Published : 26 Jul 2019 10:47 AM
Last Updated : 26 Jul 2019 10:47 AM

மறக்க முடியாத திரையிசை: பிரிந்தவர் மீண்டும் கூடும்போது..

பி.ஜி.எஸ்.மணியன் 

அவர்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றிப்போய் வாழும் தம்பதி. யார் கண் பட்டதோ கொடிய நோயின் பிடியில் அவள் சிக்கினாள். அவனே ஒரு மருத்துவராக இருந்த காரணத்தால் அவளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தான். ஆனால், தன் மீதான காதலே அவனது முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக இருப்பதை உணர்ந்த அவள், அவனை விட்டுப் பிரிந்தும் போனாள்.

இப்போது அவள் வெளிநாட்டில். தனது நோய் முற்றிலும் குணமான நிலையில் மீண்டும் தன் கணவனுடன் ஒன்றுசேரப்போகிறாள். அந்தப் பெண்ணின் மனம் என்னவெல்லாம் நினைக்கும்? எப்படி எல்லாம் பரபரக்கும்?
அவற்றை அற்புதமாகக் கவியரசர் பாடலாக வடிக்க, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் வார்த்தைகளின் உணர்வுகளை இசையில் கொண்டுவர, இசைப் பேரரசி பி. சுசீலா தனது தேன்குரலால் பாடலுக்கு உயிரூட்ட, காலத்தை வென்று நிற்கும் காவியப்பாடல் ஒன்று நமக்குக் கிடைத்துவிட்டது.

அதுதான்..1961-ல் வெளிவந்த ‘பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’ என்ற பாடல்.
‘தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயோ
ஊர் உலகம் போற்றுகின்ற உத்தமரைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழைபோல் நானும் இங்கே
சொந்தம் கொண்டாடுவதைச் சொல்லிவிட மாட்டாயோ’
இதில் ஊர் உலகம் போற்றுகின்ற உத்தமர் என்ற வரிகள் சாதாரண வரிகள் அல்ல.
புற்றுநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் டாக்டரான அவன், தன் முயற்சியில் கண்டிப்பாக வெற்றிபெற்றிருப்பான். அவனை ஊரும் உலகமும் உத்தமனாகப் போற்றிபுகழும் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை. ஆகவே, இந்த வரிகள் சாதாரணமானப் பதிபக்தியின் வெளிப்பாடு அல்ல. காதலினால் கருத்தொருமித்த ஒரு பெண்ணின் ஆணித்தரமான நம்பிக்கையின் வெளிப்பாடு.

அவள் இருப்பதோ அயல் நாட்டில். கடல் கடந்து சென்றுதான் அவனைக் காண வேண்டும். பறவை போல் பறக்கலாம் என்றால் சிறகுகள் வேண்டுமே. கவியரசர் அவளுக்காகச் சிறகுகளை உருவாக்கிக் கொடுத்தேவிட்டார்.
‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?’ – இதுதான் பல்லவி.
பல்லவியின் இரண்டாம் வரியில் கணவனின் மார்பைக் கண்ணீர்க்கடலில் நனைக்கவா என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது! இவளோ ‘கண்ணீர்க் கடலில் குளிக்கவா?’ என்று கேட்கிறாள்.

ஏன்? தன்னைப்போலவே பிரிவின் தவிப்பும் துடிப்பும் அவனுக்கும் கட்டாயம் இருக்குமல்லவா? அவன் மார்பில் அவள் சாயும் பொழுது, அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கும் அல்லவா? அந்தக் கண்ணீர் வெள்ளத்தில் அவள் குளிக்க வேண்டுமாம்!
அவனைப் போய்ச் சேரமுடியாதபடி பெரிய தடையாக இருக்கும் பரந்து விரிந்த கடலைக் கடக்க ஒரு பாலத்தையே அமைத்துக் கொண்டுவிட்டாள் அவள். அந்தப் பாலம் சிமெண்ட் பாலம் அல்ல. மனத்தில் தோன்றும் எண்ணங்களாலேயே கட்டப்பட்ட பாலம். இரவும் பகலும் களைப்பே தெரியாமல் நடக்கலாம்.

‘எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இருகை கொண்டு வணங்கவா’
பாடலில் கவியரசர் பயன்படுத்தி இருக்கும் அணி நயம் ‘ஐய அணி’ வகையைச் சார்ந்தது. இதைச் செய்யவா… அதைச் செய்யவா... 
என்ற சந்தேகத்துடன் அமைந்திருக்கிறது. ‘மயக்க அணி’ என்றும் இதைக் கூறுவர். இந்த அணி வகைக்குப் பொருத்தமாகவோ என்னவோ மெல்லிசை மன்னர்களும் காபி, கரஹரப்ரியா, ஹரிகாம்போதி ஆகிய மூன்று ராகங்களின் ஸ்வரங்களையும் மாறி மாறிக் கையாண்டு நம்மை மயக்கி இருக்கிறார்கள்.
என்றாலும் பல்லவியின் தொடக்க வரியும், இந்த சரணத்தின் முதல் வரியும் சரி ‘இல்பொருள் உவமை அணி’யில் தோய்ந்து வசீகரிக்கின்றன. நடக்கவே முடியாத விஷயங்களை நடப்பதாகச் சொல்வதுதான் ‘இல்பொருள் உவமை அணி ’.
காதல் சிறகால் வானத்தில் பறப்பதும் எண்ணப் பாலத்தால் இரவும் பகலும் நடந்து கடலைக் கடப்பதும் நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்கள். ஆனால், இவை நடப்பதாக கவியரசர் கூறும்போது நம் மனம் ஆமோதிக்கவே செய்கின்றது. இப்படி ஒரு அணிவகைக்குள் இன்னொரு அணியை உள்ளீடாக அமைத்து வியக்கவைக்கிறார் கவியரசர்.

பிரிந்த தம்பதி இப்போது நேருக்கு நேராகச் சந்திக்கும்போது இப்படி எல்லாம் தோன்றிவிட்டால்?
‘முதல்நாள் காணும் புதுமணப் பெண்போல் முகத்தை மறைத்திடத் தோன்றுமா.
முறையுடன் நடந்த கணவன் முன்னாலே - பரம்பரை நாணம் தோன்றுமா.’
கடைசிச் சரணத்திலோ 
கவியரசரின் வார்த்தைப் 
பிரயோகங்கள் காதலின் உச்சத்துக்கே கேட்பவரைக் கொண்டுசென்று நிறுத்திவிடுகின்றன.
பிரிந்தவர்கள் சந்திக்கும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிதறி அழுதே விடுவார்கள். மனதுக்கு அமைதி கிடைக்கும். ஆனால், பேசக்கூடத் தோன்றாமல் அப்படியே கற்சிலைகளாக அவர்கள் உறைந்து நின்றுவிட்டால்..? அது காதல் தெய்வம் கோயில் கொண்டிருக்கும் புனிதமான கருவறையாக அமைந்துவிடுகிறது. காதலுக்கு இதைவிட ஒரு புனிதமான, அழுத்தமான அங்கீகாரத்தை யாராலும் கொடுக்கவே முடியாது என்ற அளவுக்கு அமைந்துவிட்ட வரிகள் இவை.

‘பிரிந்தவர் மீண்டும் கூடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.
பேச மறந்து சிலையாய் இருந்தால் - பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி . அதுதான் காதலின் சன்னிதி’.
பாடல் என்னவோ முடிந்துவிட்டது. ஆனால், அது ஏற்படுத்திய அதிர்வலைகள் யுகங்களைக் கடந்து காதல் தெய்வத்தின் கருவறை முழுவதும் வியாபித்துக்கொண்டிருக்கின்றன.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x