Published : 15 May 2015 08:12 AM
Last Updated : 15 May 2015 08:12 AM

சிறப்புப் பார்வை: தன்னை மாற்றிக்கொண்ட ரஜினி!

ரஜினியிடம் போய் எப்படிக் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குநர் ரஞ்சித் என்பதுதான் தற்போது தமிழ்த் திரையுலகில் எழுப்பப்படும் ஆச்சரியமான கேள்வி. ஆனால், ரஜினியிடம் போய் கதை சொல்ல வைத்து இப்படத்துக்கு ‘அ' போட்டுத் தொடங்கி வைத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த்.

செளந்தர்யா - ரஞ்சித் நட்பு

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரஞ்சித். அப்போதிலிருந்தே செளந்தர்யாவுக்கு இயக்குநர் ரஞ்சித்தைத் தெரியும்.

ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டுவந்தார். அப்போது, “எனக்கு ஏற்ற மாதிரி கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் கதை வைத்திருப்பார்களா?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் ரஜினி செளந்தர்யாவுடம். ரஞ்சித்தை அழைத்து, “அப்பாவுக்கு ஏற்ற மாதிரி ஏதும் கதை இருக்கா?” என்று அவர் கேட்க அவரிடம் ஒரு வரிக் கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

ரஜினி - ரஞ்சித் சந்திப்பு

செளந்தர்யாவுக்கு கதை பிடித்துவிட, ரஜினியைச் சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருக்கிறார். ரஜினி - ரஞ்சித் இருவரும் கதை குறித்து விவாதித்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே ரஞ்சித் சொன்ன கதை, ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. “சூப்பரா இருக்கு” என்று ரஞ்சித்தைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. “உடனடியாக முழுக் கதையையும் தயார் பண்ணுங்கள்” என்றவுடன், “முழுக்கதையும் என்னிடம் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் ரஞ்சித்.

மகிழ்ச்சி அடைந்த ரஜினி, “தயாரிப்பாளர் தாணுவைப் போய் பாருங்கள். எனது 25 ஆண்டு கால நண்பர் அவர்” என்று ரஞ்சித்தை தாணுவிடம் அனுப்பி இருக்கிறார் ரஜினி.

தயாரிப்பாளர் தாணுவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். “ரஜினி சார் பேசினார். 30 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்தார். நான் அவரிடம் 45 நாட்கள் கேட்டு வாங்கியிருக்கிறேன். 45 நாட்கள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள், 45 நாட்கள் ரஜினி இல்லாத காட்சிகள். ஆக மொத்தம் 90 நாட்களில் படப்பிடிப்பு முடிக்க வேண்டும். பொங்கலுக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்” என்று இயக்குநர் ரஞ்சித்திடம் தெரிவித்திருக்கிறார் தாணு.

தாணுவின் இந்த வேகமான முடிவுகள், ரஞ்சித்தை மிகவும் சந்தோஷமடைய வைத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து ரஜினி - ரஞ்சித் - தாணு கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கதைக் களம்

ரஜினியை ரஞ்சித் முதல் முறை சந்தித்துப் பேசும்போது, இரண்டு நாயகர்களை வைத்து நட்பு, துரோகம் ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்ட கதையைச் சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் ரஜினி - ரஞ்சித் சந்திப்பு நடைபெற்றது. அப்போது “ரஞ்சித், இந்த இரண்டு நாயகர்கள் என்பது நன்றாக இருக்கிறது. இக்கதையை ஒரே நாயகனாக மாற்றினால் எப்படி இருக்கும்?” என்று கேட்டிருக்கிறார் ரஜினி.

“நன்றாகதான் இருக்கும் சார்..” என்று கூறி அந்த இடத்திலேயே, ஒரே நாயகன் என்றால் இப்படிப் பண்ணலாம் என்று தெரிவித்திருக்கிறார். உடனடியாகத் தயாரா என்று ரஞ்சித்தைத் தோளைத் தட்டிப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

ரஜினி படங்களில் வரும் ஸ்டைல்கள் ரஜினி உருவாக்கியவையாகவே இருக்கும். “இந்தப் படத்தில் நீங்கள் இப்படி எல்லாம் பண்ணினால் நன்றாக இருக்கும்” என்று சில ஸ்டைல்களைச் செய்து காட்டியிருக்கிறார் ரஞ்சித். தனது அடுத்த படத்தின் இயக்குநர் ரஞ்சித்தான் என்று ரஜினி கூற ஆரம்பித்தது அவர் செய்துகாட்டிய ஸ்டைல்களைப் பார்த்த பிறகுதான் என்கிறார்கள்.

இக்கதையில் விவசாயம், அரசியல், எனக் கருத்துகள் என எதுவுமே கிடையாது. ஒரே ஒரு இடத்தில் அரசியல் இருக்கிறது. அக்காட்சியில்கூட ரஜினி இருக்க மாட்டார் என்கிறார்கள்.

புதிய ஒப்பந்தம்

இப்படத்துக்குத் தாணுதான் தயாரிப்பாளர் என்பதில் முதலிலிருந்தே உறுதியாக இருந்திருக்கிறார் ரஜினி. 'லிங்கா' படத்தைப் போலப் பல தயாரிப்பாளர்கள் மாறக் கூடாது என்று முடிவு செய்து, எந்த ஒரு நிறுவனத்துடனும் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யாதீர்கள். உங்கள் பட நிறுவனத்தின் பெயரில்தான் முழுப் படமும் இருக்க வேண்டும், வெளியாகவும் வேண்டும் என்று ரஜினி கூறினாராம். இதைப் பட ஒப்பந்தத்திலும் சேர்க்க வேண்டும் என்று ரஜினி கூறிவிட்டார் எனத் தெரிகிறது.

அதேபோல, ரஜினி படம் என்றாலே அவருக்கு சில ஏரியாக்கள் விநியோக உரிமை கொடுப்பார்கள். இப்படத்தில் அது போல எதுவுமே கிடையாது. சம்பளம் மட்டும் வாங்கிக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. வெளியீட்டுச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தாணு மட்டுமே பொறுப்பு என்பதை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே அறிவிக்கவும் படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

என்னவானது ‘எந்திரன் 2' ?

‘லிங்கா' படத்துக்குப் பிறகு ஷங்கர் - ரஜினி இருவரும் பேசிய கதை 'எந்திரன் 2'. அப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க, லைக்கா நிறுவனம் நிதியளிக்க முன்வந்தது. அப்படத்துக்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுவந்தன. படத்தின் கதைப்படி வில்லன் பாத்திரமும் நாயகனுக்கு நிகரானது என்றார்கள். ரஜினிக்கு வில்லன் என்றபோது கமல் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து கேட்க, கமலோ முடியாது என்று கூறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துவருகிறார்கள். கோடை விடுமுறைக்கு விக்ரம், ஷங்கர் இருவருமே தங்களது குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்னை திரும்பியவுடன் ‘எந்திரன் 2'வுக்கான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

ரஜினி ரஞ்சித் கூட்டணி இளம் இயக்குநர்களின் படைப்பாற்றக்லுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்று பரவலாகக் கருதப்படுகிறது. சமகாலத் தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்பத் தன்னை வடிவமைத்துக்கொள்ள ரஜினி முன்வந்ததை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றிப் பல்வேறு இயக்குநர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x