Published : 12 Jun 2015 10:27 AM
Last Updated : 12 Jun 2015 10:27 AM
கம்பீரமான தோரணையுடன் இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பாகுபலி’. இந்தப் படம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்:
* 'பாகுபலி' என்றால் 'பலம் பொருந்திய கைகளை உடையவன்' என்று அர்த்தம். அதாவது, தோள் வலிமை கொண்டவன்.
* பிரபாஸ் பாகுபலியாகவும், சத்யராஜ் கட்டப்பாவாகவும், ராணா பல்லாலத் தேவனாகவும், ரம்யா கிருஷ்ணன் சிவகாமியாகவும், அனுஷ்கா தேவசேனாவாகவும், தமன்னா அவந்திகாவாகவும், நாசர் பிங்கலத் தேவனாகவும், சுதீப் நாசிம் கானாகவும் வரலாறும் கற்பனையும் கலந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
* படத்தின் முதல் பாகத்தில் தமன்னாதான் நாயகி. அனுஷ்காவும் படத்தில் இருக்கிறார் என்றாலும் இரண்டாம் பாகத்தில்தான் அவரது கதாபாத்திரம் முழுமையாக இடம்பெறுகிறது.
* முழுக் கதையையும் எழுதி முடித்த பின் அதை ஒரே பாகமாகப் படமாக்கினால் முக்கியமான பல காட்சிகளையும், சில பாத்திரங்களையும் நீக்க வேண்டிய நிலை ஏற்பட, கதையைச் சிதைக்க வேண்டாம் என்று முடிவு செய்து இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ராஜமௌலி.
* இப்படத்தின் கதையை எழுதும்போது இவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக மாறும், இவ்வளவு பெரிய அரண்மணை செட் போட வேண்டும் என்று எதையுமே முடிவு செய்யவில்லையாம் ராஜமெளலி.
* முதலில் முழுக்கதையையும் எழுதி முடித்துவிடலாம் என்று தீர்மானித்து எழுதி முடித்த திரைக்கதையே ‘பாகுபலி’. முன்பு மஹாதீரா இப்போது பாகுபலி போன்ற கதைகளைப் புகழ்பெற்ற புராண, வரலாற்றுச் சித்திரக் கதைகளைப் படித்த தாக்கத்தில் எழுதினேன் என்கிறார் இயக்குநர்.
* முதலில் கதையை எழுதி முடித்தவுடன், பாத்திரங்கள் எல்லாம் இப்படி இருக்க வேண்டும் என்று மூன்று மாதங்கள் தன் அப்பாவுடன் ஆலோசனை செய்திருக்கிறார் ராஜமெளலி. காரணம் இப்படத்தின் மூலக்கதை அவருடைய அப்பாவுடையதாம்.
* தமிழ் பதிப்புக்கான வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். சங்க காலத்துத் தமிழும் இல்லாமல் இடைக்காலத் தமிழாகவும் இல்லாமல் ரசிகர்களுக்குப் புரிவதுபோல எழுதியிருக்கிறாராம். தமிழ் வசனங்களை இப்படித்தான் பேச வேண்டும் என்று வாட்ஸ் - ஆப் மூலமாக உச்சரிப்புடன் தெலுங்கு நடிகர்களுக்கு அனுப்பிவைத்து அவர்கள் எளிதாக மனப்பாடம் செய்ய உதவியிருக்கிறார்.
* இப்படத்தின் 95 சதவிகித கிராபிக்ஸ் காட்சிகளை இந்தியாவில் உள்ள திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்தே முடித்திருக்கிறார்கள்.
* படத்தின் முன் தயாரிப்பு வேலைகளுக்கு மட்டும் ஒரு வருடம் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.
* ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கும் ‘பாகுபலி’ படத்தை சர்வதேச அளவிலும் வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.
* இரண்டாம் பாகத்துக்காக இன்னும் 130 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
* பாகுபலி பாத்திரத்தைப் பற்றி சத்யராஜ் ஒரு காட்சியில் வானளாவப் புகழ்ந்து பேச வேண்டும். சத்யராஜ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதையும் எம்.ஜி.ஆரின் தீவிரமாக ரசிகன் என்பதையும் அறிந்துகொண்ட ராஜமெளலி, “சார்.. நீங்க எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசுவதுபோல நினைத்துக்கொண்டு பேசுங்கள்” என்று கூறி இருக்கிறார் இயக்குநர். காட்சியின் தன்மையை மட்டுமல்லாமல் நடிகனின் உளவியலையும் அறிந்துகொண்டு ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க ராஜமௌலி மெனக்கெடுவதைப் பார்த்து அசந்துவிட்டாராம் சத்யராஜ். சத்யராஜ் இப்படத்திற்காக 100 நாட்கள் நடித்திருக்கிறார்.
* இப்படத்தில் வரும் போர்க் காட்சியைப் படமாக்குவதுதான் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. அக்காட்சிக்காக மட்டும் சுமார் 120 நாட்கள், 2,000 பாடி பில்டர்களை வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மொத்தப் படக் குழுவும் பாராட்டும் ஒரு பெயர் ஸ்ரீவள்ளி. அவர்தான் ‘பாகுபலி’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர். அவர் மட்டும் இல்லையென்றால் போர்க் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கவே முடியாது என்கிறது படக் குழு.
* இந்தியின் முன்னணி தயாரிப்பாளரான கரண் ஜோஹரை இப்படத்துக்குள் அழைத்து வந்தவர் ராணா. இப்படத்தை நான் வெளியிடுகிறேன் என்று வாங்கியிருக்கிறார் கரண் ஜோஹர். ஏற்கனவே 'மஹாதீரா', 'நான் ஈ' போன்ற படங்களைப் பார்த்து ராஜமெளலியை பாராட்டியவர் கரண் ஜோஹர்.
* முதல் பாகத்தின் பட்ஜெட் என்ன என்பதைச் சொல்வது மிகவும் கடினம். இரண்டு பாகங்களையும் முடித்துவிட்டுதான் பட்ஜெட்டைக் கணக்குப் போடவிருக்கிறார்கள். 250 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறது படக் குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT