Last Updated : 13 May, 2015 11:29 AM

 

Published : 13 May 2015 11:29 AM
Last Updated : 13 May 2015 11:29 AM

நாடகத் திருவிழா!

ஏப்ரல் - மே என்றால் இந்திய கிரிக் கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் கொண் டாட்டம். சென்னை நாடகப் பிரியர் களுக்கு கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழா. ஸ்டேடியம் மாதிரி நிரம்பி வழியும் நாரத கான சபா அரங்கில் நித்தமும் புத்தம்புது நாடகம். கையில் பேப்பர் பேனாவுடன் நடுவர்களாக மூவர், தரம் பார்த்து பரிசுகள் வழங்க!

இந்தமுறை 26-வது வருடம். மொத்தம் 12 நாடகங்கள். நான் பார்த் தவை 11. என்னுடைய கணிப்பில் டாப் 3 நாடகங்களைப் பற்றி ஒரு பார்வை...

1. யாரோ இவர் யாரோ?

வீட்டில் மாமியாரும், மருமகளும். கணவன், அலுவலகத்தில்.

‘‘இந்த பில்டிங்கில் ஒரு ஃப்ளாட் காலியா இருக்குன்னு சொன்னாங் களே…’’ என்று கேட்டவாறே வருகிறார் 70 வயதைத் தாண்டிய பெரியவர். மோர் வாங்கிக் குடிக்கிறார். நிறைய வம்படிக்கிறார். ஒரு சின்ன இருமல். அவ்வளவுதான். அப்படியே மூச்சற்று சரிந்துவிடுகிறார்.

இந்தப் புள்ளியில் நாடகம் சூடு பிடிக்கிறது. பெரியவர் யாரென்று தெரி யாது. எங்கிருந்து வருகிறார் என்பதும் தெரியாது.

பர்ஸில் முகவரி இல்லை. போன் நம்பர் இல்லை. கணவனும் அலுவலகத்தில் இருந்து திரும்பிவிட, இறுதியில் பெரியவரின் மகன் வந்து அடையாளம் காட்டும் வரையில், சாவு விழுந்த வீட்டில் மூன்று பேரும் அனுபவிக்கும் ‘மரண’ அவஸ்தைகளை Black Humour நாடகமாக்கியிருக்கிறார் மாதவ பூவராகமூர்த்தி. சுஜாதாவின் சிறுகதையைப் படித்த உணர்வு ஏற்பட்டது நாடகம் முடியும்போது!

‘பாடி’யை வைத்துக்கொண்டு செய்வது அறியாமல் போலீஸை வர வழைக்கிறார்கள். ஃபிளாட் ஓனரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வரவழைக் கிறார். முன்னதாக டாக்டரும் வருகிறார். ஒவ்வொருவரிடமும் மாமியாரும், மகளும் என்ன சொல்லி விளங்க வைப்பது என்பது தெரியாமல் உளறிக் கொட்டி சமாளிப்பது உச்சக்கட்ட காமெடி.

“மோர் சாப்பிட்டார்… போயிட்டார்...” என்று மறக்காமல் சொல்லும் மாமியார் மாலதி சம்பத், இயற்கையாகவே அமைந்துவிட்ட ஒருவித அழுகாச்சி குரலில் புலம்பும் மருமகள் பூர்வஜா மூர்த்தி இருவரும் போட்டிப் போட்டு நடிக்கிறார்கள்.

நாடகத்தின் டைரக்டர் ஜா.வெங்கட் உட்பட நிறைய இளம் ரத்தங்களை நடமாடவிட்டிருக்கிறார்கள். எதிர்காலம் இவர்கள் வசப்படும்.

நாடக மேடையில் ஒரு 90 நிமிட குறும்படம்!

2. சொப்பனக் குழந்தை

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். ஒரு சில குழந் தைகளிடம் இது அபரிமிதமான அதீத திறமையாக இருக்கும். பெற்றவர்களின் கடமை அவர்களை படிக்க வைப்பது மட்டும் அல்ல; தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, அவர்களின் திறமைக்கும் மதிப்புக் கொடுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி தவறிய தந்தை, அதை உணரும்போது அந்தக் குழந்தைக்கு (வளர்ந்த மகன் என்று வாசிக்க!) பச்சைக் கொடி காட்டுவதே நாடகம்.

இந்தக் குடும்ப டிராமாவுக்கு அழுத்த மான கதையும், கூர்மையான வசனமும் எழுதி இயக்கியிருக்கும் என்.ரத்னம், மறைந்த கூத்தபிரானின் மகன். நாடகப் புலிக்குப் பிறந்தது பூனை ஆகவில்லை!

அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மை. சி.ஏ. படிக்கவில்லை என்பதாலேயே அலுவலகத்தில் தன்னை மட்டம் தட்டி வைத்திருப்பதாகக் கருதி (அது நிஜமும்கூட), தன் நிலைமை மக னுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றத்தில், படிப்பில் நாட்டம் இல்லாத அவனை படுத்தி எடுக்கிறார்- சி.ஏ. தேர்வு எழுதச் சொல்லி!

மகனோ குறும்படக் கனவுடன் வளர்ந்து வருகிறான். சி.ஏ. தேர்வில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி, அப்பாவிடம் 'டோஸ்' வாங்கி... இறுதி யில் அப்பாவுக்குத் தெரியாமல் மகன் எடுக்கும் குறும்படம் அவார்டு வாங்கு கிறது. புது புராஜெக்ட்டுக்கு 10 லட்ச ரூபாய் முன்பணமும் கிடைக்கிறது. இருந்தாலும் முதலில் முரண்டு பிடிக்கும் அப்பா இறுதியில் மனம் மாறுகிறார்.

அலுவலகத்தில் அப்பா கேவலப் படுத்தப்படுவது, மகனின் பள்ளிப் பருவத்தில் அவனுடைய சிறப்புகளை தலைமை ஆசிரியை எடுத்துரைத்து ‘மனசு காரணம் இல்லை. மனோ பாவம்தான் காரணம்' என்று அப்பாவிடம் சொல்வது, அப்பா வீட்டில் இல்லாத சமயம் மகன் ஷார்ட் ஃபிலிம் எடுத்து முடிப்பதை டைமிங்கில் காட்டுவது... என்று கைத்தட்டல்கள் அள்ள நாடகத்தில் நிறையவே காட்சிகள்.

யாருமே நடிப்பை மிகைப்படுத்தாதது பெரிய ப்ளஸ். அப்பா (என்.ரத்னம்), மகன் (விக்னேஷ்), அம்மா (‘பொதிகை' அனுராதா) என்று அனைவருமே கச்சிதம்… மொத்த நாடகமும்!

3.பயணம்

இது ஒரு Travel Journal. பிரச்சினை களை சந்தித்து மீண்டவர்கள், பிரச்சினை களை சந்திக்கும் மனிதர்களை சந்திக்க வைக்கும் ஒரு சூழ்நிலை. வித்தி யாசமான மனிதர்கள், நீண்ட பயணத் தில் நடுவே நின்று கவனித்து, அவர் களுக்குள் விவாதித்துக் கொள்ள ஒரு தற்காலிக ஓய்வு... ஆக, இது திடுக் கிடும் திருப்பங்கள் நிறைந்த நாடகம் கிடையாது. ஒரு Travelogue. இதில் வெவ்வேறு பாத்திரங்கள் உரையாடு வதை உட்கார்ந்து, கேட்டு ஆனந்திக் கிறோம்.

அமெரிக்காவில் புருஷனுடன் ஏற்படும் கருத்து வேற்றுமை காரணமாக பெட்டியுடன் இந்தியா புறப்படும் யுவதி... இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் நடக்கவிருக்கும் தனது திருமணத்துக்கு புறப்படும் பெர் முடாஸ் இளைஞன்... அப்பா இறந்து விட்டதாக தகவல் வர, அவசர அவ சரமாக இவர்களுடன் புறப்படும் இன் னொருவன்... மூவரும் ஒரே விமானத்தில்.

தோஹா விமான நிலையத்தில் Connecting Flight-ஐ தவற விட்டுவிடும் இவர்கள் அடுத்த விமானத்துக்காக லவுஞ்சில் காத்திருக்க, அங்கே மேலும் மூவர் இணைந்துகொள்ள.. நாடகம் ஸாரி உரையாடல் ஆரம்பம். பரஸ்பர அறிமுகங்களைத் தொடர்ந்து, அவர வர்கள் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இதில், காரம் மணம் குணம் இனிப்பு துவர்ப்பு ஹாஸ்யம் தத்துவம் என்று பல்சுவையும் கவர்ச்சிகரமானவை!

‘டம்மீஸ்’ ஸ்ரீவஸ்தனின் நாடகங்கள் எப்போதுமே மியூசியம் தியேட்டரில் இங்கிலீஷ் தியேட்டர் பார்ப்பது போல் இருக்கும். பயணமும் விதிவிலக்கல்ல. ஆனால், எப்போதும் ‘செட்’ போடுவதில் வித்தியாசம் காட்டும் இவர்கள், இம்முறை ஏனோ அசட்டையாக இருந்து விட்டார்கள். அதிலும் தோஹா விமான நிலையத்தில் வெயிட்டிங் லவுஞ்ச், ஏகத்துக்கும் அழுக்கு சென்னை ஏர்போர்ட் மாதிரி!

இந்த நாடகத்தில் பாத்திரமேற்று நடிப்பவர்கள் எல்லோருமே ஃபீனிக்ஸ் மாலில் பார்க்கும் முகங்கள் மாதிரி ரொம்ப கேஷுவல்! நடிப்பதற்கென்று மெனக்கெடாத யதார்த்தம். இவர்களில் சீனியரான ஸ்ரீதர், சிரிக்காமல் ஜோக் அடித்து நாலாப்பக்கமும் சிக்ஸர்களாக விளாசித் தள்ளுகிறார்!

கொஞ்சமும் போரடிக்காத பயணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x