Last Updated : 22 May, 2015 12:19 PM

 

Published : 22 May 2015 12:19 PM
Last Updated : 22 May 2015 12:19 PM

சமயம் வழியே சமூகம் கண்ட காவியம்!- திருவிளையாடல்

திருவிளையாடல் 50 ஆண்டுகள் நிறைவு

ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.

1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.

அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!

வெற்றி ரகசியம்

பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.

திருவிளையாடல் புராணம் என்கிற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முடையப்பட்டது இந்தத் திரைக் கீற்று. ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு வகையான நீதியைத் தனக்கானதாகக் கொண்டிருக்கிறது என்று நம்பும் ஆன்மிக மனங்களின் சைவ மரபின் மீது கட்டப்பட்ட சித்திரக் கூடாகவே திருவிளையாடல் படம் இருந்தது. வெற்றிப்படமாக இது அமைய இது ஒரு முக்கியக் காரணம்.

நெருக்கமான உரையாடல்

அதுவரையில் வெளிவந்த புராணப் படங்களில் கையாளப்பட்ட தமிழ் எல்லோருக்குமானதாக இல்லை. “ஓ... கடவுள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்’’ என்று ரசிகனை மெய் (உண்மை) மறக்க வைத்திருந்தார்கள். ஆனால், ‘திருவிளையாடல்’ படத்தில் குழைத்துத் தரப்பட்ட உரையாடல் தமிழின் சந்தனச் சாந்து எல்லோரையும் எடுத்துப் பூசிக்கொள்ள வைத்தது. அந்தக் கலையில் கைதேர்ந்த வித்தகராக அப்போது ஏ.பி.என் கருதப்பட்டார்.

சமயம் வழியே சமூகம்

நமது நாடகங்கள், புராணங்கள், இலக்கியங்கள் வழியாகக் கடவுளுக்கு என்று தனி மொழி உண்டென்று நம்பிய ரசிகனை, ஏ.பி.என். நாட்டு நடப்புகளை, மனிதர்களிடையே புழங்கும் அரசியலை, பெண்களின் நிலையை எல்லாம் இந்தப் படத்துக்குள் இலகுவாகப் புகுத்தி, புராணப் படத்துக்குச் சமூக வாசனையை உண்டாக்கியிருப்பார். இதற்கு ஒரே ஒரு உதாரணம்: பரமசிவன் சிவாஜி கணேசனின் மனைவியாக வரும் உமையாள் சாவித்திரி பேசும் ‘’கடைசிக் குடிமகனில் இருந்து உலகைக் காக்கின்ற ஈசன் குடும்பம்வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” என்ற வசனமே சாட்சி.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.

ஒலி வடிவிலும் சார்ந்த படம்

தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாட்களில் ரேடியோதான் மக்களை மகிழ்வித்த ஊடக சாதனம். ஒவ்வொரு தமிழனும் அந்த நாட்களில் குறைந்தது பத்து முறையாவது திருவிளையாடலை ஒலிச்சித்திரமாகக் கேட்டு ரசித்திருப்பான். மார்கழி மாதக் காலை வேளைகளைத் திருவிளையாடல் இசைத்தட்டுகள்தான் இனிப்பாக்கியிருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்துப் பாடல்களும் தமிழ் திரையிசைக்கு அஸ்திவாரமிட்டவை.

பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.

நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும். போற்றப்படும்.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x