Published : 02 Aug 2019 12:01 PM
Last Updated : 02 Aug 2019 12:01 PM
மு.முருகேஷ்
‘சொல்லாமலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ஊக்கமூட்டும் திரைக்கதைகளுக்காகப் பேசப்படுபவர் இயக்குநர் சசி. வாசிப்பின் வழியான உந்துதல்களிலிருந்து தனக்கான திரைக்கதைகளைப் படைக்கும் அவர், ‘வெயிலோடு போய்’ என்ற தமிழ்ச் சிறுகதையை விரித்து ‘பூ’ எனும் உணர்வுபூர்வத் திரைப்படத்தை தந்தவர்.
இவரது எழுத்து, இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ தமிழ், தெலுங்குப் படவுலகில் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றியாக அமைந்தது. தற்போது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர், அதன் இறுதிகட்டப் பணிகளில் இருந்த நிலையில் நம்முடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
‘பிச்சைக்காரன்’ வெளியாகி இரண்டரை ஆண்டுகள் நகர்ந்துவிட்டதே?
இவ்வளவு இடைவெளி விட்டுப் படம் பண்றதாலதான், 21 வருசமா நான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். தொண்ணூறுகளின் இறுதியில படமெடுத்த டைரக்டர்ஸ் இன்னும் மெயின் ஸ்ட்ரீம்ல இருக்காங்களான்னு எனக்குத் தெரியலே. இதைத் திட்டமிடல்னு சொல்றதைவிட, எனக்கான பொறுப்புணர்வுன்னு சொல்றது சரியா இருக்கும். எனக்குப் படம் தர்ற தயாரிப்பாளர் நஷ்டப்பட்டுடக் கூடாதுன்னு ஓர் எண்ணம். அப்புறம், ‘இது சசி படம்டா’ன்னு நம்பி வர்ற ரசிகனை, நான் ஏமாத்திடக்
கூடாதுங்கிற பொறுப்புணர்வாகவும்
இது இருக்கு.
தொடர்ச்சியாக நான்கு காதல் கதைகளைப் படமாக்கிய நீங்கள், ‘555’, ‘பிச்சைக்காரன்’ என வேறு களத்துக்கு மாற என்ன காரணம்..?
ஒரு கட்டத்திலே காதல் பட இயக்குநர்னு முத்திரை குத்திடுவாங்களோன்னு ஒரு பயம். எனக்கும் லவ் ஸ்டோரியை டீல் பண்ணிப் பண்ணி போர் அடிக்கத் தொடங்கிடுச்சு. திடீர்னு மாத்திப் பாக்கலாமேன்னு யோசிச்சேன்.
‘பூ’ படம் முடிஞ்ச பிறகு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியை ஒரு நிகழ்ச்சியில சந்திச்சுப் பேசிக்கிட்டு இருந்தேன். ‘நான் வாடகை வீட்டிலே இருக்கேன்’னு சொன்னதும் அவர் அதிர்ந்துபோயி, ‘ஏங்க இன்னும் சொந்த வீடு வாங்கலே?’ன்னு கேட்டாரு. ‘நா பெரிய ஹீரோவை வச்சு இன்னும் படமெதுவும் பண்ணலை அண்ணே’ன்னு சொன்னேன். அதுக்கு, ‘ஏன்?’ புரியாமல் கேட்டார்.
“ ஏன்னா.. எனக்கு ஹீரோவை வச்சு படம் பண்ணத் தெரியாது. யதார்த்த வாழ்க்கைய வச்சுத்தான் படம் எடுப்பேன்” சொன்னேன். அதுக்கு அவர், ‘எனக்கும் என் தம்பிக்கும் அம்மா ஒரே சாப்பாடுதான் போட்டாங்க. என்னோட ஊர்ப் பெயரோட சேர்த்துதான் என்னை எல்லாரும் சொல்றாங்க. நான் என்னை ஒரு ஹீரோவா நினைக்கிறேன். ஊர்ல மளிகைக்கடை வச்சிருக்கிற என் தம்பியும் தன்னை ஒரு ஹீரோன்னு நினைக்கிறான். பெரிய ஆளுங்களுக்குள்ளே மட்டுமில்ல; சின்ன ஆளுங்களுக்குள்ளேயும் ஒரு ஹீரோயிசம் இருக்கு.
இதுல நாம எந்த வகையான ஹீரோயிசத்தை முன்னெடுத்துப் போறோங்கிறதுதான் ரொம்ப முக்கியம்’ன்னு சொன்னாரு. இது எனக்கு ஹீரோயிசம் பத்தின தெளிவைக் கொடுத்துச்சு. அதுக்கப்புறம்தான் ‘555’ பண்ணினேன். அந்தப் படம் சரியானபடி போகலேன்னாலும் நான் தப்பு பண்ணிடலேங்கிற மாதிரி உணர்ந்தேன். அதுக்குப் பிறகு, எந்த மாதிரியான ஹீரோயிசத்தை நாம முன்னிலைப்படுத்தணுங்கிற புரிதலோடுதான் ‘பிச்சைக்காரன்’ பண்ணினேன்.
ஒரு நல்ல சினிமா எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சேலத்தில இருக்கும்போது ஒருமுறை இரவுக்காட்சி முடிஞ்சு, இரவு இரண்டு மணிக்கு வீட்டு வந்தேன். வந்ததும் கை, கால், முகம் கழுவிட்டு, புக் ஷெல்ஃபை நல்லா அடுக்கி வச்சிட்டு, உக்காந்து கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கிட்டேன். என்னை ஒழுங்கா வச்சிக்கணுங்கிற உணர்வைத் தந்தது நான் பார்த்துட்டு வந்த மகேந்திரன் சாரோட ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம். ஒரு படம் வந்து என்னை ஒழுங்கா வச்சிக்கோன்னு சொல்லுது.
ஒரு நல்ல படம், நம்மளை அந்த மாதிரி பண்ண வைக்கணும். ‘பூ’ படம் வெளியான சமயத்திலே, ஐடி துறையிலே வேலை பார்க்கிற ஒருத்தர் என்கிட்டே வந்து, ‘சார்… ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்குப் போகையிலே என்னோட அக்காவுக்குப் புடவை வாங்கிக்கிட்டுப் போவேன். இந்த முறைதான் எங்க அக்காவுக்கு போன் பண்ணி, ‘உனக்கு எந்த கலர்ல புடவை வேணும்’னு கேட்டேன். அதுக்குக் காரணம் உங்களோட ‘பூ’ படம்தான்’ன்னு சொன்னாரு. இதைத்தான் என்னோட ஒவ்வொரு படமும் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
உங்களது ஏதாவது ஒரு திரைக்கதைக்கு ஒரு குறிப்பிட்ட நாயக நடிகர் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டா?
முன்னாடி அப்படி நான் நினைச்சதில்லை. ஆனா, இப்ப அப்படி யோசிக்கத் தோணுது. ஏன்னா, வளர்ற ஆர்ட்டிஸ்ட் வச்சு நாம படம் எடுத்து, அந்தப் படத்தோட டீஸரை யூடியூப்ல விட்டா, மூணு நாள்ல ஒரு மில்லியன் பேர் பார்க்கிறங்க. அதே பெரிய ஹீரோ நடிச்சிருந்தா ஒரு மணி நேரத்திலே ஒரு மில்லியன் பேர் பார்க்கிறாங்க.
அப்ப நாம ஏன் வியூவர்ஷிப்பை கம்மி பண்ணிக்கணும். நாம நல்ல படம் கொடுக்கிறோம், பெரிய ஹீரோவை வச்சுப் பண்ணிட்டுப் போகலாமே. மணிரத்னம் சார் அதுதானே பண்றாரு. அவர் எவ்வளவு பெரிய படம் பண்ணிணாலும் ஹீரோஸை வச்சுத்தான் பண்றாரு. பெரிய ஹீரோக்களை வைச்சுப் படமெடுத்தாலும் முருகதாஸ் படமா, ஷங்கர் படமாத்தானே இன்னமும் இருக்கு.
ஹீரோயிசத்தைத் தாண்டி வெளியே வரத் தமிழ் சினிமாவுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?
மற்ற மொழிப் படங்களைப் பார்த்தா, குறிப்பா மலையாளப் படங்களைப் பார்த்தீங்கன்னா, டிஃபெரண்டான கதைக்குப் பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளே முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இப்படியான நல்ல கதைக்கு நாம் சப்போர்ட் செய்யணும்னு பகத் பாசிலோ, மம்முட்டியோ, மோகன்லாலோ சப்போர்ட் செய்யிறாங்க. எனக்குத் தெரிஞ்சு இங்கே விஜய் சேதுபதி அப்படிச் செய்யிறாரு. சூர்யாவும் டிஃபெரண்டான கதைக்கு சப்போர்ட்டா இருக்காரு. பலரும் இப்படியான முயற்சிகளுக்கு சப்போர்ட் செய்ய முன்வரணும். அப்போ இந்தக் கேள்விக்கான அவசியம் குறைஞ்சு போயிடும்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உங்களோட எண்ணங்களின் கதையா.. இல்லை, வண்ணங்களின் கதையா..?
நிச்சயமா எண்ணங்களின் கதைதான். கணவன் – மனைவி பத்திக் கதை சொல்லணும்னா இரண்டு பேர் வேணுமில்லே. அப்படித்தான் இது இரண்டு பேருக்கான ரிலேசன்ஷிப் பற்றிய கதை. அதுக்கு இரண்டு ஹீரோ தேவைப்பட்டாங்க. அப்படித்தான் இந்தக் கதைக்குள்ளே சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷும் வந்தாங்க. 19 வயசு பையனோட கதாபாத்திரம்னு சொன்னவுடனே இமீடியட்டா ஜி.வி.பிரகாஷ்தான் மனசில வந்து நின்னாரு.
சித்தார்த் கதாபாத்திரத்துக்கு வேற ரெண்டு மூணு பேரை யோசிச்சேன். ஆனா, போஸ்டரா, படமா பார்க்கையிலே வேற யாரை விடவும் ரொம்ப நெருக்கமா வந்தது சித்தார்த்தான். ‘பாய்ஸ்’ படத்தில் பார்த்த சித்தார்த்தா இல்லாம, ஒரு போலீஸா நின்னுருக்காரு. இந்தப் படத்துக்குப் பிறகு, என்னோட பெயருக்கு முன்னாடி இந்தப் படத்தோட பெயரைச் சொல்றாங்களோ இல்லியோ, இந்தப் படத்தில நிச்சயம் நானிருக்கேன்.
இன்று திரையரங்குகளுக்கு வந்து அதிகமாகப் படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள்தாம். அவர்களுக்காக இந்தப் படத்தில் செய்தி ஏதாவது உண்டா..?
இன்னிக்கு இளைஞர்களோட கனவா பைக் இருக்கு. அந்த பைக்ல வேகமா போகணுங்கிறது அவனோட ஃபேஷனாவும் இருக்கு. அவனை ஒரு ஹீரோவா வச்சிருக்கேன். அவனுக்கு எதிரா நிக்கிற டிராபிக் போலீஸை இன்னொரு ஹீரோவா நிறுத்தியிருக்கேன். இது நிச்சயமா இன்றைய இளைஞர்களை ஈர்க்கும். இது எனக்கொரு பிளாட்ஃபார்ம்தான். அதுக்கு மேலே அன்பையும் சக மனிதர்களை நேசிக்கிறதையும் இதிலே சொல்லியிருக்கேன். பெரிய ஆக்ஷன் படத்தை எதிர்பார்த்து வர்றவங்க, அதோட அழகான கதையையும் பார்த்துட்டு வெளியே போவாங்கன்னு என்னால உறுதியா சொல்ல முடியும்.
நல்ல கதைகளை வாசிக்கும்போது, அதைப் படமாக்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் வாசித்ததில் எதைப் படமாக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்ல சமீபத்தில எழுத்தாளர் சார்வாகன் பற்றிய கட்டுரையைப் படிச்சேன். அவர் ஒரு தொழுநோய்க்கான டாக்டரா, அவர் செஞ்சிருக்கிற வேலைகள் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. அவரோட வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுக்கணும்னு எனக்கு ஆசை வந்துச்சு.
அடுத்த படம்..?
இனி, ஆண்டுக்கொரு முறை படம் பண்றதுக்கான திட்டமிடல் போய்க்கிட்டு இருக்கு. என்னோட அடுத்த படத்துக்கு ஹரிஷ் கல்யாண்தான் ஹீரோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT