Published : 08 May 2015 11:12 AM
Last Updated : 08 May 2015 11:12 AM
சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா’ திரைப்படத்தில் கதாநாயகி நித்யா மேனனின் அமானுஷ்யம் கலந்த ஏக்கமான அழுகைக் குரல் ரசிகர்களைத் திகில்கொள்ளவைத்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பின்னணிக் குரல் கலைஞர் ஐஸ்வர்யா. ‘உத்தம வில்லன்’ படத்தில் பார்வதி நாயருக்காக உயிர் உருகப் பேசியதும் இவர்தான்.
‘நண்பேன்டா’, ‘சகாப்தம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘ஹைகூ’ உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பேசிவரும் ஐஸ்வர்யாவின் குரலைத் தங்கள் கதாநாயகிகளுக்கும் அவர்களது ஆவி, பேய் வடிவங்களுக்கும் இரவல் கேட்டு வர ஆரம்பித்திருக்கிறார்கள் இயக்குநர்கள். அவரைச் சந்தித்தபோது...
காஞ்சனாவில் நித்தியா மேனனின் நடிப்புக்கு இணையாக உங்கள் குரலுக்குப் பாராட்டு கிடைத்துள்ளதே?
சென்னை வடபழனியில் உள்ள பரணி டப்பிங் திரையரங்க முகவரியைப் போட்டு எனக்கு ரேஷன் கார்டே வாங்கிக் கொடுத்திருப்பாங்க. அந்தளவுக்கு விதவிதமா அந்தப் படத்துக்குப் பேச வேண்டியது இருந்தது. “சிவா... சிவா” ன்னு ஏக்கமா கத்தும்போது ரெண்டு மூணு தடவை மயக்கம் போட்டு விழுந்துருக்கேன். அந்தப் படம் பார்க்கும்போது வர்ற பயத்துக்கு உன்னோட குரல் முக்கிய காரணம்னு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க.
ஆனால், படத்தோட இணை இயக்குநர் பாஷாதான் நான் எப்படிப் பேசணும்கிறதைப் பேசிக் காட்டியவர். சவுண்ட் இன்ஜினீயர் அன்பு எத்தனை டேக் போனாலும் சலிக்காமல் உற்சாகப்படுத்தினார். இந்த அளவுக்கு ரசிகர்கள் பயப்படுற மாதிரி என்னால பண்ண முடிஞ்சதுன்னா அதுக்குக் காரணம் ‘காஞ்சனா’ டீம் எம்மேல வைச்சிருந்த நம்பிக்கைதான். ‘காஞ்சனா’ தெலுங்குப் பேய்க்கும் என்னையே பேசச் சொன்னார் இயக்குநர். தொண்டையே தெறிக்கிற அளவுக்குப் பேசினப்ப கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, இன்னிக்கு அந்தப் பேய் குரல்தான் என்னைப் பிரபலமாக்கியிருக்கு!
உத்தம வில்லன் வாய்ப்பு எப்படி வந்தது?
என்னோட ‘வாய்ஸ் ஓகே’ன்னு கமல் சார் சொன்ன உடனே குதிச்சிட்டேன். பார்வதி நாயர் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்தப்போ கமல் சார் என் கூடவே இருந்தார். அவ்வளவு ரசனையா சொல்லிக் கொடுத்தார். வசனமே இல்லாமல் பார்வதி நாயர் திரும்புற மாதிரி ஒரு காட்சி.
அந்த இடைவெளிக்கு ‘இதைப் பேசலாமா... அதைப் பேசலாமா’ன்னு 40 வசனங்களைச் சொல்லிக் காட்டினார். அவர் சொல்லிக் கொடுத்த மாதிரியே ரீடேக் வாங்காமல் இரண்டரை மணி நேரத்துல என் கேரக்டருக்குப் பேசி முடிச்சுக் கொடுத்திட்டேன். கமல் சார் பாராட்டை எனக்குக் கிடைச்ச விருதா நினைக்கிறேன்.
ஒரு காட்சியில் யதார்த்தமாகக் குரல் கொடுக்க எது கைகொடுக்குது?
காட்சிகளைப் பார்க்கிறபோது நமக்கு சில நினைவுகள் வந்து அது டப்பிங்கில் வெளிப்படுவது உண்டு. சமீபத்தில் ‘கத்துக்குட்டி’ படத்துக்காக டப்பிங் பேசியபோது ஒரு அழுகைக் காட்சி. அப்போது என் அப்பாவை மனதில் நினைத்துக் கதறித் தீர்த்துவிட்டேன். டப்பிங் முடிந்த பிறகும் எனக்குக் கண்ணீர் அடங்கவில்லை.
இதுக்கு நேர்மாறா ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் பூனம் பஜ்வாவுக்காகப் பேசியது புது அனுபவம். சிரிச்சுக்கிட்டே பேசணும். ரொமான்டிக், ஜாலின்னு கலகலன்னு இருக்கிற வாய்ஸ். இது என்னோட இயல்பான வாய்ஸ். நான் என்னோட கேரக்டருக்கு எப்படிப் பேசுவேனோ அப்படிப் பேசினேன்.
குரல் வளத்தைப் பாதுகாக்க என்னென்ன பண்றீங்க?
உண்மையச் சொல்லணும்னா, எதுவுமே பண்றது இல்லை. இந்த விஷயத்தில் நான் எஸ்.பி.பி. சார் மாதிரி. நிறைய ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன். அரை நெல்லிக்காய்னா உயிர். மாங்காய் பிடிக்கும். இதுநாள்வரை எனக்குப் பாதிப்புகள் எதுவும் வரலை.
உங்கள யாரும் நடிக்கக் கூப்பிடலையா?
இப்பக்கூட லாரன்ஸ் மாஸ்டர், ‘என்னோட அடுத்த படத்தில் கோ-டைரக்டரா வேலை செய்ய விருப்பமான்னு’ கேட்டார். அன்போட தவிர்த்துட்டேன். எனக்கு நடனம், நடிப்பு ரெண்டுமே விருப்பம். ஆனா, வீட்ல சம்மதிக்க மாட்டாங்க. அதனாலதான் டப்பிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
பின்னணிக் குரல் கலைஞர்களை யாரும் கவனிக்கிறதே இல்லை என்று சொல்றதை எப்படி எடுத்துக்குறீங்க?
வருத்தமாத்தான் இருக்கும். ஆனா தியேட்டருக்குப் போய் நம்ம குரலை கேரக்டரோட பார்த்து அதுக்கு ரசிகர்கள் ரியாக்ட் செய்யும்போது கிடைக்கிற சந்தோஷம் எல்லாத்தையும் மறக்க அடிச்சிடும். ஒரு சின்ன செடியா இருந்தாலும் தண்ணிக்காகப் போராடுற வேர் வெளியே தெரியாது. இலையும் பூவும் எல்லாருக்கும் தெரியும். இயற்கையே அப்படியிருக்கிறப்ப நமக்குப் பெரிய அளவுக்குப் பேர் கிடைக்கலைங்கிறதை நாம வருத்தமா எடுத்துக்க வேண்டியதில்லை.
சினிமாவுக்கு வெளியில உள்ளவங்களுக்குப் பின்னணிக் குரல் பற்றித் தெரியாம இருக்கலாம். ஆனா சினிமால இருக்கிறவங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் மரியாதை கொடுத்தால் நல்லதுன்னு தோணுது. இதைக் குற்றச்சாட்டா சொல்லலை. அன்பான கோரிக்கையா சொல்றேன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT