Published : 31 Jul 2015 11:50 AM
Last Updated : 31 Jul 2015 11:50 AM

கல்யாணம் செய்யாமலே இருக்கலாம்!- நடிகர் ஆர்யா சிறப்பு பேட்டி

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் ‘பாலுச்சாமி’ எனும் புரட்சிக்காரராக அலட்டல் இல்லாத நடிப்பால் கவர்ந்தார் ஆர்யா. இன்னொரு பக்கம் இயக்குநர் ராஜேஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சரவணன் எனும் வால் பையனாக நடித்து முடித்திருக்கிறார். திரைப்படத்துக்கு வெளியே சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்க மெடலோடு திரும்பியிருந்த ஆர்யாவை ‘தி இந்து’ தமிழுக்காக சந்தித்தோம்.

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?

‘பாஸ் (எ) பாஸ்கரன்' படப் பாணியில் உள்ள கதைதான். ஆனால் திரைக்கதை ரொம்பப் புதிதாக இருக்கும். நட்பு, காதல் இரண்டையும் கலந்து யதார்த்தமாகச் சொல்லியிருக்கோம். ஆனால், ராஜேஷ் பாணி காமெடி கலாட்டா கண்டிப்பா இருக்கும். வாசுவாக சந்தானம், சரவணனாக நான். சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டதால் முதலில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். இருவருமே இணைந்து மொபைல் கடை வைத்திருக்கும் நண்பர்களாக நடித்திருக்கிறோம்.

இது உங்களுடைய 25-வது படம். திரையுலகிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

தினமும் கற்றுக்கொள்கிறேன், ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக இருக்கிறது. நான் சினிமா பின்னணியிலிருந்து வராததால் சினிமாவில் நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறேன். ஒரு குடும்பமாக இருக்க வேண்டும், என்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது, நான் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

ஆர்யா, உதயநிதி போன்றவர்களோடு மட்டும்தான் இனி காமெடியனாக நடிப்பேன் என்று சந்தானம் சொல்லியிருக்கிறாரே?

சந்தானம் நாயகனுக்கு நண்பனாக நடிக்கும்போது, நாயகன் மாதிரியே இருப்பார். இது எல்லா காமெடி நடிகர்களுக்கும் வாய்ப்பதில்லை. அவரது இந்தத் தோற்றம் ஒரு பெரிய ப்ளஸ். ‘பாஸ் (எ) பாஸ்கரன்', ‘ராஜா ராணி' இப்படி என்னோடு நடிக்கிற படங்களுக்கு சந்தானத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

நான் என்ன உடை, காலணிகள் போடுகிறேனோ அதையே வேறு ஒரு கலர் வாங்கி போடச் சொல்வேன். இயக்குநர் ராஜேஷ் பண்ற படங்கள் எல்லாமே காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருக்கும்போது, சந்தானத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும். நாயகன் சொல்றதை விட காமெடி வசனங்களை சந்தானம் சொன்னால்தான் நன்றாக எடுபடும். ராஜேஷ் படத்தைப் பொறுத்தவரை சந்தானம்தான் ஹீரோ. மறுபடியும் சின்ன சின்ன பாத்திரங்கள் பண்ணும்போது சந்தானத்துக்கும் ஒரே மாதிரி படங்கள் பண்ணுவது போர் அடித்திருக்கும். அதனால் முக்கியமான படங்கள் மட்டும் பண்ணலாம் என்பதுதான் சந்தானத்துடைய ஐடியா.

நிறைய படங்களில் சம்பளம் வாங்காமல் நட்புக்காக சில காட்சிகள் நடித்துக் கொடுக்கிறீர்களாமே?

ஒரு நாள் உதவிக்குப் போயிட்டு சம்பளம் வாங்கினால் நல்லாவா இருக்கும். இயக்குநர், நடிகர் அல்லது தயாரிப்பாளர் இப்படி யாராவது ஒருத்தர் எனக்கு நண்பராக இருப்பார்கள். நான் ‘சிவா மனசுல சக்தி' படத்தில் ஒரு சிறு வேடம் பண்ண போனபோது கிடைத்த வாய்ப்புதான் ‘பாஸ் (எ) பாஸ்கரன்'. சினிமாவில் பணம் என்பதையெல்லாம் தாண்டி நண்பர்களை சம்பாதிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம்.

நிறைய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். “மச்சான், ஒரு நாள் நடித்துக் கொடுடா” என்று கேட்கும்போது, முடியாது என்ற வார்த்தையைச் சொல்ல என் மனது கேட்க மாட்டேன் என்கிறது. என்கிட்ட யாரும் கடன் கேட்கலையே. நேரம் கேட்கிறார்கள் என்னிடம் இருக்கிறது கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

எப்போது திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

கல்யாணம் என்பது திட்டமிட்டு நடப்பது கிடையாது. அதுவா நடக்கணும். வயதாகிவிட்டது என்றெல்லாம் திருமணம் பண்ணிக்க முடியாது. திருமணமான ஒரு வருடத்தில் விவாகரத்துக்காகப் போவதற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை. மனதுக்கு ஒருவரைப் பிடித்து, அவருடன் இணைந்து வாழ மனம் விரும்ப வேண்டும். கல்யாணமாகி சில வருடங்களில் விவாகரத்து கேட்பதற்கு அதைச் செய்யாமலே இருக்கலாம். குடும்பச் சூழ்நிலை, வேலை சூழ்நிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு திருமணம் செய்துகொள்வதில் அர்த்தமே இல்லை.

உங்கள் தோழி நயன்தாரா காதலில் விழுந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றனவே?

அப்படியா..!? நயன்தாராவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களில் நான் தலையிடுவதில்லை. நண்பரா, காதலரா அதெல்லாம் அவருடைய விருப்பம். அதை நாம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்றெல்லாம் எண்ணுவதே முதலில் தப்பு.

உங்களை ‘பிளே பாய்’ என்று சித்தரிக்கிறார்களே. அதை வெறுக்கிறீர்களா அல்லது ஏற்றுக்கொள்கிறீர்களா?

அய்யோ இப்படி சொல்றாங்களே, ரசிகர்கள் என்ன நினைப்பாங்களோ என்றெல்லாம் நான் யோசிச்சதே கிடையாது. இதெல்லாம் யோசித்தால் நான் வேலை செய்யவே முடியாது. எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல், வேறு வேறு விஷயங்கள் பண்ணிக்கொண்டிருக்கும்போது அதுவே ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடும். எனக்குப் பிடித்ததை நான் பண்றேன், சந்தோஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான்.

அடுத்த வருடம் சைக்கிள் போட்டிக்கு என்ன திட்டம்?

சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள போவது மட்டுமன்றி ‘அயர்ன் மேன்’ (IRON MAN) என்றொரு பந்தயம் இருக்கிறது. அதில் தற்போது மிலிண்ட் சோமன் ஜெயித்திருக்கிறார். அந்த போட்டியிலும் கலந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். அதற்கான பயிற்சியில் இறங்கியிருக்கிறேன்.

நடிகர் சங்க விவகாரத்தில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால், ஒரு குழுவாகப் பணியாற்ற இருக்கிறோம். இளம் நடிகர்கள் ஒன்றாக இணைந்து சங்கத்துக்காகப் படம் நடிப்பது சாத்தியம் இல்லை என்கிறார்கள். கண்டிப்பாக சாத்தியம்தான். நான், விஷால், கார்த்தி எல்லாம் எங்களுடைய படங்களை நாங்களே தயாரிக்கிறோம். அதே போல சங்கத்துக்காகத் தயாரிப்பதில் தப்பில்லையே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x