Published : 10 Jun 2015 12:30 PM
Last Updated : 10 Jun 2015 12:30 PM
மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா என்ற கேள்விக்குறியோடு சென்ற வாரம் முடித்திருந்தேன். மெட்டுக்குப் பாட்டு எனும்போது பொதுவாக ஒரு கிளப் டான்ஸ் என்றால் இயக்குநரோடு கலந்து பேசி, இசையமைப்பாளர் மெட்டுப் போட்டு வைத்திருப்பார். கவிஞரிடம் விவரத்தைக் கூறி, அந்த மெட்டை இசைத்துக் காட்டுவார்கள். அந்தத் தத்தகாரத்துக்கு ஏற்ற வார்த்தைகள் துல்லியமாக கவிஞரிடம் இருந்து வந்து விழும். இதுதான் மெட்டுக்குப் பாட்டு!
பாட்டுக்கு மெட்டு என்றால் படத்தின் திரைக்கதையில் வரும் சூழலுக்கு ஏற்ற பாடல். இயக்குநர் கதைக் களத்தின் காட்சியை கவிஞரிடம் கூறி, படத்தில் இந்தச் சூழல் ரசிகனுக்கு உணர்த்தப்படும் வகையில் பாடல் வேண்டும் என்று கேட்பார். கதையின் காட்சியை உள்வாங்கிக்கொண்ட கவிஞர், அதனை மையமாக வைத்து முழு சுதந்திரத்துடன் பாடலை எழுதிக்கொடுப்பார். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள். இதுதான் பாட்டுக்கு மெட்டு!
கவியரசரின் பாடலைக் கேட்டாலே கதையின் ஆழமும், காட்சியின் நேர்த்தி யும் தெரிய வந்துவிடும். பாட்டு கதையோடு இணைந்து வருவதால் மக்கள் மனதில் பதிந்துவிடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ‘பாசமலர்’ படத்தில் அண்ணன் சிவாஜிகணேசன் நடிப்பில் மலரும் பாட்டு,
‘மலர்களைப் போல்
தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான்
என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள்
அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில்
பறந்து சென்றான்…’
- என்ற பாடல் காட்சி. எத்தனையோ ஆண்டுகள் கடந்து சென்றாலும் இந்தப் பாட்டு பசுமரத்தாணிபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோலத்தான் கவியரசு கண்ணதாசனின் பல ஆயிரம் பாட்டுகளும் கதையோடு சேர்ந்து வந்ததாகும். அவருடைய பாட்டில் இலக்கியமும், வாழ்வியலும், தத்துவங்களும் தமிழாக வந்து கொட்டும்.
குற்றால அருவியில் சீசனில்தான் நீர் கொட்டும். ‘கவிஞரின் தமிழ் அருவி 365 நாட்களும் கொட்டும்’. சில காட்சிகளுக்குக் கடகடவென்று மூன்று, நான்கு பல்லவிகளை சொல்லிவிடுவார். ஒன்றுக்கு ஒன்று சிறப்பாக இருக்கும். அதில் எதைத் தெரிவுசெய்வது என்பதே இயக்குநர்களுக்குப் பெரிய வேலையாகிவிடும்.
கவியரசர் எழுதிய பாட்டை வாங்கி எம்.எஸ்.வி படித்தவுடனேயே அதற்கு சரியான ஒரு ராகத்தில் இசையமைப்பார். ‘‘இந்தப் பாட்டுக்கு இந்த ராகத்தை எப்படிண்ணே தேர்ந்தெடுத்தீங்க?’’ என்று எம்.எஸ்.வியிடம் கேட்டால், ‘‘கவிஞரின் பாடலிலேயே ராகம் இருக்கிறது’’ என்பார் சிரித்துக்கொண்டே.
ஒரு சில நேரங்களில் கவிஞர் பாடலைச் சொல்லச் சொல்ல, அதனை இராம.கண்ணப்பன் எழுதிக் கொடுப்பார். எம்.எஸ்.வி. படித்துவிட்டுத் தயக்கம் காட்டுவார். அதில் கவிதை நயம் இல்லாமல் இருக்கும். பக்கத்தில் இருக்கும் மூத்த தபேலா கலைஞர் அனுமந்த், ‘‘இதை எழுதுறதுக்கு கவிஞர் வேணுமா? புதுசா வந்திருக்கிறவங்களே எழுதுவாங்களே’’ என்று சூடு ஏற்றிவிடுவார்.
அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் ‘‘அனுமந்த்… இப்போ பாரு…’’ என்று வேறு வரிகளைச் சொல்வார் கவிஞர். அனுமந்த் கைதட்டி ‘‘இதுதான் கவிஞர் முத்திரை…’’ என்பார். அங்கே நல்லதொரு மெல்லிசையும் பிறந்துவிடும்.
இந்த இடத்தில் இராம.கண்ணப்பனைச் பற்றிச் சொல்ல வேண்டும். பஞ்சு அருணாச்சலத்துக்குப் பிறகு கவிஞருக்கு உதவியாளராக வந்தவர்தான் இவர். கவிஞரோடு கனிவுடன் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரிந்தவர். கவிஞரின் படைப்புகளை, எழுத்துகளைப் பத்திரமாக பாதுகாத்து வைத்து, அவையெல்லாம் நூல் வடிவம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர். நன்றியோடு இவரைப் பாராட்டலாம்.
ஒருமுறை, ஒரு பாட்டை எழுதி வாங்குவதற்காக கவிதா ஓட்டலுக்கு நான் சென்றிருந்தேன். அங்கே கவிஞர் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தார். அவரது முகத்தில் ஏதோ ஒரு பரபரப்பு. பத்திரிகை, படத் தயாரிப்பு, பல இதழ்களுக்குக் கட்டுரை எழுத வேண்டிய சூழல்... குடும்பம், அதிகமான பிள்ளைகள், வரவுக்கு மேல் செலவு, அரசியல் குழப்பங்கள் இத்தனைக்கும் இடையில் அவர் பாட்டு எழுத வேண்டும். கவிதா ஓட்டல் நிர்வாகி மக்களன்பனிடம் ‘‘கவிஞர் இன்று இந்தப் பாட்டை எழுதிவிடுவாரா?’’ என்று நான் கேட்டேன்.
‘‘நிச்சயம் எழுதிவிடுவார்…’’ என்றார் அவர். அவர் சொன்னபடியே அந்தப் பாட்டை நன்றாகவே எழுதிக் கொடுத்தார். மக்களன்பனிடன் ‘‘எழுதிடுவார்னு எப்படி உறுதியா சொன்னீங்க’’ என்றேன். ‘‘இங்கே கடன்காரர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.
அங்கே பாருங்கள் கம்பெனி கொடுக்குற பணத்தை அந்தக் கடன்காரருக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்’’ என்றார். கவிஞரைப் போல் சம்பாதித்தவரும் இல்லை. கடன்பட்டவரும் இல்லை. முதலுக்கு மேல் வட்டிக் கட்டியவரும் இல்லை. உழைக்கத் தெரிந்த கவிஞருக்கு கடைசி வரை பிழைக்கவே தெரியவில்லை. கவிஞரை முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் எழுதிய ‘வனவாசம்’, ‘மனவாசம்’ புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
ஏவி.எம் ஸ்டுடியோவில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வதற்காக எம்.எஸ்.வி. இசை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந் தார். இயக்குநரும், ஏவி.எம் செட்டியாரும் கவிஞர் எழுதிய பாடலைப் படித்துவிட்டு, ‘‘சரணத்தில் வந்துள்ள கருத்து ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, இந்தக் கருத்தை பல்லவியில் கொண்டுவந்தா திரும்பத் திரும்ப அது வரும்.
ஆகவே சரணத்தைப் பல்லவியாக்கி, பல்லவியை சரணமாக்கினா நல்லா இருக்குமே’’ என்று கருதினார்கள். செட்டியார் என்னை அழைத்து ‘‘முத்துராமா நீயே போய் கவிஞரிடம் விவரத்தைக் கூறி, பாட்டை மாற்றி எழுதி வாங்கிட்டு வா. பின்னணிப் பாடகர்கள் வருவதற்குள் பாட்டெழுதிக் கொண்டு வந்துவிட வேண்டும்’’ என்று சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.
கவிஞர் வீட்டிலும் இல்லை. அலுவல கத்திலும் இல்லை. சினிமா கம்பெனிகளில் போய் பார்த்தால் அங்கேயும் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தோடு காரில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஜெமினி அருகே காரில் கவிஞர் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. என் கார் டிரைவரிடம், ‘‘கவிஞருடைய காரை மடக்கு’’ என்று கூறினேன். டிரைவர் காரை வேகமாகக் செலுத்தினார். சினிமா சேஸைப் போல கவிஞருடைய காரை எங்கள் கார் துரத்தியது.
நான் கவிஞரை மடக்கினேனா? பாட்டை மாற்றி எழுதி வாங்கினேனா..?
படங்கள் உதவி: ஞானம்
- இன்னும் படம் பார்ப்போம்...
முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 11 - "பீம்சிங் அல்ல 'பா'ம்சிங்"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT