Published : 26 Jul 2019 10:37 AM
Last Updated : 26 Jul 2019 10:37 AM
டோட்டோ
ஸ்டான்லி குப்ரிக் 91-ம் பிறந்ததினம்
சிறந்த படைப்பாளிகளே வியக்கும் முன்னோடிப் படைப்பாளிகள் எல்லாக் காலகட்டங்களிலும் இருந்திருக்கிறார்கள். “ ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் மகேந்திரன் சார் செய்ததில் ஒரு சிறு பகுதியை என்னால் நெருங்க முடிந்தால், நான் சந்தோஷமடைவேன்” என்று வியந்து சொல்லியிருக்கிறார் மணிரத்னம். ஹாலிவுட்டில் ஸ்டீவென் ஸ்பீல்பர்க் தொடங்கி க்வென்டின் டாரன்டினோ வரை தனித்து முத்திரை பதித்த இயக்குநர்கள் பலருக்கும் பிடித்தமான மூத்த படைப்பாளி ஒருவர் இருந்தார். அடுத்து வரும் புதிய தலைமுறை இயக்குநர்களுக்கும் அவர் ஆதர்சமாக இருப்பார். அவர்தான் ஸ்டான்லி குப்ரிக். 1951-ல் எடுத்த முதல் ஆவணப் படம் தொடங்கி 1999-ல் அவர் இயக்கிய கடைசித் திரைப்படம்வரை அரை நூற்றாண்டு காலம் திரையில் திளைத்த வாழ்வு அவருடையது.
பதினாறு வயது கலைஞன்
நியூயார்க் நகரத்தில் 1928, ஜூலை 26-ல் ஒரு மேல்மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தார். குப்ரிக்கின் தந்தை ஜேக்கப் ஒரு யூத மருத்துவர். குப்ரிக்குக்கு பள்ளிப்படிப்பில் ஆர்வமின்மை, ஆனால் கதைகளிலும் இலக்கியத்திலும் தீராத காதல். தனிமை விருப்பி. கூச்ச சுபாவி. இவரது வாழ்வை மாற்றியது பதின்ம வயதில் அவருடைய தந்தை வாங்கித் தந்த ‘கிராஃப்ளெக்ஸ்’ கேமரா. ஒளிப்படக்கலையைத் தானே கற்றுத்தேர்ந்து தன் 16-ம் வயதில் முதல்முறை ‘லுக்’ பத்திரிகைக்கு அப்போதைய ரூஸ்வெல்ட்டின் இறப்புச் செய்திக்காக, தொழில் முறை ஒளிப்படம் ஒன்றை விற்கிறார்.
பள்ளியிறுதிக்குப் பின்னர், அதே பத்திரிகையில் ஒளிப்படக் கலைஞராக வேலைக்குச் சேர்ந்து குத்துச்சண்டை போட்டிகளைத் தொடர்ந்து படமெடுத்துக் கொடுக்கிறார். பின்னர், அதுவே அவரின் முதல் படத்துக்கான களமாக அமைகிறது. மேலும் தனக்கு மிகவும் பிடித்த செஸ் விளையாடிப் பணம் சேர்க்கிறார். 16 நிமிடம் ஓடக்கூடிய ‘டே ஆ ஃப் தி ஃ பைட்’ என்னும் சிறு ஆவணப்படம்தான், இவரின் முதல் தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம்.
குப்ரிக்கின் தன்னம்பிக்கை
இதைத் தொடர்ந்து பத்திரிகை வேலையை உதறிவிட்டுத் தந்தையின் பண உதவியில் முதல் படமான ‘ஃபியர் அன்ட் டிசையர்’ படத்தை 1953-ல் எடுக்கிறார். இன்னொரு தயாரிப்பாளர் ஹாரிஸுடன் ‘ தி கில்லிங்’ படைக்கிறார். இன்றளவும், கொள்ளையடிக்கும் படங்களின் விருப்பப் பட்டியலில் இந்தத் திரைப்படம் இடம்பெறுவதற்கு, இவரின் இயக்கமும் முன்னும் பின்னும் அலையும் நான்-லீனியர் வகைக் கதை சொல்லும் முறையும்தான் முக்கியக் காரணங்கள். இந்தப் படத்தைப் பார்த்துத்தான். ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ எடுத்ததாக இயக்குநர் க்வெண்டின் கூறியிருக்கிறார்.
குப்ரிக்கின் பிடிவாதத்துக்கு ஓர் உதாரணம் பார்க்கலாம். ‘தி கில்லிங்’ படத்துக்கு அப்போது பிரபல ஒளிப்பதிவாளரான ‘லூசியன் பாலர்ட்’ வேலை செய்யச் சம்மதித்து படமாக்குதல் குறித்து சில மாற்றங்களைப் பரிந்துரைக்கிறார். அதற்கு படமெடுப்பதிலே அப்போது பெரிய அனுபவமில்லாத 28 வயது குப்ரிக் “நான் குறிப்பிடும் லென்ஸில், சொல்லும் விதத்தில் படமாக்குவதிலிருந்து மாறுபடுவதாக இருந்தால், நீங்கள் நாளையிலிருந்து வர வேண்டாம்” என்பதை மெல்லிய குரலில் அழுத்தமாகச் சொல்லிவிடுகிறார். இவரின் அசாத்திய தன்னம்பிக்கையை வியந்து லூசியன் பாலர்டும் அதற்குச் சம்மதித்து வேலையைத் தொடர்கிறார்.
பிறகு, இவர் இயக்கிய ‘பாத்ஸ் ஆஃப் குளோரரி’ (1957), ‘ஸ்பார்ட்டகஸ்’ (1960) மிகச் சிறந்த போர்க் காவியங்களாகப் பாராட்டப்படுகின்றன. இவை இன்றும் கதைக் களத்தின் பிரம்மாண்டச் சித்தரிப்புக்காகவும் நேர்த்தியான விவரங்களுக்காகவும் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. தமிழில் வெளிவந்த ‘விருமாண்டி’யில் சிறைச்சாலையை உடைத்து கைதிகள் வெளியேறும் இறுதிக் காட்சிகள், ‘பாகுபலி’ போர்க்காட்சிகள், ஹாலிவுட்டில் பின்னர் எடுக்கப்பட்ட எல்லா ‘கிளாடியேட்டர்’ வகைப் படங்களும் ‘ஸ்பார்ட்டக’ஸின் தாக்கங்களே. நடிகர் கமல் ஹாசனும் குப்ரிக் படங்களின் திரைக்கதை அமைப்பு, பின்னணி இசை குறித்து வியந்து குறிப்பிட்டிருக்கிறார். ‘ஸ்பார்ட்டகஸ்’ திரைப்படம் கிட்டத்தட்ட 10,000 பேர் நடித்து, 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மட்டுமல்லாமல் 1960-ல் 60 கோடி டாலர்களைக் குவித்தது.
சர்ச்சைகள் கண்டு அஞ்சாதவர்
இவர் இயக்கிய படங்களில் உறவுச் சிக்கல்கள் பற்றி ‘லோலிட்டா’ (1962), அமெரிக்கா-ரஷ்யா-அணுவாயுதம் பற்றி ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ (1964) என வேறு யாரும் யோசித்துப் பார்க்காத காலத்தில், இவர் தொட்ட விஷயங்களாலும் எடுக்கும் படங்களாலும் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு உள்ளாகிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரின் திரைப்படச் சிந்தனையை எந்த விதத்திலும் பாதிக்காமல் அடுத்தடுத்த, வெவ்வேறு கதைகளில், வாசிப்பில், படங்களில் தன்னை மூழ்கடித்துக்கொள்கிறார்.
1966-ம் ஆண்டு குப்ரிக் முப்பதுக்கும் மேற்பட்ட பெரிய விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்த பின், அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் எழுதிய ‘சென்டனியல்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் ஒரு நாவல் எழுத வைத்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த நாவலைத் திரைக்கதையாக்க எடுத்துக்கொண்டார். பின்னர் படத்தின் தொடக்க வேலைகளுக்கு ஒரு வருடம். அவருக்கு வாழ்வில் கிடைத்த ஒரே ஒரு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்த அந்தப் படம்தான் ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ (1968). படத்தின் முதல் பிரதி தயாராகி தயாரிப்பு நிறுவனத்துக்குத் திரையிட்ட போதே இருநூற்றுக்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் ‘இந்தப் படம் புரியவில்லை’ என்று வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் சொல்கிறது. எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இன்றளவும் விண்வெளி சார்ந்த படங்களுக்கு இது ஒரு நூலகமாக இருந்து வருகிறது.
பிறகு கடும் வன்முறை சார்ந்து எடுத்த ‘எ கிளாக் ஒர்க் ஆரஞ்ச்’ (1971) குப்ரிக்கைப் பெரும் சர்ச்சையில் சிக்கவைத்தது. கொலை மிரட்டல்களுக்கும் ஆளாக்கியது. 1980-ல் ஸ்ஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ என்ற நாவலைப் படமாக்கினார். அன்றிலிருந்து இன்று வரை அத்தனை பேய்ப் படங்களுக்கும் அது நூலகமாக இருந்து வருகிறது. பின்னர் ‘ஐஸ் வைட் ஷட்’ (1999) படத்தைக் கொடுத்தார். உறவுகளின் அகச் சிக்கலை உடல், மன ரீதியாக அலசும் இந்தத் திரில்லர் படம்
பெரும் வரவேற்பைப் பெற்றது.
சில நாடுகளில் தடையும் செய்யப்பட்டது. இதில் வரும் ஒரு முக்கிய மதச் சடங்கு போன்ற விவரிப்புக் காட்சியின் பின்னணி இசையில் கர்நாடக இசைக் கலைஞர் யோகேஸ்வரனின் குரலில் அமைந்த ‘இது நரகமா’ என்ற கீர்த்தனை போன்ற தமிழ்ப் பாடல் இடம்பெற்றிருந்தது. அதனால் இந்தியாவிலும் சர்ச்சை உருவாகி, இங்கேயும் தடை செய்யப்பட்டது.
மிகுந்த ஆராய்ச்சி செய்து தகவல் திரட்டி வைத்திருந்தாலும் இவரால் 3 படங்களை எடுக்க முடியாமலேயே போய்விட்டது. யூதர்கள் படுகொலை பற்றி எழுதிய ‘ஆர்யன் பேப்பர்ஸ்’, மாவீரன் நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அன்பைப் பொழியும் முதல் இயந்திர மனிதன் கதையை அப்போதைய தொழில் நுட்பம் பற்றாக்குறையால் குப்ரிக் தள்ளிவைத்தார்.
குப்ரிக் பெருமைப் படுத்தும்விதமாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சிறுகதை ஒன்றை அடிப்படையாக வைத்து எடுத்த படமே ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’. அந்தப்
படத்தின் ரோபோ சிறுவன் டேவிட் பற்றி அதை உருவாக்கியவர் சொல்லும் வசனம் இது. ‘ நீ பெருங்கூட்டத்தில் ஒருவனல்ல; உன் இனக்கூட்டத்தில் நீயே முதன் முதலானவன்’. இந்த வரிகள் குப்ரிக்குக்கும் பொருந்தும்.
தொடர்புக்கு: tottokv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT