Published : 19 Jun 2015 12:22 PM
Last Updated : 19 Jun 2015 12:22 PM

உடல் ஒரு கோயில்!- நடிகை ரிச்சா பலோட் சிறப்பு பேட்டி

விஜய் நடித்த 'ஷாஜகான்' படத்தில் 'அச்சச்சோ புன்னகை' பாடல் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் ரிச்சா பலோட். தற்போது 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

'யாகாவாராயினும் நாகாக்க' வாய்ப்பு எப்படி அமைந்தது?

முதலில் நான் உங்கள் ரசிகன். பிறகுதான் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கதையைச் சொன்னார் இயக்குநர் சத்யா. கதையைக் கேட்ட இரவன்று எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் காலை அவருக்கு போன் செய்து இப்படத்தை நான் பண்ணுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். இப்படத்தில் நான் நாயகனுக்கு அக்கா. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் மாட்டிக்கொண்டால் என்ன செய்வாள் என்ற சவாலுக்குரிய பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

தமிழில் ஏன் தொடர்ச்சியாகப் படங்கள் பண்ணவில்லை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டேன். இதனால் தொடர்ந்து வெவ்வேறு மொழிப் படங்களின் படப்பிடிப்பு இருக்கும். உங்களுக்கு இங்கு மட்டும் பார்க்கும்போது, நான் ஏதோ நடிப்பை விட்டுப் போய்விட்டது போல தோன்றியிருக்கலாம்.

தவிர எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிவிட்டது. காதல் திருமணம்தான். என்னுடைய கணவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர். மிகவும் அமைதியானவர், திரையுலகைச் சார்ந்தவர் அல்ல. அகமதாபாதில் பொறியாளராக இருக்கிறார். அவருடைய பெயர் ஹிமாஞ்சி பஜாஜ். திருமணமான உடனே “உனக்கு நடிப்புப் பிடிக்கும். ஆகையால் நடிப்பதை நிறுத்தாதே” என்று கூறிவிட்டார்.

காதல் மலர்ந்த கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

எனது கணவருக்கு உடலமைப்பைப் பேணுவது என்பது மிகவும் பிடிக்கும். உடல் ஒரு கோயில் என்பார். நானும் உடலமைப்பு விஷயத்தில் அப்படிதான். நாங்கள் சந்தித்ததே உடற்பயிற்சிக் கூடத்தில்தான். அது காதலிக்க ஏற்ற இடம் அல்ல. நண்பர்களான உடன் “நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“நடிகை” என்றேன். அவருக்கு நான் ஒரு நடிகை என்பதே நாங்கள் பேச ஆரம்பித்த பிறகுதான் தெரியும். காதலிக்க ஆரம்பித்தவுடன், எங்கள் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்தார்கள். அவரிடம் எனக்குப் பிடித்ததே, ‘‘உனக்கு என்ன பிடிக்குமோ அப்படிதான் நீ இருக்க வேண்டும்’ என்று அவர் கூறுவதுதான்.

அண்ணி, அக்கா வேடங்களுக்குத் தயாராக இருக்கிறீர்களா?

எனக்கு நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ச்சியாக நடிப்பேன். கொஞ்சம் வித்தியாசமான பாத்திரங்களை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம். நீங்கள் கூறுவதைப் போல் திருமணத்துக்குப் பிறகு அண்ணி, அக்கா வேடங்கள்தான் வரும் என்பார்கள்.

நான் அதை மாற்ற நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது நான் சொன்ன பிறகுதான் உங்களுக்கே தெரிகிறது இல்லையா? இத்தனை ஃபிட்டாக இருக்கும்போது நல்ல கதாபாத்திரங்களை, ஏன் நாயகி வாய்ப்பைக்கூட, எதிர்பார்ப்பது தவறில்லையே?

அப்படியானால் இன்று யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை?

எனக்கு அஜித்தின் புதிய லுக் மிகவும் பிடித்திருக்கிறது. ‘ஷாஜகான்' முடிந்தவுடன் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. எனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.

விளம்பரங்களை ஒப்புக்கொள்ளும்முன் நட்சத்திரங்களுக்குப் பொறுப்பு இருக்கிறதா இல்லையா ?

நாங்கள் ஒரு நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்துகிறோம் என்றால், அந்த உணவில் என்ன விஷயங்களெல்லாம் கலந்திருக்கின்றன என்பதை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? பொருட்களில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் இல்லையே நாங்கள். ஆனால், இந்த விஷயங்களில் நாங்கள் இனிமேல் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x