Published : 19 Jul 2019 10:35 AM
Last Updated : 19 Jul 2019 10:35 AM
எஸ். வி. வேணுகோபாலன்
சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராஜா’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியையே போய்ப் பார்த்த பள்ளி மாணவப் பருவம் என்னுடையது. அதில் எஸ்.வி.ரங்கா ராவ் வில்லனாகத் தோன்றியதை மட்டும் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன் காதலனை மீட்கத் தன்னையே விலையாகக் கொடுத்து நடனமாடும் இளம் பெண்ணோடு அவர் மயங்கிக் கிறங்கி நடித்த காட்சியில் கழன்று போயிருந்தேன்.
நடிப்பை நடிப்பாகப் பாராது, கலைஞர்களை உளமார நேசித்து ஆசையோடு எதிர்பார்த்து, உரிமையோடு மனதுக்குள் சண்டையிட்டபடி ரசித்த காலம் அது. எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், எஸ்.வி ராமதாஸ்,
எஸ்.வி.ரங்கா ராவ் என்று ஏதோ ‘நர்சரி ரைம்’ சொல்வதுபோல் அக்காவோடும் அண்ணனோடும் நெருங்கிய உறவினர்களோடும் பித்துப் பிடித்த மாதிரி சொல்லிச் சொல்லி, சினிமாவே வாழ்க்கை என்பது மாதிரி இருந்த பருவம் அது. கதாநாயகர்களைக் கடந்து, கதையோட்டத்தில் முக்கிய இடம்பெறும் கதாபாத்திரங்களில் நடிப்போரையும் கூர்ந்து கவனித்து அவர்களைப் போலவே வீட்டில் நடித்துக் காட்டி உற்சாகத் துள்ளல் போட்ட நாட்கள். எஸ்.வி.ரங்கா ராவும் என் பால்யத்தில் என்னை ஆக்ரமித்திருந்தார். அதனால்தான் அப்படி 'கச்சாமுச்சா' வேடங்களில் அவர் நடிக்கலாமா என்று தனிப்பட்ட கோபம் வந்தது.
கவனத்தைக் குவிக்கும் நடிப்பு
திரையில் தாம் தோன்றும் காட்சியில் அவரை யாரும் கவனிக்கத் தவற இயலாதபடிக்கான உயரம், உடல் மொழி, வித்தியாசமான குரல், அசத்தலான முக பாவம், காத்திரமான நடிப்பு, நேர்த்தியாகப் பார்வையாளரது கவனத்தைத் தன்னை நோக்கிக் குவிய வைத்துவிடும்படியான இருப்பு, இத்தனையும் துருத்திக்கொண்டிராத தன்னியல்பான பங்களிப்பு... அதுதான் ரங்கா ராவ்.
‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில், நாகேஷ் முதன்முறை ஸ்டுடியோவுக்குள் நுழைந்து நடிக்கும் காட்சியில் இயக்குநராக ரங்கா ராவ். நாகேஷ் - மனோரமா இருவரது அட்டகாச நடிப்பில் பின்னி எடுக்கும் திரைக்கதையில் தமக்கான கதாபாத்திரத்தை வழங்கும் விதத்தில் இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியாதபடி நடித்திருப்பார். நவரசம் என்ற வசனத்தை மனோரமா நாராசமாக ஒலிக்கும்போது, தலையில் அடித்துக்கொண்டு, "அம்மா...அது நாராசம் இல்லம்மா, நவரசம்...இது தமிழ்ப் படம்மா...மத்த படத்துல எப்படி வேணா பேசு...என் படத்துல தமிழ் பேசும்மா.." என்று கெஞ்சுவார்.
அந்த இடத்தில் நாகேஷ், "சார் எனக்கு ஒரு சந்தேகம்.." என்று சொல்லவும், அலுப்போடு, "சொல்லப்பா" என்று கேட்பார். "இந்தப் படத்துல தனியா நான் ஒரு காமெடியன் எதுக்கு, இந்தம்மா தமிழ் பேசுறதே போதாதா?" என்று சொல்வதை ரசிக்கவும் மாட்டாமல், சகிக்கவும் கூடாமல் ரங்கா ராவ் சலிப்பு எனும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் இடம், அந்தக் காட்சியில் பிடிபட வேண்டிய நகைச்சுவையை அநாயாசமாகக் கூட்டிவிடும்.
திரையுலகின் கடோத்கஜன்
‘சபாஷ் மீனா’வின் முழு நீள அபார நகைச்சுவை வெளிப்பாடுகளில் சரோஜாதேவியின் தந்தையாக ரங்கா ராவ் தோன்றும் இடங்கள் வெடிச்சிரிப்பில் சிதறும். தங்கள் கல்லூரியில் நடத்த இருக்கும் நாடகம் பற்றி சரோஜா தேவி அவரிடம் விவரித்துக்கொண்டிருக்கும்போது சந்திரபாபு நுழைவார். சிவாஜி கணேசனுக்கு மாற்றாக அவர் அங்கே வந்திருப்பவர். “உனக்கென்னப்பா வேஷம்?” என்று சகஜமாக ரங்கா ராவ் அவரைக் கேட்கும் இடம், அத்தனை இயல்பாக இருக்கும்.
திரையுலகின் கடோத்கஜனுக்கு அந்த வேடமே கிடைத்துவிட்டபின், வேறென்ன சொல்ல? ‘மாயா பஜார்’ படமே அவரது அராஜக அட்டகாசங்களாலும், சமதையான சாவித்திரியின் நடிப்பாலும், மென்மையான காதல் மன்னன் ஜெமினி கணேசனின் இருப்பினாலும் புகழ்பெற்றது. என்றாலும், ‘கல்யாண சமையல் சாதம்' என்று திருச்சி லோகநாதன் எடுத்துக் கலக்கும் அற்புத பாடலுக்கு அவரைக் காட்டிலும் வேறு யார் கடோத்கஜன் என்று நாம் கண்டிராத கதாபாத்திரம் ஒன்றை நடிப்பின் மூலம் நம்ப வைத்திருக்கமுடியும்!
ஏற்கெனவே விரிந்த தாமரைக் கண்களை இன்னும் அகலமாக விரித்து ‘அங்கார பஜ்ஜி அங்கே... சுங்கார சொஜ்ஜி இங்கே...!' என்று ஒவ்வொரு பலகாரமாக உருட்டி உருட்டிப் பார்த்தபடியும், திரட்டித் திரட்டி விழுங்கியபடியும், மீசையை மறவாமல் ஒதுக்கி சரி செய்தபடியும், ஆகாரத்தை நின்று நிதானித்து உள்ளே தள்ளி ஒரு புன்னகை சிந்தி உணவை ரசித்தபடி, சமையலறையில் அவர் நிகழ்த்தும் ரகளையை எந்த வயதினரும் குழந்தை போல விழுந்து விழுந்து சிரித்து ரசித்த காலம் பொன்னானது! அந்தக் காட்சியின் முத்தாய்ப்பு, தான் தன்னுடலை உணவு உண்பதற்காகப் பெரிதாக்கிக்கொண்டுவிட மெலிந்து சிரித்துத் தோன்றும் தனது கதாயுதத்தைப் பரிதாபமாகப் பார்த்துச் சிரிக்குமிடம். புராணக் கதாபாத்திரங்களுக்கு, தந்தை முத்திரை நடிப்புக்கு அவரே இணை.
நடிப்புலகின் மூத்த அண்ணன்
‘அன்புச் சகோதரர்கள்' படத்தில் பாசமிக்க அண்ணனாகத் தோன்றும் ராவ், தமது வாழ்க்கைக் கதையை கண்டசாலா குரலில் ‘முத்துக்கு முத்தாக' எனும் திரைப்பாடல் வழி கடத்தும் பாங்கு அபாரமானது. அவரது பாணியைக் கொண்டாடிப் பேச இன்னும் எத்தனை எத்தனை படங்கள்.. எத்தனை எத்தனை அருமையான வெளிப்பாடுகள்..
‘ படிக்காத மேதை’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் தனித்துவமான குரலில் ஒலிக்கும் மகாகவியின் அற்புதமான ‘கண்ணன் என் சேவகன்’ எனும் கவிதையின் இசை மொழிக்கு, தனது ரங்கனை கண்ணனாகக் காணும்
எஸ்.வி.ரங்கா ராவின் நடிப்பு, முரட்டு இதயத்தையும் இளக்கி உருக்கிவிட வல்ல தன்னியல்பான ஒன்று. ‘நம் நாடு’ படத்தில் வில்லன் வேடத்திலும் ஒரு தனித்துவ முத்திரை பதித்திருப்பார்.
நகைச்சுவை, பாசம், ஆத்திரம், முரட்டுக் கோபம், ஆதங்கப் பெருமூச்சு, பேரமைதி என எத்தனையோ உணர்ச்சிகளை வண்ணங்களாகக் குழைத்து அவர் திரையில் தீட்டிய சித்திரங்கள் வரும் தலைமுறைக்கு நடிப்புக்கலையின் பாடம். தாமே சிறந்த கதாசிரியராக, கவிஞராக, பன்முக ஆற்றல் நிரம்பியவராக, ஆனால் எளிய ஆளுமையாக வாழ்ந்த மாபெரும் கலைஞன்.
தொடர்புக்கு: sv.venu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT