Published : 19 Jul 2019 11:31 AM
Last Updated : 19 Jul 2019 11:31 AM
ம.சுசித்ரா
ஜனனமும் மரணமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல. அவற்றை இணைப்பவை கதைகள்தாம். 15 வயதான பில்லா மற்றும் அவனுடைய துணையான காஷ்மீரின் வுலர் ஏரியின் கதை அப்படியான இரு துருவங்கள் இணையும் புள்ளியே. இதைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது, ‘சேவிங் தி சேவியர்’ (Saving the Saviour) ஆவணப்படம்.
ஸ்பெயினில் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘வி ஆர்ட் வாட்டர்’ (We Art Water) படவிழாவில் சர்வதேச ஆவணப்பட விருதை வென்றிருக்கிறது. டிஸ்கவரி பதிப்பகம், மறுபக்கம் திரைப்பட இயக்கம் ஆகியன இணைந்து அண்மையில் நடத்திய, ‘தண்ணீர் திரைவிழா’வில் இப்படம் திரையிடப்பட்டது.
பாரம் சுமக்கும் பிஞ்சு!
வறுமையில் வாடும் காஷ்மீரிய குடும்பங்களில் ஒன்று பில்லா என்றழைக்கப்படும் பிலால் அகமதுவின் குடும்பம். நோய்வாய்ப்பட்டு தந்தை இறந்துபோக ஒன்பது வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவன் பில்லா. அம்மா, அக்கா, தங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவன் இளம் தோள்களின் மீது ஏறிக்கொள்கிறது. பள்ளிப் படிப்பில் இருந்து இடைநின்ற அவன், வுலர் ஏரியில் மிதக்கும் குப்பையைப் பொறுக்கும் குழந்தைத் தொழிலாளியாக மாறுகிறான்.
நெகிழிப் போத்தல்கள், தெர்மகோல் அட்டைகள், ரப்பர் காலணிகள் என ஏரியில் மிதக்கும் குப்பையைச் சேகரித்து, விற்றுக் கிடைக்கும் சொற்பப் பணத்தில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதில் நகைமுரண் என்னவென்றால், ஜம்மு காஷ்மீரில் உள்ள பான்டீபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான வுலர். சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குக் குடிநீரை வாரி வழங்கும் ஏரி இதுவே. ஆனால், அண்மைக்காலமாகக் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுத் தன்னுடைய ஜீவனை இழந்துகொண்டிருக்கிறது இந்த அமுதசுரபி. இந்நிலையில்தான் தனக்கான வாழ்வாதாரத்தைத் தேடும் வழியில் வுலர் ஏரி என்ற ரட்சகனையே மீட்பவனாக உருவெடுத்திருக்கிறான் பில்லா.
போராடும் இருவர்
குப்பையை அகற்றுவதன் மூலமாக வுலர் ஏரியை பில்லா காப்பாற்ற, பில்லாவுக்கு அன்னமிடும் தாய்மடியாக வுலர் திகழ்கிறது. இப்படி பில்லாவுக்கும் வுலருக்கும் இடையில் அன்னியோன்யமான உறவு மலர்ந்திருப்பதைப் படம் நெடுக்க நுட்பமாகக் காட்டுகிறார் இயக்குநர் ஜலால் வுத் தின் பாபா.
வறுமை வாட்டினாலும் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் தற்காத்துக்கொள்ளும் துணிவை பில்லா பெற்றிருக்கிறான். அதேபோல மனிதர்கள் தன் மீது வாரியிறைக்கும் குப்பையைத் தாங்கிப் போராடிக்கொண்டிருக்கிறது வுலர் ஏரி. அதில் மண்டிக்கிடக்கும் குப்பையைக் காணும்போதெல்லாம் தன்னுடைய வாழ்க்கை அத்தண்ணீரில் பிரதிபலிப்பதாகவே பில்லா உணருகிறான். நிர்க்கதியாக இருக்கும் இருவர் ஒருவருக்கொருவர் துணையாக மாறுகிறார்கள் என்பதைப் படம் வெவ்வேறு கோணங்களில் விவரிக்கிறது.
பொறுத்தது போதும்
வெறும் 15 வயது சிறுவனாக இருந்தாலும் பிழைப்பு பற்றி கவலை, தாய், சகோதரிகள் குறித்த அக்கறை கொண்டவனாக பில்லா இருப்பதுகூட ஆச்சரியமல்ல. ஆனால், வுலர் ஏரியின் மணல் திருடப்படுவது, நன்னீரில் மிதக்கும் மக்கா குப்பை, அழுகிப்போன கால்நடைகளால் ஏரியின் நீர் நச்சாக்கப்படுவது போன்ற சூழலியல் சார்ந்த அக்கறையும் கொண்டவனாக அவன் இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றாகத் திகழ்ந்த வுலர் இன்று சுற்றுச்சூழல் மாசுபாட்டால் என்னவாக மாறியிருக்கிறது என்பதை பில்லா வாழ்க்கையின் ஊடாக ஆவணப்படுத்தியிருப்பது அற்புதமான அணுகுமுறை. இயக்குநர் ஜலால் வுத் தின் பாபா சிறந்த கதைசொல்லி என்பதைத் தெரியப்படுத்துகிறது படம்.
அதிலும் 2014-ல் ஏற்பட்ட வெள்ளத்தால் வுலர் கரைபுரண்டோடியபோது அத்தனை குப்பையும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்தான் பில்லா என்ற கோணம் திரையில் உதிக்கும்போது பார்வையாளர்களுக்குப் புத்தம்புதிய அனுபவத்தைப் படம் ஏற்படுத்துகிறது. 10 அடிவரை தண்ணீர் ஊருக்குள் புகுந்து பில்லாவின் வீடு உட்பட அத்தனையையும் மூழ்கடிக்கிறது. அண்டைவீட்டாரின் படகில் பில்லா குடும்பத்தோடு தஞ்சமடைகிறான்.
தன்னுடைய உற்ற தோழனான வுலர் ஏரி இப்படித் தன்னுடைய வன்மத்தை வெளிக்காட்டுவான் என்று ஒரு நாளும் தான் நினைத்திருக்கவில்லை என்கிறான் பில்லா. இத்தனை காலம் இயற்கைக்கு நாம் என்னவெல்லாம் கொடுமை இழைத்தோமோ அவற்றின் உச்சபட்சத்தை ஒரே நாளில் இயற்கையால் நமக்குத் திருப்பிச் செய்துவிட முடியும் என்பதை அழுத்தமாக உணர்த்திப் படம் நிறைவடைகிறது.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
ஆவணப்படத்தைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT