தொடர்ச்சியில் ஒன்றவைக்கும் மாயத்தைச்  செய்திருக்கின்றன. 

கதையை  இன்னும் செதுக்கி நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். அதில் தவறிவிட்டார் இயக்குநர். ஆனால், அவள் மேல் கொண்ட காதலைக் காட்டிலும்  சக தோழனாக, அவள் கனவை அடைய உதவும்  ஒரு காம்ரேடாக நாயகன் இருப்பதையும், காலம் தாழ்த்தினாலும் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை வெளியில் கொண்டு வரும் நாயகியின் துணிவையும் கொண்டாடிய வலையில், ‘டியர் காம்ரேட்’ காதலை மட்டுமே முன்னுறுத்தாமல் அதை இரண்டாம் இடத்தில் வைத்த படமாகக் கவனம் பெறுகிறது.  

தொடர்புக்கு: tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x