Published : 04 May 2014 09:14 AM
Last Updated : 04 May 2014 09:14 AM
பெயர் தெரியாத ஊர், மொழி அறியாத மக்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கும் அனாமிகா (நயன்தாரா), அங்கு பணிபுரியும் தனது கணவர் அஜய் சுவாமிநாதனை (ஹர்ஷவர்தன் ரானே) கடந்த இரண்டு வாரங்க ளாகக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போலீஸ், அவளின் கணவரின் சாயலும் ‘பீப்பிள் பிளாசா’வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப் பட்டுவரும் முக்கியக் குற்றவாளி யான தீவிரவாதி மிலன் தாம்ஜியின் சாயலும் ஒத்துப்போகவே இதைத் துருவ ஆரம்பிக்கிறது. விஷயம் பூதாகரமாகிறது.
இதற்கிடையில், ஹைதராபாத் தெருவில் தன்னந்தனியாக அலைந்து திரியும் அனாமிகாவிற்கு உதவி செய்கிறார் இன்ஸ்பெக்டர் சாரதி (வைபவ் ரெட்டி). அவள் தனது கணவனைக் கண்டுபிடிக்கிறாளா? குண்டுவெடிப்பிற்குக் காரணம் யார்? அவளின் கணவரும் தீவிரவாதியும் ஓரே ஆள்தானா? அனாமிகா தனது கணவருடன் மீண்டும் இணைகிறாளா - என்பது தான் கதை.
2012-ம் ஆண்டு இந்தியில் வெற்றி பெற்ற ‘கஹானி’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப் பட்ட இத்திரைப் படத்தை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்திருந்தாலே தேறியிருக்கும். ஆனால் புதுமையைச் சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு கதையைக் கந்தாலாக்கியிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
கஹானியின் கதாநாயகியான வித்யா பாலன் அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணாகக் கொல்கத்தா வில் அலைந்து திரியும்போது ஏற்படும் பரிதாப உணர்வு, காலேஜ் பெண்போல் ஃபேன்ஸி பையைத் தூக்கிக் கொண்டு பட்டையாகக் கண் மையைத் தீட்டிக்கொண்டு அடிக்கடி அழும் நயன்தாராவிடம் ஏற்படவில்லை. சமயத்தில், டிவி சீரியல் ஹீரோயின்களின் ஞாபகம் வந்து போகிறது. தமிழ்த் திரைப்படங்களில் பெண் தெய்வத்தையும் கதாநாயகியையும் ஒப்பிட்டுக் காட்டும் காட்சியை ஒருமுறை காட்டினாலே, ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், நயன்தாராவைக் காட்டும் காட்சிகளுக்கு நிகராகக் ‘காளி’யைக் காட்டுவதற்கான அவசியம் என்னவென்று புரியவில்லை.
அனாமிகாவின் இயல்பில் ஈர்க்கப்படும் இன்ஸ்பெக்டர் சாரதி அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதும், சாரதிக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்துப் பெண்களின் மனம் பற்றி அனாமிகா கொடுக்கும் லெக்சரும் யதார்த்தத்தை விட்டுத் தள்ளியே நிற்கின்றன.
ஹோட்டல் அறையில் வேலை செய்யும் சிறுவனிடம் ஆங்கிலத் தில் பேசச் சொல்வதும், அனாமிகா வின் மொழியே புரியாத இமாம், அவள் கண்ணீர் வழியப் பேசும் வசனத்திற்கு உருகி உதவி செய்வதுமாக லாஜிக்கே இல்லாமல் மேஜிக் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.
‘கஹானி’யில் தன் கணவனைத் தேடும்போது அவள் சந்திக்கும் நபர்களின் மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் அனாமிகா சந்திக்கும் பெரும்பான்மை யான நபர்களை ஏன் இஸ்லாமியர் களாவே காட்ட வேண்டும்? இயக்குநருக்கே வெளிச்சம்.
அனாமிகாவின் ‘சுப்ரபாதம்’ ரிங் டோன், மசூதியின் ஓலி, பின் காளியின் தெய்வீகக் காட்சி என திரும்ப திரும்ப வரும் காட்சிகளில் சலிப்படைந்து படத்தின் முதல் பாதியிலே தியேட்டரை விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள் ரசிகர்கள். முதல் பாதியின் ஆமை வேகமும் பொறுமையைச் சோதிக்கிறது.
தெலுங்கில் ‘ஆனந்த்’, ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் இஸ் ப்யூடிஃபுல்’ என ‘மென்மையான’ திரைப்படங்களை இயக்கிய சேகர் கம்முலாவுடன் கூட்டணியில் இருக்கும் எடிட்டர் மார்தாண்ட் கே. வெங்கடேஷ் இந்த விறுவிறுப்பான திரைக் கதைக்கும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பது படத்திற்குப் பின்னடைவு. இதனைச் சற்றே சமாளித்தி ருப்பது விஜய் சி. குமாரின் யதார்த்தமான ஒளிப்பதிவும் எம்.எம். கீராவாணியின் உயிரோட்டமுள்ள பின்னணி இசையும்தான்.
‘கஹானி’ படத்தில் வசனங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. தமிழில் சில இடங்களில் பரவாயில்லை. ஆனால் தெலுங்கு, தமிழ், இந்தி என்று மாறும் வசனங்களைக் கேட்கும்போது பொறுமை சோதிக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரி அனாமிகாவிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் வசனங்களும், புலனாய்வு அதிகாரி, “இப்படி டிரஸ் போட்டா உன்ன ஏன் கூப்பிட மாட்டாங்க” என்று சொல்வதும் எரிச்சலூட்டுகின்றன. அதற்கு அனாமிகா கொடுக்கும் பதிலடி ஆறுதல் அளிக்கிறது.
‘கஹானி’யில் நாயகியின் பாத்திர வார்ப்பைக் கண்டவர்களுக்கு தமிழில் பாத்திர வார்ப்பு பலவீனமானதாகவே தெரியும். என்றாலும் நயன்தாரா தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பசுபதியின் நடிப்பும் அப்படியே. வைபவ் படம் முழுவதும் தூக்கத் தில் நடப்பவர்போல நடமாடுகிறார்.
தனியாகப் பார்த்தால் வித்தியாசமான கதை, திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, நல்ல நடிப்பு, இசை, ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களைப் பாராட்டலாம். ஆனால் அருமையான திரைக்கதை கையில் கிடைத்தும் அதை நீர்த்துப்போகச் செய்திருப்பதை எப்படிப் பாராட்ட முடியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT