Last Updated : 15 May, 2015 12:31 PM

 

Published : 15 May 2015 12:31 PM
Last Updated : 15 May 2015 12:31 PM

திரைப் பார்வை: துணிச்சலான சினிமா- பிக்கு

எவ்வித மிகைப்படுத்தலும், பிரம்மாண்டங்களும் இல்லாமல், இயல்பான திருப்பங்களுடன் பயணிக்கிறது ஜூஹி சதுர்வேதியின் திரைக்கதை. மலச் சிக்கலையும், முதுமையையும் பின்னணியாக வைத்துப் படத்தின் கதைக் களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஷூஜி சர்கார். இவருடைய இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான ‘விக்கி டோனார்’ திரைப்படம், அதிகம் பேசப்படாத விந்தணு தானத்தைப் பற்றிப் பேசி, கவனத்தை ஈர்த்தது.

இப்போது ‘பிக்கு’ மூலம் பாலிவுட்டின் பழைய கோட்பாடுகளை மீண்டும் உடைத்திருக்கிறார் இயக்குநர் சர்க்கார். படம் முழுவதும், ஏன், சாப்பாட்டு மேஜையில்கூட மலச் சிக்கலைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், எந்த ஒரு கட்டத்திலும் முகச் சுளிப்பையோ, சலிப்பையோ அது ஏற்படுத்தவில்லை.

அமிதாப் 70

எப்போதும் நோயைப் பற்றியே சிந்திப்பது, எந்த நோயும் இல்லையென்றாலும் வருத்தப்படுவது, சுற்றியிருப்பவர்கள் எல்லோரையும் கோபத்துடன் விரட்டுவது, மகள் மணமாகிச் சென்றுவிட்டால் தனித்துவிடப்படுவோமோ எனச் சுயநலமாக யோசிப்பது, இயற்கை மரணத்துக்கு ஏங்குவது, சொந்த ஊரில் நிம்மதியை உணர்வது என்று

முதுமையின் பல்வேறு முகங்களை அழுத்தமாகவும் வலிமையாகவும் வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, அமிதாப் ஏற்று நடித்திருக்கும் எழுபது வயது, ‘பாஷ்கோர் பானர்ஜி’ கதாபாத்திரம்.

முதுமையில் கஷ்டப்படும் அப்பாவை எப்படித் தனியாகவிடுவது என்று தவிக்கும் ‘ஆர்க்கிடெக்ட்’ மகளாக ‘பிக்கு’. அப்பாவுடைய தொல்லைகளைச் சகிக்கமுடியாமல் அவரிடம் கோபப்படுவது, அவரே உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வருந்துவது எனக் கோபக்கார, பாசக்கார மகள் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் தீபிகா.

அப்பாவைக் கவனித்துக்கொள்வதற்காகத் திருமணத்தைத் தவிர்க்கிறார். ஆனால், அலுவலக நண்பருடன் அந்தரங்க உறவைப் பேணுகிறார். பொதுவாக, வெகுஜனப் படங்களில், கதாநாயகிகளை தெளிவான முடிவு எடுக்கும் புத்திசாலிகளாக சித்தரிப்பார்கள். ஆனால், பிக்கு குழப்பங்களுடனும், குறைபாடுகளுடனும் இருக்கிறாள். இது அந்தப் பாத்திரத்துக்கான நம்பகத்தன்மையை அளிக்கிறது .

இயல்பான காட்சிகள்

பிக்குவுக்கு டாக்சி சேவையளிக்கும் நிறுவனத்தின் முதலாளி ராணா சௌத்ரி கதாபாத்திரத்தில் இர்ஃபான். ஒரு கட்டத்தில் பிக்குவையும், பாஷ்கோரையும் டாக்சியில் டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய கட்டாயம் ராணாவுக்கு ஏற்படுகிறது. இந்த நீண்ட பயணத்தில், பாஷ்கோரையும், பிக்குவையும் ராணா புரிந்துகொள்கிறார். அப்பா-மகள் உறவை ராணா புரிந்துகொள்வதன் வழியே பார்வையாளரும் புரிந்துகொள்ளச்செய்யும் உத்தி வெற்றிகரமாகக் கைகூடியுள்ளது.

ராணாவும், பிக்குவும் பரஸ்பரம் விரும்பினாலும், பாலிவுட்டின் வழக்கமான எந்தக் காதல் காட்சியும் இந்தப் படத்தில் இடம்பெறவில்லை. இயல்பான காட்சிகளாலேயே அவர்கள் இருவரிடையேயும் காதலையொத்த ஒரு மெல்லுணர்வு உருவாகி வருவதை உணர்த்திவிடுகிறார் இயக்குநர்.

‘பாஷ்கோர் பானர்ஜி’ கதாபாத்திரத்தை, அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லாகச் சொல்லலாம். ‘பிக்கு’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபிகா, நடிப்பில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார் எனலாம். ‘லஞ்ச் பாக்ஸ்’ புகழ் இர்ஃபான் கான், சில காட்சிகளின் மூலமே மனதில் பதிந்துவிடுகிறார்.

கமல்ஜீத் நேகியின் கேமரா, கொல்கத்தாவை நோக்கிய கார் பயணம் , பழமை குலையாத கொல்கத்தாவின் அழகு , கதாபாத்திரங்களின் நுட்பமான உடல் மொழிகள் என அனைத்தும் இயக்குநர் பேச விரும்பும் திரைமொழிக்கு இயைந்த வகையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அனுபம் ராயின் பின்னணி இசை படத்தின் வங்காள கதைக்களத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறது.

“என் மகள், பொருளாதாரச் சுதந்திரம், உணர்வு சுதந்திரம், பாலியல் சுதந்திரம் கொண்டவள்” எனப் பிக்குவைத் திருமண செய்துகொள்ள அணுகும் ஆண்களிடம் சொல்கிறார் அப்பா ‘பாஷ்கோர். துணிச்சலுடன் வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

படத்தில் ஒவ்வொரு காட்சியுமே ஓர் உள்ளர்த்தத்துடன் நகர்கிறது. ஒரு நாற்காலியை நிற்கவைத்தும், படுக்கவைத்தும், சாய்த்தும்கூடத் திரைக்கதையை நகர்த்தமுடியும் என்கின்றன இந்தப் படத்தின் காட்சிகள். பயணம் நீண்டதாக இருந்தாலும், பயணக் காட்சிகள் நீளமானதாக இல்லை. கொல்கத்தாவுக்கு வந்தபிறகு, பாஷ்கோர் அடையும் ஒருவித நிம்மதியைப் பார்வையாளர்களும் அடைகின்றனர். சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று முதியவர்கள் விரும்புவதற்கான காரணத்தை எளிமையாகவும், ஆழமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படம் முழுக்க மலச்சிக்கலால் அவதிப்படும் பாஷ்கோர் இறுதியாகக் கழிப்பறை சென்று திரும்பிவிட்டு ‘இதுதான் எனது பெஸ்ட் மோஷன்’ எனத் திருப்தியும் பெருமிதமும் மிளிரக் கூறுகிறார். அடுத்தநாள் காலை அவர் படுக்கையில் சலனமற்றுக் கிடக்கிறார். அவர் ஆசைப்பட்டபடியே இயல்பான மரணம் அவருக்குச் சாத்தியமாகிவிட்டது. ஆனால், பிக்குவுக்கும் நமக்கும் அந்தப் பிடிவாதமிக்க ஆர்ப்பாட்டக்கார கிழவனின் மரணம் தந்துவிடும் சோகத்தைத் தவிர்ப்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது .

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இதனுடைய காட்சி ரூபமாக மட்டுமே பேச விழையும் திரைமொழியைச் சொல்லலாம். வசனங்கள், காட்சிகள், கதாபாத்திரங்களின் நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படத்தின் அழகியலை அதுவே கட்டமைத்துள்ளது.

யதார்த்த சினிமாவின் தேவையை இந்த ‘பிக்கு’ அன்பாகவும், இயல்பாகவும் உணர்த்திவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x