Published : 25 Jul 2019 05:47 PM
Last Updated : 25 Jul 2019 05:47 PM
கா.இசக்கிமுத்து
சற்குணம் இயக்கத்தில் கடந்த 2011-ல் வெளியான ‘வாகை சூட வா’ படத்தில் இடம்பெற்ற ‘சர சர சாரக்காத்து’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். பின்னர், ‘உத்தமவில்லன்’, ‘ராட்சசன்’, ‘கடாரம் கொண்டான்’ எனப் பின்னணி இசையின் மூலமாகவும் கவனம் ஈர்த்து வருகிறார். ‘பாகுபலி’ படத்துக்குப் பின் பிரபாஸ் நடித்துவரும் ‘சாஹோ’ படத்துக்குப் பின்னணி இசை அமைக்க அக்கட தேசத்திலிருந்து அழைக்கப்பட்டிருக்கிறார் ஜிப்ரான். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
‘சாஹோ’ படம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், நீங்கள் இசையமைப்பதாகப் படக்குழு இப்போது அறிவித்திருக்கிறது. எப்போது ஒப்பந்தம் ஆனீர்கள்?
இயக்குநர் சுஜித் இயக்கிய முதல் படமான ‘ரன் ராஜா ரன்’ முடித்தவுடனே, இந்தப் படம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மட்டும் தயாராக இருந்தது. பின்பு ‘பாகுபலி’ படங்களின் வெற்றியால் மற்ற இந்திய மொழிகளிலும் வெளியீடு, இந்தி தயாரிப்பு நிறுவனமும் இணைந்தது என எல்லாம் சேர்ந்ததால் ஷங்கர் - இஷான் - லாய் கூட்டணியை இசையமைப்பாளர்களாக ஒப்பந்தம் செய்தார்கள். பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ‘அண்ணா... ‘சாஹோ’ படத்துக்கு மியூசிக் பண்றீங்களா?’ என அதன் இயக்குநர் சுஜித் கேட்டார். நானும் படம் பார்த்தேன். பாடல்கள் பண்ணவில்லை, மூன்று மாதம் மட்டுமே இருக்கிறது. ஆனால், பின்னணி இசை பண்றேன் என்று ஒப்புக்கொண்டேன்.
பின்னணி இசையமைக்க மட்டும் ஒப்புக்கொண்டதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
பின்னணி இசை என்பது ஒரு மிகப் பெரிய பணி. அதன் மூலம் மோசமான படத்தைக் காப்பாற்றவும் முடியும், நல்ல படத்தை மோசமாக்கவும் முடியும். பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே ஃபேண்டஸி, அட்வென்சர் இருக்கும். ஆனால், ‘சாஹோ’ அதில் அடங்காது. ஏனென்றால் இது நிஜத்தில் நடக்கும் ஆக்ஷன் கதை. பின்னணி இசைக் கோப்பு மீது எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. அதுவும் கிட்டத்தட்ட இயக்குநரின் குரலைப் பிரதிபலிப்பதுதான். இயக்குநர் பல நேரம் கதாபாத்திரம் ஒன்று பேசும், பார்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பார். அதெல்லாம் பின்னணி இசையின் மூலமாகவே பண்ண முடியும். பின்னணி இசையில் புதிது புதிதாகப் பண்ண முடியும்.
‘சாஹோ’ படம் பற்றி?
அந்தப் படத்தில் காட்சிரீதியாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில்தான் பார்க்க முடியும். இதுவொரு புதிய தலைமுறை ஆக்ஷன் படமாக இருக்கும். ஒவ்வொருவருமே வெவ்வேறு மனிதர்களிடம் பேசும்போது, வெவ்வேறு ஆட்கள்போல் வெளிப்படுத்திக் கொள்ள முயல்வோம். ‘சாஹோ’வில் கதாபாத்திரங்களின் மாற்றம் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஒரு பெரிய படம் வந்து நீண்ட இடைவெளியாகிவிட்டது.
உங்களுடைய இசையமைப்பில் பாடல்களைவிட, பின்னணி இசை குறித்துப் பலரும் பேசுகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எனது ப்ளஸ் என்று தான் பார்க்கிறேன். பாடல்கள் என்ற பந்து என்னிடம் வரும் போது, அதில் ரன்கள் சேர்த்திருப்பதாகதான் நினைக்கிறேன். ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘அமரகாவியம்’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்களின் பாடல்கள் வெற்றிபெற்றன. அதே போல் ‘தீரன்’ படத்துக்காக நிறைய பாடல்களை உருவாக்கினோம். ஆனால், படத்திற்குள் ஒன்றிரண்டு பாடல்கள்தான் வைக்க முடிந்தது. ‘அறம்’ மாதிரியான படங்களில் பாடல்களைத் தாண்டி பின்னணி இசைக்குத் தானே முக்கியத்துவம். அதேபோல் ‘ராட்சசன்’ படமும் பின்னணி இசையையே முதன்மைப்படுத்தியது. பின்னணி இசையை இப்போது பலரும் கவனிக்கத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பின்னணி இசையால் கதையைக் கூற முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன். இப்போது அதைப் பலரும் கவனிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சிதான்.
அஜித்துடன் எப்போது கூட்டணி?
அஜித்தைச் சந்தித்தபோது, ‘நாம் சேர்ந்து பணிபுரியலாம்’ என்றார். அது எந்தப் படமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. அவருடன் பணிபுரிய ஒரு அஜித் ரசிகனாகக் காத்திருக்கிறேன்.
கமலுடனான நட்புக்கு முன், பின் ஜிப்ரானுடைய வாழ்க்கையில் என்ன மாற்றம்?
ஒரு மனிதனாகவே நிறைய மாறியிருப்பதாக நினைக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பாடல்கள் கேட்டேன், படத்தில் பார்த்தேன். இப்போது இசையமைப்பாளர் ஆனவுடன் கதைக்குள் அந்தப் பாட்டு வரும் இடம், அந்த இடம் சரியா என்றெல்லாம் பார்க்கிறேன். ஆனால், இதையெல்லாம் தாண்டி இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் கமல். பாடல் தொடக்கம், முடிவு, பாடலுக்கு முன்பு வரும் காட்சி, பின்பு வரும் காட்சி என அனைத்தையும் பார்க்கச் சொல்வார்.
என் வயதைத் தாண்டியது அவருடைய சினிமா அனுபவம். அவரிடம் கற்றுக்கொண்டது நிறைய. அவருடைய தொடக்கக் கால படங்களுக்கு இசையமைக்கும்போது நடந்த சுவாரசியங்கள் என நிறையச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என் இசைப் பயணத்தை கமலுக்கு முன், கமலுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். கமல் அளித்த பேட்டியில் ஜிப்ரான் எனக்குப் பையன் மாதிரி என்று சொன்னதை என் பெற்றோர் ரொம்பப் பெருமையாக நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு அவருடன் ஒன்றிப்போய்விட்டேன்.
‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்துக்குப் பிறகு ஏன் படங்கள் தயாரிக்கவில்லை?
‘ராஜதந்திரம்’ இயக்குநருடைய அடுத்த படத்தைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தைத் தயாரித்து, அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். அதில் கற்றுக்கொண்ட விஷயங்கள், அடுத்த படத்துக்கு உதவிக்கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT