Last Updated : 19 Jun, 2015 12:01 PM

 

Published : 19 Jun 2015 12:01 PM
Last Updated : 19 Jun 2015 12:01 PM

திரைப்பார்வை: பைங்கிளிக் காதல்கள்- பிரேமம்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமா நாயகர்களின் படங்களுக்குக் கேரளத்தில் நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைத்துவருகிறது. விஜய்யின் ஆட்டத்துக்கு கேரளத்தில் ரசிகர்கள் அதிகம். விஜய்யின் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு மலையாளத்தின் ஜனப்பிரிய நாயகன் திலீபின் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

அவை பெரிய வெற்றியையும் பெறுகின்றன. திலீபின் சமீபத்திய படங்கள் எல்லாமும் தமிழின் பழைய வெற்றிப் படங்களின் பிரதிகள் எனலாம். தமிழின் குத்துப் பாட்டுக் கலாச்சாரமும் மலையாள ரசிகர்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தமிழ் சினிமா மீதான மலையாள ரசிர்களின் இந்த மோகத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘பிரேமம்’.

மலையாள சினிமாவின் முகம் இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது. சத்யன் அந்திக்காடு, சிபி மலயில் போன்ற இயக்குநர்களின் அழுத்தமான கதைகள் இன்றைக்குள்ள மலையாள ரசிகர்களுக்குத் தேவையில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன இரு இயக்குநர்களின் சமீபத்திய தோல்விகள் மூலம் இதை உணர முடியும். அது மட்டுமல்ல, ‘தட்டத்தின் மறயத்து’, ‘ஒரு வடக்கன் செல்பி’ போன்ற படங்களின் வெற்றி இலகுவான படங்களின் தேவையையும் உணர்த்துகிறது. அதையே உத்வேகமாகக் கொண்டு அல்போன்ஸ் புத்ரன் ‘பிரேமம்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

புதிய அலை சினிமா

தமிழின் புதிய அலை இயக்குநர்களான நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்று குறும்படம் வழியாக சினிமாவுக்கு வந்தவர் புத்ரன். ‘நேரம்’படம் மூலம் மலையாளம், தமிழ் சினிமா உலகிலும் கவனத்தை ஏற்படுத்தியவர். ‘பிரேமம்’ அவருக்குத் துணிச்சலான பரிசோதனைக் களம்.

முழுக்க வணிக வெற்றியை இலக்காகக் கொண்டு இயக்கப்பட்ட படம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோலவே வெளியிட்ட முதல் நாளிலேயே இதுவரையிலான மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடிக்கவும் செய்திருக்கிறது ‘பிரேமம்’.

பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், கல்லூரிக்குப் பிறகான பருவம் என மூன்று பருவங்களின் காதலைச் சொல்லும் படம். ஜார்ஜின் (நிவின் பாலி) இந்த மூன்று பருவங்களையும் மூன்று நாயகிகள் அலங்கரிக்கிறார்கள்.

கதை என்று எதுவும் இல்லை. காட்சிகளின் கோவையாகவே படம் எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக முதல் காதல் ஆலுவா ஆற்றின் கரையில் நடக்கிறது. மேரியாக அனுபமா பரமேஷ்வரன் பள்ளிக்குப் போகும் வழியிலும் டியூஷனுக்கு வெளியேயும் வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

காதலைச் சொல்ல முயல்கிறார்கள். மேரியின் தந்தையிடம் அடி வாங்குகிறார்கள். இந்தக் காட்சிகளில் ஒரே பிரேமுக்குள் இளைஞர்கள் அங்குமிங்குமாக ஓடுகிறார்கள்; குதிக்கிறார்கள்.

ஆல்பங்களின் தொகுப்பு போல மொத்தப் படமும் இருக்கிறது. நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் நடித்த ‘யுவா’ இசை ஆல்பத்தை இயக்கிய அனுபவம் புத்ரனுக்கு உண்டு. அந்த ஆல்பம் அவருக்கு வெற்றியையும் தேடித்தந்தது. அதன் சாயலை ‘பிரேமம்’படத்திலும் காண முடிகிறது.

கமழும் தமிழ் மணம்

மூன்று பருவத்திலும் வரும் நாயகிகள் படத்தை விடவும் பிரபலம் அடைந்திருக்கிறார்கள். மூவரும் புதுமுகங்களாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்ததும் வெற்றியின் அம்சங்களில் ஒன்று.

அனுபமாவின் சுருள் முடி இப்போது கேரள இளைஞர்களின் பேசுபொருள்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அதுபோல சாய் பல்லவியின் முகப் பருவும். சாய் பல்லவி தமிழ்நாட்டுப் பெண். தமிழ்ப் பெண் பாத்திரத்தையே ஏற்றிருக்கிறார். இதுவும் திட்டமிட்ட ஒன்று.

சாய் பல்லவி வழியாக மலையாளிகளின் தமிழ் சினிமா மோகத்தை புத்ரன் நிறைவேற்றியிருக்கிறார். அவர் மூலம் ஏ.ஆர். ரகுமானின் பாடல், இளையராஜாவின் பாடல், தமிழ் வசனங்கள் என அந்தப் பகுதி முழுவும் தமிழ் மணத்தைக் கமழச் செய்திருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் படம் போல, கல்லூரிப் பருவக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒரு தமிழ்க் குத்துப் பாட்டுக்கு சாய் பல்லவி, நிவின் பாலி இருவரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறார் புத்ரன். ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடல் கேரளத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது புத்ரனின் நினைவில் இருந்திருக்கிறது.

கல்லூரிப் பருவக் காதல்தான் படத்தின் பிரதானமான அம்சம். கல்லூரிப் பேராசிரியையான சாய் மீது மாணவனான நிவினுக்குக் காதல் வருகிறது. இந்தப் பகுதியில்தான் மணியம்பிள்ளை ராஜூ, வினய் போர்ட் போன்ற மலையாளத்தின் முக்கிய நடிகர்களும் வந்து போகிறார்கள். இவர்களின் கூட்டணியில் இந்தப் பகுதி சிறப்பாக வந்துள்ளது.

தீர்மானிக்கப்பட்ட வெற்றி

தொழில்நுட்ப ரீதியில் மலையாள சினிமா முன்னேறியிருக்கிறது என்பதற்கான சமீபத்திய சான்று இப்படம். ஆலுவா நதிக் கரையில் தொடங்கி, படம் முழுவதையும் அனந்த் சி சந்திரன் தன் ஒளிப்பதிவால் அழகுபடுத்தியுள்ளார்.

பள்ளிப் பருவக் காட்சிகளில் வரும் டீக் கடையில் இருக்கும் ஒவ்வொரு பலகாரத்துக்கும் (பழம் பூரி, முறுக்கு) டைட் க்ளோஸ் வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் பார்வையாளர்களின் ஞாபகங்களைத் தூண்டுவதற்கு இந்தக் காட்சிகள் உதவக்கூடும். ஆனால், படம் நெடுகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ளோஸ்-அப் காட்சிகள் உறுத்தலாகத் தோன்றுகின்றன.

புத்ரன் ஒரு இசை ஆல்ப இயக்குநர் என்பதால் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முணுமுணுக்கும் வகையில் பாடல்கள் இருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.

“முதிர்ச்சியற்ற வரிகளே போதும் எனத் தீர்மானித்தோம்” எனப் பாடலாசிரியர் சபரீஷ் வர்மா ஒரு நேர்காணலில் சொல்கிறார். ராஜேஷ் முருகேசன் இசை அமைத்திருக்கிறார். ஏற்கெனவே கேட்ட பிரபலமான பாடலின் தன்மையுடன் எல்லாப் பாடல்களையும் அமைத்திருக்கிறார்.

வசனத்தில் இதே சூத்திரத்தைப் பிரயோகித்துள்ளார்கள். இவை எல்லாமும் மலையாள ரசிகர்களுக்குப் புதிய, ரசிக்கத் தக்க அனுபவமாக இருக்க வேண்டும் என்பதைத் திரையரங்கில் எழும் கைத்தட்டல்கள் மூலம் உணர முடிகிறது.

ஆனால், இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் குழுவினர் இப்படியான படத்தை உருவாக்கப்போகிறோம் என்ற தீர்க்கமான, திடமான உணர்வுடன்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர்கள் நினைத்ததுபோல ‘பிரேமம்’வணிக வெற்றியையும் அடைந்திருக்கிறது. ஆனால், ஆரோக்கியமான மலையாள சினிமா ஒரு பரமபத விளையாட்டென்றால் ‘பிரேமம்’ பாம்பின் தலை மீது வைக்கப்பட்ட காய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x