Published : 02 Aug 2019 12:15 PM
Last Updated : 02 Aug 2019 12:15 PM

மும்பை கேட்: நேரமில்லாத நடிகர்!

நேரமில்லாத நடிகர்!

சலசலப்பை உருவாக்கிய ‘விக்கி டோனர்’ படத்தின் நாயகன் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சமீப காலத்தில் வெளியான ‘அந்தாதுன்’, ‘பதாயீ ஹோ’, ‘ஆர்ட்டிகிள் 15’ ஆகிய மூன்று படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.  சிறந்த நடிப்பு, வித்தியாசமான கதைத் தேர்வு ஆகியவற்றில் அசரடிக்கும் அவர், சண்டிகரிலிருந்து வந்து பாலிவுட்டில் பிரபலமாகியிருப்பவர்.  “நான் மும்பையிலேயே இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க முடியவில்லை. எப்போதும் குடும்பத்தைவிட்டு வெளியே இருப்பது உவப்பாக இல்லை.

அது வாழ்க்கையைக் கடினமாக்கிவிடுகிறது” என்று சொல்லியிருக்கிறார். அவரது நடிப்பில் ‘ட்ரீம் கேர்ள்’, ‘பாலா’, ‘குலாபோ சீத்தாபோ’, ‘சுப மங்கள் ஸ்யாதா சாவ்தான்’  ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.  இவரைப் போன்ற நடிகர்கள் பாலிவுட்டில் தொடர்ந்து வெல்வதும் மாஸ் கதாநாயகர்கள் வெல்லும் போக்குக்கு நேர் எதிரிடையானது  .

இன்னும் சமத்துவம் வரவில்லை!

தாப்ஸி பன்னு நடிப்பில் ‘மிஷன் மங்கல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் தற்போது அதிகரித்திருந்தாலும், ‘கதாநாயகிகளால் கதாநாயகர்களுக்குச் 
சமமான ஊதியத்தையோ சந்தை மதிப்பையோ பெறமுடியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் தாப்ஸி. “கதாநாயகன்-கதாநாயகி திரைப்படங்களுக்கு இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. பாலிவுட்டில் ஒரு பெண் மையப் படத்துக்குச் செலவிடும் மொத்த பட்ஜெட் என்பது ஒரு கதாநாயகருக்கான ஊதியமாக இருக்கிறது. 

இந்த இடைவெளியைக் கதாநாயகிகள் எப்படிச் சமாளிக்கலாம் என்றால், கதாநாயகர்களைப் போல அதிகமான ஊதியம் கேட்காமல், நிறையப் பெண் மையப் படங்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தலாம். இதன்மூலம் தயாரிப்பாளர்களைப் பெண் மையப் படங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க வைக்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார். ‘மிஷன் மங்கல்’ படத்தில் தாப்ஸியுடன் அக்ஷ்ய் குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது.

தொகுப்பு: கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x