Published : 25 Jul 2019 05:35 PM
Last Updated : 25 Jul 2019 05:35 PM
ம.சுசித்ரா
கண்ணாடி முன்னால் தன்னந்தனியாக நின்று பார்க்கும்போதுகூடத் தன் உடலையே ஆணின் கண்களால்தான் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறாள் பெண். அதனாலேதான் தன்னுடைய நிர்வாணம் அவளுக்கு மானம், அவமானம், வெட்கம், கூச்சத்தைத் தருகிறது.
இந்த மனநிலைதான், தன்னுடைய அந்தரங்க ஒளிப்படத்தை ஹேக்கர் கசியவிடும்போது, அச்செயல் அவளை நிலைகுலையச் செய்கிறது, தற்கொலைக்குத் தள்ளுகிறது. பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான பெல்லா தோர்ன் அண்மையில் இந்தச் சவாலைத் துணிச்சலாக எதிர்கொண்டார். அவர் தன் கைபேசியில் சேமித்துவைத்திருந்த தன்னுடைய நிர்வாண ஒளிப்படங்களைச் சமூக ஊடகத்தில் கசியவிடப்போவதாக மிரட்டிய ஹேக்கருக்குப் பதிலடியாக, “என்னுடைய வாழ்க்கையை உன்னால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய பயத்தைத் தனக்குச் சாதகமாக ஒருவன் பயன்படுத்திக்கொள்ள நெடுங்காலமாக அனுமதித்துவிட்டேன்.
இனியும் அதைப் பொறுத்துக்கொள்வதாக இல்லை. எனக்கே என்னுடைய நிர்வாணப் படங்களைக் காட்டி அச்சுறுத்திய அவனுக்குப் பதிலளிக்கும் விதமாக அந்தப் படங்களை நானே வெளியிடுகிறேன்” என்று டிவிட்டரில் பதிவிட்டார். மேலும் இதுகுறித்து தன்னுடைய புத்தகத்தில் எழுதுவேன் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
‘ஆடை’ படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான காமினி, தனது பணியிடத் தோழியான ஜென்னியிடம் சவால் விடும்போது ‘நத்திங் டு ஹைட்’ (Nothing to hide) என்று தன்னுடைய உள்ளங்கையில் எழுதுகிறாள். இதன் மூலம் நிர்வாணத்தை நினைத்துப் பெண்கள் அஞ்சத் தேவை இல்லை. மறைப்பதற்கு ஏதுமில்லை என்று இயக்குநர் சொல்லவருகிறார் என்று நினைத்தால், காமினியோ, தன்னுடைய நிர்வாணத்தைத் தானே காணச் சகிக்காமல், ‘உன்னோட பொண்ணு மானத்தோட விட்டுக்கு வந்திருவேன் அம்மா’ என்று சொல்லித் தோற்றுப்போனாள்.
தாராவும் காமினியும்
படத்தின் தொடக்கத்தில் இருபரிமாண அனிமேஷன் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது 19-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு துளி. எப்போதெல்லாம் பெண்கள் அணியும் உடையால் ‘கலாச்சாரம்’ சீரழிந்துகொண்டிருப்பதாக ஆண்கள் அலறுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் முகத்தில் அறைய பெண்களுக்குத் துணை நிற்கிறாள் நங்கேலி.
தன்னுடைய உடலை, நிர்வாணத்தை மறைத்துக்கொள்வதில்தான் தன்னுடைய மானம் அடங்கியிருப்பதாக எண்ணியதால் ஒன்றும் அன்று நங்கேலி தன்னுடைய மார்பகத்தை அறுத்தெறியவில்லை. ‘என் உடல் என் உரிமை’ என்பதன் சமிக்ஞைதான் அது. கலாச்சாரம் என்பது நிரந்தரமானதல்ல. அது காலத்துக்குக் காலம் மாறிவந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட பெண்களை மாராப்பு அணியவிடாமல் தடுத்துவைத்தது அன்றைய கலாச்சாரம். இப்படியாக காலத்துக்குக் காலம் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்ணின் உடல் மீது ஆண் மையச் சமூகம் ஆதிக்கத்தை, அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டே இருக்கிறது.
ஆனால், இதற்கு நேரெதிரான வாதத்தை முன்னெடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்ன குமார். நெடுங்காலத்துக்கு முன்னால் பெண்கள் போராடிப் பெற்ற ஆடை அணியும் உரிமையை அவர்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். என்ன வித்தியாசம், ஆண்களை வைத்து இத்தனை காலம் தமிழ் சினிமா செய்துவந்ததை இம்முறை காமினியின் அம்மா, காமினியைப் பழிவாங்கிப் புத்தி புகட்டும் மலைவாழ் பெண் உள்ளிட்ட பெண்களை வைத்து ‘தன் விரலே தன் கண்ணைக் குத்தும்’ வேலையைச் செய்திருக்கிறார். இணைந்து வாழ்வதைப் பற்றிப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கணவன் மனைவியாக வாழும் பிரகாஷ் ராஜ்-லீலா சாம்சனை படம் முழுவதும் காட்டி தாராவுக்குப் புத்தி புகட்டினார் மணிரத்னம். ஆடை சுதந்திரம் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு, காமினிக்கு அவளுடைய தாய், காமினிக்கு முன்பின் தெரியாத பெண் மூலம் வகுப்பெடுத்திருக்கிறார் ரத்ன குமார்.
எதிர்முனை
காமினியும் அவளுடைய தாயும் எதிர் திசைகளில் நிற்பவர்கள். எப்போதும் பூஜை புனஸ்காரங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார் காமினியின் அம்மா. “சுதந்திரக் கொடினு பேரு வெச்சா காமினினு மாத்திக்கிட்டு எல்லாத்தையும் காட்டிக்கிட்டிருக்கே”, “ஒரு நாளாவது சேலை கட்டி செய்தி வாசி, அப்ப என்னோட பொண்ணு மீடியால வேலை பார்க்குறானு பெருமையா சொல்லிக்குவேன்” என்று தாய் எதிர் முனையில் இருக்கிறார்.
அதற்கும் மேலே ஒரு படிபோய், “தகப்பன் இல்லாம தாய் மட்டுமே வளர்த்த பெண்ணுங்கறதாலதான் இப்படி இருக்கனு மத்தவங்கள் சொல்லிறக் கூடாது” என்ற வசனம் வேறு. இதன் மூலம் பெண்ணின் ஒழுக்கத்துக்குப் பின்னால் ஆண்களின் வழிகாட்டல் அவசியம் என்னும் கற்பிதத்தை நினைவூட்ட முயல்கிறார் இயக்குநர்.
மறு முனையில், “குடிக்கிறது ஒண்ணும் தப்பில்ல அம்மா”, “எனக்குப் பிடிச்ச டிரஸ், எதுவுமே போடாம இருக்கிறதுதான்” என்று சொல்கிறாள் காமினி.
சரி வெவ்வேறு விதமான பெண்களைக் காட்டியிருக்கிறார்கள். அதனால் என்ன? கடைசிவரை காமினியை, ‘அவள் அப்படித்தான்’ என்று ரத்ன குமார் விட்டிருந்தால் சிக்கல் இல்லையே. ஆனால், ஆடை ஒரு பொருட்டே அல்ல என்று ஆரம்பத்தில் இருந்து சொல்பவள் தன்னுடைய நிர்வாணத்தை எதிர்கொள்ளப் பதறுகிறாள். ஆடைக்காகக் குப்பைக்கூளத்தைக் கிளறி ஞெகிழியைக் கிழித்துப் போர்த்திக்கொள்ள முயல்கிறாள்.
திரைக்கதையில் இப்படி ஸ்பீட் பிரேக் இடறிவிடுவதைக் கண்டு சுதாரித்து, ஒரு கட்டத்தில் பயத்தை உதறித் தள்ளிவிட்டு, குற்றமோ, விபத்தோ நிகழ்ந்த தடத்தில் சுற்றப்பட்டிருக்கும், ‘Caution do not enter’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கும் மஞ்சள் வண்ண ஞெகிழி ரிப்பனை இழுத்துப் போர்த்தி காமினி நிமிர்ந்து நிற்கிறாள்.
எது உடலுக்குக் கேடு?
இதோடு முடியவில்லை. இதற்குப் பிறகுதான் நங்கேலியின் மறுபிறவிபோல மலைவாழ் பெண்ணின் கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது. அவர், “கிடைத்த சுதந்திரத்தைப் பாழடிக்கலாமா?” என்று காமினியைப் புரட்டிப்போடும் கேள்வியை எழுப்புகிறார். பொதுமக்களைக் கேலிப் பொருளாக்கி அதை மறைந்திருந்து கேமராவில் படம் பிடிக்கும் ‘ப்ராங்க்’ நிகழ்ச்சிகளின் அபத்தத்தைப் போட்டுடைத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமே. குடிப்பழக்கம் போலத் தலைதெறிக்க பைக் ஓட்டுவது என்பதும் ஆணென்ன பெண்ணென்ன எல்லாருக்குமே ஆபத்துதான்.
காமினியை பெண்ணியம் பேசுபவள் என்று சொல்லிவிட்டு அவளைக் குடிப்பழக்கம் கொண்டவளாகவும், கண்ணுமண்ணு தெரியாமல் பைக் ஓட்டுபவளாகவும், நிர்வாணமாக இருந்து காட்டுகிறேன் என்று சவால்விட்டுப் பிறகு அஞ்சிப் பதுங்குபவளாகவும் சித்தரித்திருக்கிறது ‘ஆடை’. இதன்மூலம் குடிப்பழக்கம் போலப் பெண்ணியமும் பெண் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று மிரட்டல் விடுக்கிறாரா இயக்குநர்?
கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT