Published : 08 May 2015 11:56 AM
Last Updated : 08 May 2015 11:56 AM
துயருறும் தருணங்களில் இசை தரும் ஆறுதல் ஆத்மார்த்தமானது. தனது துயரத்தை, ஆறுதல் தேடி அலையும் மனதின் ஊடாட்டத்தை ஒருவரால் இசையாக மாற்ற முடிந்தால், அந்தத் துயரமே அவருக்குப் போதையாகிவிடும். இசைக் கருவியின் வழியே துயரத்தின் குறிப்புகளைக் காற்றில் எழுதிக் கரையவிடுவது சுகமான அனுபவமாகிவிடும்.
காதலின் இழப்பை, சிக்கலான குடும்பப் பின்னணியின் வலியை இசையால் பிரதியெடுக்கும் கலைஞனைப் பற்றிய படம் ‘ஈரவிழிக் காவியங்கள்’. இசைக் கலைஞராகும் ஆசையுடன் நகரத்துக்கு வருகிறான் நாயகன். தனக்கு உதவும் பெண் மீது அவனுக்கு மையல். அந்தப் பெண்ணோ வேறொருவரின் காதலி என்று நீளும் கதை இது.
1982-ல் வெளியான இந்தப் படத்தை பி.ஆர். பந்துலுவின் மகனான பி.ஆர். ரவிஷங்கர் இயக்கியிருந்தார். கையில் கிட்டாருடன் அப்பாவித்தனத்தைச் சுமந்து திரியும் பாத்திரம் பிரதாப் போத்தனுக்கு. ஏக்கம் ததும்பும் இசையை மென் சாரலைப் போலப் படம் முழுவதும் தூவியிருப்பார் இளையராஜா.
மிதக்கவைக்கும் இசை
கனவில் விரியும் பாடலுடன்தான் படம் தொடங்குகிறது. நாயகன் கிட்டார் இசைக் கலைஞன் என்பதால் இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் கிட்டார் இசையுடன் தொடங்க, வயலின்(கள்), புல்லாங்குழல் என்று இளையராஜாவின் பிரியத்துக்குரிய இசைக் கருவிகள் இணைந்து இசைக்கின்றன. ‘கனவில் மிதக்கும் இதயம் முழுதும்’ என்று தொடங்கும் இந்தப் பாடலும் அப்படித்தான். சென்னையின் காலைநேரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணப்படும் நாயகனின் மனதில் இசையின் லட்சியக் கனவுகள் ஒவ்வொன்றாக விரிந்துகொண்டே வருவதுபோன்ற காட்சியமைப்பு அது.
ஆனால், பாடல் அதையும் தாண்டி வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நிலப் பரப்புகளைக் கற்பனையில் காட்சிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இளையராஜாவின் இசை, இந்தப் பாடலில் கற்பனை உலகின் நிலங்களைக் கண்முன் நிறுத்துகிறது. அடங்கிய மென் குரலில் எளிமையாக, பாந்தமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.
ஏழையின் கீதம்
ரசிகர்கள் கூடியிருக்கும் அரங்கில் தனது இசையை அரங்கேற்ற வேண்டும் எனும் கனவைத் தன் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறான் நாயகன். ‘என் கானம் இன்று அரங்கேறும்’ எனும் அந்தப் பாடலை, வலியில் துடிக்கும் மனதைப் பிரதியெடுக்கும் குரலுடன் பாடியிருப்பார் இளையராஜா. ஒரு கலைஞர் தனது கற்பனைக்குத் தானே உயிர்கொடுக்கும்போது படைப்புகள் உள்ளார்ந்த உயிர்ப்புடன் ஒளிரும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் ‘ராஜா பாட்டு’ இது.
நிகழ்காலத்தின் வெறுமையையும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கிட்டாரின் தந்திக் கம்பிகள் வழியாகவே வரைந்துகாட்டியிருப்பார் மனிதர். ‘பாலைவனத்தின் பனிமழையே வா’ எனும் வைரமுத்துவின் வரிகள் பாடலின் தன்மையை மேன்மைப் படுத்தியிருக்கும். இரண்டாவது சரணத்தில் இணைந்துகொள்ளும் ஜென்சியின் குரல், நிலைகொள்ளாமல் தவிக்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் மாயக் குரலாகப் பரவும்.
ஏகாந்தத்தின் இசை
அடிவானத்தைத் தொடும் முயற்சியில் விரிந்துகொண்டே செல்லும் சமுத்திரத்தை, யாருமற்ற தீவின் கரையில் நின்றுகொண்டு ரசிப்பது எத்தனை சுகமானது. அந்தச் சுகத்தை இசை வடிவத்தில் கேட்க வேண்டும் என்றால், இந்தப் பாடலைக் கேளுங்கள். ‘பழைய சோகங்கள்… அழுத காயங்கள்’ என்று தொடங்கும் இந்தப் பாடலையும் இளையராஜாதான் பாடியிருக்கிறார். இரவில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்பவர்களின் கனவில் ஏதாவது ஒரு நட்சத்திரம் தோன்றும்; கண்சிமிட்டிப் புன்னகைத்த பின்னர் கண்முன்னே பூமியில் விழும். அந்த உணர்வை இந்தப் பாடல் தரும்.
வெற்றிப் பாடல்
‘காதல் பண்பாடு… யோகம் கொண்டாடு’ என்று இசைக்கும் இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருப்பார். வாய்ப்பு நிறைவேறி, தனது தாய், நண்பர்கள் முன்னிலையில் நாயகன் கொண்டாட்டத்துடன் பாடும் பாடல் இது. இருளான மேடையில் மஞ்சள் விளக்கில் ஒளிரும் சிகையுடன் தோன்றிப் பாடுவார் பிரதாப் போத்தன் (இந்தப் பாடலின் ஒளிப்பதிவு, அசோக்குமாரின் தனி முத்திரைகளில் ஒன்று!). தனக்கு நம்பிக்கையளித்த காதலி (ராதிகா) வராத சோகம் பாடலின் வரிகளிலும் ஜேசுதாஸின் மென்சோகக் குரலிலும் விரவிக் கிடக்கும். வலி, உற்சாகம் என்று இருவேறு உணர்வுகளை ஒன்றாக இணைத்து இழைத்து வார்த்திருப்பார் இளையராஜா.
அவரது இசையமைப்பில் அந்தக் கால கட்டத்தில் வெளியான மற்ற படங்களின் பாடல்களை ஒப்பிட, இப்படத்தின் பாடல்கள் அதிகம் புகழ்பெற்றவை அல்ல. எனினும் மென் உணர்வுகள் நிரம்பிய அவரது இசையின் நுட்பமான ரசிகர்களால் ஆராதிக்கப்படும் பாடல்கள் இவை.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
படம் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT