Last Updated : 17 Jul, 2015 11:45 AM

 

Published : 17 Jul 2015 11:45 AM
Last Updated : 17 Jul 2015 11:45 AM

என்னோட கணக்கே வேற!- நடிகை மகிமா சிறப்பு பேட்டி

பள்ளியிறுதி வகுப்பில் கதாநாயகியாக அறிமுகமாகி, கல்லூரியில் நுழையும்போது பரபரப்பான கதாநாயகி ஆகிவிடுகிறார்கள் கேரளத்தின் அணங்குகள். நடித்துக்கொண்டே படிப்பிலும் ஒரு கை பார்க்கும் கதாநாயகிகளில் வரிசையில் லட்சுமி மேனனைத் தொடர்ந்து மகிமாவும் இடம்பெற்றிருக்கிறார். ‘சாட்டை’ படத்தில் அறிவழகியாக அறிமுகமாகித் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மகிமாவின் கைவசம் தமிழ், தெலுங்கு என நிறையப் படங்கள். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

ஒரே சமயத்தில் படிப்பையும் நடிப்பையும் தொடர்வது கஷ்டமாக இல்லையா?

சின்ன வயசிலேர்ந்து நடிகை யாகணும்னு ஆசை. படிக்கவும் விரும்பினேன். என்னை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டாங்க. ஆனால், என்னோட ஆசையைத் தெரிஞ்கிட்டவுடனே அம்மா, அப்பா தடை போடல. படிப்பை விடவும் மனசில்ல. அதான் கல்லூரி படிப்பையும் தொடர்றேன். இப்போ பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன்.

கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு?

விஜய் சேதுபதியோட ‘மெல்லிசை’ படத்துல நடிச்சு முடிச்சுட்டேன். அப்புறம் ‘புரவி எண் 150சிசி’ன்னு ஒரு படம். தனுஷ்-வெற்றி மாறன் தயாரிப்பில உருவாகும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். அதுல அட்டகத்தி தினேஷ் ஜோடி. இந்தப் படத்துல கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். ரொம்பத் துடுக்குத்தனமாக, வாயடிக்கிற, சாவு வீட்டுல பேண்டு வாசிக்கிற கேரக்டர். ரவுடித்தனம் பண்ற பாத்திரம்னு வைச்சிக்குங்களேன். அடுத்தபடியா சமுத்திரக்கனி இயக்குற ‘கிட்ணா’ படத்தில் நடிக்கப்போறேன்.

இத்தன தமிழ் படங்களோட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரின்னு ஐந்து மொழிகள்ல தயாராகிட்டு இருக்கிற ஒரு படத்துலயும் பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். இயக்குநர் பூரிஜெகன்நாத்தோட தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ. வினோத் விஜயன் இயக்குறார். ராஜீவ் ரவின்னு டோலிவுட்ல பெரிய கேமராமேன். அவர் ஒளிப்பதிவு பண்ற படம். அதுலயும் நான் பிஸி.

குடும்பப் பெண்ணா நடிச்சிட்டு ரவுடி வேடத்துக்கு மாறிட்டீங்களே?

உண்மைதான். தொடர்ந்து எனக்கு வந்த கதாபாத்திரம் எல்லாம் ஹோம்லியாவே வந்துச்சி. வர கதாபாத்திரங்களை என்னால விடவும் முடியலை. ஒரே மாதிரி கேரக்டர் வரக் கூடாதேன்னு பயமாவும் இருந்துச்சு. அப்போதான் ‘அண்ணனுக்கு ஜே’ கதை என்னை எடக்கு மடக்கான கேரக்டரா காட்டும்ன்னு தெரிஞ்சதும் உடனே சரின்னு சொல்லிட்டேன்.

சமுத்திரக்கனி இயக்குற கிட்ணா படத்தில் நீங்க டபுள் ரோல் செய்யப்போறீங்களாமே?

ஆமாம், டபுள் ரோல்தான். படப்பிடிப்பு இன்னும் தொடங்கல. இந்தப் படத்துல சமுத்திரக்கனியும் நடிக்கிறாரு. இது ஹீரோ-ஹீரோயின் சப்ஜெக்ட் இல்லை. அப்பாவுக்கும் பொண்ணுங்களுக்கும் இடையில நடக்குற கதை. இந்தப் படத்துல முக்கியமாக நாலு பாத்திரங்கள் இருக்கு. சமுத்திரக்கனியோட மனைவியா தன்ஷிகா, அப்புறம் நான். இதுக்கு மேலே கதையைப் பத்தி வேற எதுவும் கேட்காதீங்க. யாருக்கிட்டயும் கதையப் பத்தி மூச்சு விடக் கூடாதுன்னு இயக்குநர் சொல்லியிருக்கார்.

சமுத்திரக்கனி படத்துல உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குதே, எப்படி?

‘சாட்டை’ படத்தில் அவர்கூட சேர்ந்து நடிச்சேன். அந்தப் படம் பண்ணிக்கிட்டு இருக்குறப்பவே, ‘என்னோட அடுத்த படத்துல நீதான் கதாநாயகியா நடிக்கிறே’ன்னு சொன்னாரு. அவரு ஏதோ சும்மா சம்பிரதாயத்துக்குச் சொல்றாருன்னுதான் நினைச்சேன். ‘கிட்ணா’ ஆரம்பிக்க அவரு முடிவு பண்ணவுடனே எனக்கு போன் பண்ணி தயாரா இருன்னு சொன்னாரு. சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டார். ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ஏன்னா அந்த மாதிரி ஒரு கதை.

பல புதுமுகங்கள் வந்த வேகத்துல காணாமல் போயிடுறாங்க. நீங்க தாக்குப்பிடிக்கிற ரகசியம் என்ன?

கிடைக்கிற கேரக்டரை நச்சுன்னு பண்ணிடணும். நமக்காக ரீஷூட்டெல்லாம் செய்ய மாட்டாங்க. அதனால் நடிப்புல உஷாரா இருக்கணும். அப்படிப் பண்ணினாத்தான் மகிமா இந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பா, ஒழுங்கா நடிப்பான்னு என்னைக் கூப்பிடுவாங்க. என்னோட கேரக்டருக்கு ஃபேவரா நடிக்கிறேன்.

முடிஞ்சவரைக்கும் கேரக்ட்டரா தெரிய முயற்சி பண்றேன். அதுக்கு மேலே இதுல ஒரு ரகசியமும் இல்லை. எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்கிறதைவிட எத்தனை நல்ல படத்துல நடிச்சோம்ன்னு ஒவ்வொரு வருஷ முடிவுலயும் எண்ணிப்பார்க்கணும். அந்தக் கணக்கு உதைக்கக் கூடாது. சிம்பிள்.

அட்டகத்தி தினேஷ், விஜய் வசந்த், சமுத்திரக்கனி, விஜய் சேதுபதின்னு முன்னேறி வந்துட்டீங்க? அடுத்து ரஜினிதானா?

என்ன இப்படி சொல்லிட்டீங்க. ரஜினி என்னோட கனவு ஹீரோ. அவரோட படத்துல ஒரு சின்ன ரோல் கிடைச்சாலும் போதும். அதுதான் என்னோட ஒரே பெரிய ஆசை. ரஜினிக்கு அப்புறம் ‘தல’ பிடிக்கும். அவரோட ஸ்டைலு தனிதான். விஜய்யோட ஆக்‌ஷன் சூப்பரா இருக்கும். தனுஷோட டான்ஸ்ன்னா உசிரு. சூர்யா ரொமான்ஸ் காட்சிகள்ல பட்டையைக் கிளப்பிடுவாரு, இப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் பிடிக்கும். இவங்க எல்லார்கூடேயும் நடிக்கணும்னு ஆசை இருக்கு.

உங்களைப் பத்தி இதுவரைக்கும் எந்தக் கிசுகிசுவும் வரலியே?

கிசுகிசு வந்தாத்தான் நம்ம கிராஃப் மேல ஏறுதுன்னு அர்த்தமா என்ன? இதுவரைக்கும் கிசுகிசு எதுவும் வரல. அப்படியே வந்தாலும் பரவாயில்ல. சமாளிச்சிக்கிடலாம். அப்படி ஏதாவது வந்துச்சுன்னா எனக்கொரு மெசேஜ் போடுங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x