Published : 05 Jun 2015 10:38 AM
Last Updated : 05 Jun 2015 10:38 AM
தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் பிரவேசம் நிகழ்ந்த ‘அன்னக்கிளி’ படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குநர்கள். திரையிசையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்த அந்தப் படத்துக்குப் பின்னர் அவர்கள் இயக்கிய பல படங்களுக்குத் தனது அற்புதமான இசையை அளித்தார் இளையராஜா. அந்த வரிசைப் படங்களில் ஒன்று ‘பூந்தளிர்’(1979). ‘அன்னக்கிளி’ படத்தில் நடித்த சிவகுமார், சுஜாதா ஜோடிதான் இந்தப் படத்திலும். நிஜ வாழ்வில் சிறந்த ஓவியரான சிவகுமார் இப்படத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞன் அஷோக்காக நடித்திருப்பார். மலையாளப் பெண்ணான மாயாவை (சுஜாதாவை) காதலித்துத் திருமணம் செய்துகொள்வான் அஷோக். காலமும் சூழலும் இருவரையும் பிரித்துவிடும். தனது காதல் கணவனைத் தேடிக் குழந்தையுடன் வரும் மாயாவும் இறந்துவிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை அநாதையாகத் திரியும். இறுதியில் அஷோக்கின் கலைதான் குழந்தையை அவனிடம் சேர்ப்பிக்கும்.
கிட்டத்தட்ட ‘அன்னக்கிளி’ படத்தின் அதே குழுதான் எனினும், அப்படத்தில் மூன்று அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி இப்படத்தில் ஒரு பாடல்கூடப் பாடவில்லை என்பது விசித்திரம். ஆனால், படத்தில் ஒரேயொரு பாடலைப் பாடியிருக்கும் ஜென்ஸி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் தீவிர இசை ரசிகர்களின் சேகரிப்பில் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை. வருடிச் செல்லும் தென்றலின் ஒலி வடிவமாக நிலைத்துவிட்ட குரல் ஜென்ஸியுடையது.
குரலுலகின் தேவதை
இப்படத்துக்கு முன்னர் ‘அடி பெண்ணே’, ‘ஆடச் சொன்னாரே’ என்று பிரபலமான பாடல்களை ஜென்ஸி பாடியிருந்தாலும் இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘ஞான் ஞான் பாடணும்’ பாடலின் விசேஷம், அது அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்டது என்பதுதான். தபேலாவின் துள்ளலான தாள நடையுடன் தொடங்கும் அந்தப் பாடலில் இசைக் கருவிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டே விளையாடிச் செல்லும். பரவசப்படுத்தும் கிட்டாரின் ஒலி, சோகம் இசைக்கும் வயலின், ரகசியத்தைக் கிசுகிசுக்கும் புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டியிருப்பார் இளையராஜா. காதல் ஏக்கம் என்பதையும் தாண்டி, தனக்கு நேரப்போகும் துயரத்தை முன்பே அறிந்துகொண்ட மனதின் மென்சோகத்தின் வெளிப்பாடாக ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘மாங்குயில் ஜோடிகள் மெல்லக் கூவும் ரகசியம்’ என்று தொடரும் சரணத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து, அதை ஆமோதிக்கும் விதமாக வயலினும் புல்லாங்குழலும் மென்மையாக ஒலிக்கும். எங்கோ ஒரு மலையடிவார கேரள கிராமத்துக்குக் காற்றின் வழியே பயணம் செய்யும் அனுபவத்தைத் தரும் பாடல் இது.
தாம்பத்ய சங்கீதம்
‘அன்பே…’ எனும் வார்த்தையைக் காதலுடன் வயலினில் வாசித்துக் காட்ட முடியுமா? ‘வா… பொன்மயிலே’ என்று தொடங்கும் பாடலின் முகப்பு இசையைக் கேளுங்கள்! காதலில் திளைக்கும் கணவன், தன் மனைவியின் அழகை இயற்கையின் வனப்புடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னர் பல்லவியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக்கொண்டே விரிந்து செல்லும் இசைக்கோவையில் இளையராஜாவின் மேதமை மிளிரும். எஸ்.பி.பி.யின் குரல் தாம்பத்யத்தின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும். ‘உயிரிலே கலந்து மகிழ வா..பொன்மயிலே’ என்று பல்லவியுடன் சங்கமிக்கும் சரணத்தின் முடிவில் எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரத்தின் பேரமைதியை உணர முடியும்.
பகலின் குரல்
காதல், சோகம் எனும் பட்டியல் வகைப் பாடல்களைத் தாண்டி, சூழலின் தன்மையை மென்மையாகப் பதிவுசெய்யும் பல பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். ‘மனதில்… என்ன நினைவுகளோ’ எனும் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. எஸ்.பி.பி. ஷைலஜா பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸபோன் என்று மேற்கத்திய இசைக் கருவிகளின் துள்ளல் இருந்தாலும் அவற்றைத் தாண்டிப் புல்லாங்குழலின் இசை ஒரு யோகியின் பரிவுடன் பாடல் முழுதும் வருடிச் செல்லும். ‘பா..பாபா..’ என்று உற்சாகம் பொங்கும் குரலுடன் பாந்தமாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பரபரப்பாக இயங்கும் நகரின் பகல் நேரத்து அமைதி, அதன் இயல்பில் பதிவான பாடல் இது.
ஆதரிக்க யாருமின்றித் தனியே திரிந்துசெல்லும் தன் மகனை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயின் ஆன்மா பாடும் ‘ராஜா சின்ன ராஜா… பூந்தளிரே’ எனும் பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
படங்கள் உதவி: ஞானம், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT