Published : 19 Jul 2019 11:09 AM
Last Updated : 19 Jul 2019 11:09 AM
பி.ஜி.எஸ்.மணியன்
காதல் வயப்பட்ட தலைவி, ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன என்று கண்ணில் படும் ஜீவராசிகளிடம் எல்லாம் தனது மனநிலையை எடுத்துச் சொல்லித் தலைவனின் சிந்தை அறிந்து வரச்சொல்வது கவிமரபு. அது திரைப்பாடலுக்கு இடம்பெயர்ந்த பின்பும் அமரத்துவத்துடன் தொடர்வது மரபு அழகியலின் ஒரு பகுதி. அந்த அழகியலைப் பயன்படுத்தி எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் இந்தத் தூதனுப்பும் பாடலோ சற்று வித்தியாசமானது.
வானில் வெண்ணிலவு ஒளி வீச, தடாகத்தில் இருக்கும் அல்லி மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. தடாகத்தின் கரையில் பருவத்தின் வாசலில் நிற்கும் ஒரு பெண் தன்னை அடைய ஒருவன் கண்டிப்பாக வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.
யார் அவன்?
தெரியாது.
எப்படி இருப்பான்?
தெரியாது.
எப்போது வருவான்?
அதுவும் தெரியாது.
யாரை மணக்கப் போகிறோம் ?
எப்படி மணக்கப்போகிறோம்?
எப்பொழுது அது நடக்கும்?
காதல் திருமணமா அல்லது இரு வீட்டார் கலந்துபேசி நடக்கும் திருமணமா?
எதுவுமே தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்றைத் தவிர..
கண்டிப்பாக ஒருவன் அவளுக்கென்று எங்கோ பிறந்து வளர்ந்து வருகிறான்.
தனது மனத்தின் ஆசைகளை யார் என்றே தெரியாத அந்த அவனிடம் எடுத்துச் சொல்லித் தன்னை சீக்கிரம் வந்து சேரும்படி சொல்ல வேண்டும்.
சவாலான இந்தச் சூழலுக்கு அசரவில்லை கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம். வானத்து நிலவை நாயகனாகவும் தடாகத்து அல்லி மலரைத் தானாகவும் கற்பனை செய்து கொண்டு பெண்ணான அவள் அந்த நிலவுக்காகத் தூது போவதுபோல ‘பிறிதுமொழிதல் அணி ’ வகையைக் கையாண்டு அற்புதமான பாடலை வடித்துக் கொடுத்துவிட்டார் அவர். தான் சொல்ல நினைக்கும் கருத்தை வேறு ஒரு பொருளின் மீது ஏற்றிச் சொல்வது தான் ‘பிறிதுமொழிதல் அணி ’. ஆரம்பம் முதல் சரணத்தின் இறுதிவரை என்று பாடல் முழுவதும் இந்த நயம் இழையோடுவதைக் கேட்டு உணர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்று.
பொதுவாக, நிலவை ஒரு பெண்ணாக வரித்துத் தான் கவிஞர்கள் பாடல்கள் புனைவார்கள். ஆனால், ஒரு ஆணாக நிலவை வரித்து எழுதப்பட்ட ஒரே திரைப்படப் பாடல் இதுதான் என்பது இதன் சிறப்பம்சம். இந்தப் பாடல் அவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்.
எங்கோ தொலைவில் இருந்துகொண்டு அமுதக் கதிர்களைப் பொழியும் நிலவே! நீ அருகில் வராமல் இருப்பதன் காரணம் என்ன? மனம் நிறையக் காதலைச் சுமந்துகொண்டு உன் வருகையை எதிர்பார்த்து ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்த அல்லி மலரைப் பார்.
‘புத்தம் புதிதாக மொட்டவிழக் காத்திருக்கும் இந்த அல்லி மலர் வாடி வதங்கிப் போய்விடாமல் நான் இருக்கிறேன் கண்ணே உனக்கு என்று புன்னகை தவழும் முகத்தைக் காட்டி ஆறுதல் கூறி அரவணைக்க அருகில் வராமல் வெகு தொலைவில் இருப்பது ஏனோ?’ என்று நிலவைக் கேட்பது போல அவனிடம் கேட்கிறாள் அவள்.
அப்போது வெண்மேகத் திரைக்குள் அந்த நிலவு ’மகன்’ மறைகிறான்.
அந்தக் கணநேரப் பிரிவு அல்லி மலரைத் தாக்கியதோ இல்லையோ நமது நாயகியை வெகுவாகத் தாக்கிவிடுகிறது. மலரின் மனத்தில் ஆசைக்கனலை மூட்டிவிட்டு இப்படி மறைந்தே போய்விட்டாயே! இது நியாயமா? இந்த மலரின் இளமை வளமும் இனிமை நினைவும் இன்னும் எத்தனை காலத்துக்கு நிலைத்திருக்கப் போகிறது? காலையில் கதிரவன் வந்தவுடன் கனவைப் போல, கதையைப் போல முடிந்தே போய்விடுமே.
அப்படி ‘தனது இனிய கற்பனைகளும் இளமையும் ஒரு கனவாக, கதையாக முடிவதற்குள் வந்து சேர வேண்டும்’ என்று நிலவுக்குச் சொல்வதுபோல எங்கோ இருக்கும் அவனுக்குக் கோரிக்கை வைத்துப் பாடலை முடிக்கிறாள் நாயகி.
காதுகளைச் சுகமாக வருடும் வண்ணம் மோகன ராகத்தில் ஹிந்துஸ்தானி கலப்போடு இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களின் அருமையான இசையமைப்பில் இசையரசி சுசீலாவின் குளுமைக் குரலில் 1957-ம் வருடம் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் இடம் பெற்று பெருவெற்றிபெற்ற அந்தப் பாடலின் வரிகள்...
‘அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ ...... அருகில் வராததேனோ..
இதயம் மேவும் காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல் புன்னகை வீசி ஆறுதல் கூற...
அருகில் வராததேனோ …..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா..............
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே..
அருகில் வராததேனோ ..’
படத்தில் இது இரு முறை வரும் பாடல்.
முதலில் இனிமைச் சூழலில். இரண்டாம் முறை சோகச் சூழலில் பாடுவதாக அமைந்த பாடல். பாடியிருப்பவர் பி. சுசீலா என்னும்போது எப்பேர்பட்ட உணர்வும் அநாயாசமாக வெளிப்படுவதில் அதிசயமேது? படம் வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் இன்றும் இளமை மாறாமல் உலா வந்துகொண்டிருக்கும் பாடல் இது.
ஆம், நிலவுக்கு வயதாவது இல்லை தானே?
தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT