Published : 17 May 2015 11:04 AM
Last Updated : 17 May 2015 11:04 AM
பாலு என்கிற பாலுச்சாமி (ஆர்யா) இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த விரும்பும் பொதுவுடைமைப் போராளி. ராணுவ வீரர்களைத் தாக்கிக் கொல்ல முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெறுகிறான். மரண தண்ட னையை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட சிறை அதிகாரி மெக்காலே (ஷாம்), அரசுப் பதிவேட்டின்படி தகுதியுள்ள தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலாளி யான எமலிங்கம் (விஜய் சேதுபதி) மூலம் அதை நிறைவேற்றத் துடிக்கிறார். அதே எமலிங்கம் உதவியுடன் பாலுவைச் சிறையிலிருந்து தப்பிக்கவைக்க முயற்சி எடுக்கிறாள் பாலுவின் கூட்டாளியான குயிலி (கார்த்திகா). குயிலியும் அவளது அணியினரும் தங்கள் முயற்சியில் வென்றார்களா? பாலு சிறையிலிருந்து தப் பித்தாரா அல்லது தூக்கில் தொங்கினாரா? இதுதான் படத்தின் அடிப்படையான கதையோட்டம்.
மரண தண்டனைக்கெதிராகக் குர லெழுப்பி இருக்கும் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கும், கதாபாத்திரங்களைக் கச்சிதமாகச் சித்தரித்திருக்கும் ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா ஆகி யோருக்கும் தாராளமாகவே பாராட்டுத் தெரிவிக்கலாம். தேச விடுதலைக்காகப் போராடிய பகத்சிங் போல் தம் மக்களின் விடுதலைக்காகப் போராடும் இளைஞன் பாலு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவன் ஒரு தேசத் துரோகி, பயங்கரவாதி. இந்த முரண்பாடு நன்கு சித்தரிக்கப் பட்டுள்ளது.
தொடக்கம் முதல் இறுதிவரை படம் இலகுவாக நகர்கிறது. திரைக்கதை எந்த உராய்வுமின்றி வழுக்கிக்கொண்டு செல் கிறது. சுவாரசியமான சிறு சிறு திருப்பங் கள் படத்தை வேகமாக நகர்த்திச் செல் கின்றன. பாலுவின் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டிய எமலிங்கத்தை வைத்தே பாலுவைத் தப்பிக்கவைக்க முயலும் உத்தி சிறப்பானது.
ராஜஸ்தான் பாலைவனத்தில் மக்கள் பசியும் பஞ்சமுமாக வாட, அவர்களுக்காக ரயில் நிறைய உணவு தானியங்களைக் கொள்ளையடித்துத் தருகிறார் பாலு. ஆனால் அந்தச் சம்பவங்களில் பின்னணிக் காரணங்கள் தெரிவிக்கப்படாததால் அவை அழுத்தமான பாதிப்பை ஏற்படுத் தத் தவறிவிடுகின்றன. பிரதான பாத்திரத் தின் உணர்வோடு பார்வையாளர்கள் ஒன்றுமளவுக்கு அந்தப் பாத்திரமோ அதன் பின்புலமோ வலுவாகச் சித்தரிக்கப்பட வில்லை. தலைமறைவு இயக்கம்போலச் செயல்படும் குயிலி குழுவில் உள்ளவர்கள் போராளிக் குழுவுக்குரிய அழுத்தமான பாத்திரங்களாக வெளிப்படவில்லை.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட விதம், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதில் காட்டப் பட்ட அவசரம் போன்ற பல செய்திகளைப் படம் தொட்டுச் செல்கிறது. மரண தண்டனைக்கு எதிராக உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துவரும் வேளையில் இந்தப் படத்தை அதற்கான வெளிப்பாட்டுக் களமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் இயக்குநர் ஜனநாதன். அதில் எந்த வகையிலும் குறையில்லை. ஆனால் ஒரு சினிமாவாக மரண தண்டனைக்கு எதிராக ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தைப் படம் ஏற்படுத்தவில்லை. படம் முடிந்து வெளியே வரும்போது மரண தண்டனை பற்றிய யோசனை எழும் அளவுக்கு அப்பிரச்சினை வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை.
பாத்திர வார்ப்பில் ஜனநாதன் சிறப் பாகச் செய்திருக்கிறார். குறிப்பாக, ஷாமின் பாத்திரம். சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு மனிதாபிமான அதிகாரியான ஷாம் எங்கேயும் சட்டத் தின் கடமையை தவறுவதில்லை, கண்ணி யத்தையும் மீறுவதில்லை. போராளிகளின் குரல் வலுவாக ஒலிக்கும் படத்தில் அதற்கான மாற்றுக் கருத்தை ஷாமின் வழியே ஒலிக்கச் செய்துள்ளது படத்துக்கு ஒரு சமநிலையைத் தருகிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பு விசேஷமான பாராட்டுக்கு உரியது. தண்டனையை நிறைவேற்றிவிட்டுச் சரிந்து உட்காரும் இடத்தில் அபாரமாக நடித்திருக்கிறார். போராளிக்குரிய தீவிரத்தன்மையை முகத்தில் வெளிப்படுத்தியபடி பைக்கில் ஏறிப் பறக்கும் கார்த்திகா, தமிழ்க் கதா நாயகிகளைப் பற்றிய பொதுப் பிம்பத்தை அனாயாசமாகத் தகர்க்கிறார். குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற பாரத்தை முடிந்த அளவு தாங்குகிறார்.
பாலு பாத்திரத்தில் ஒரு போராளியா கவே மாறியிருக்கிறார் ஆர்யா. தன் கழுத் தில் கறுப்புத் துணியை மாட்டும்போது அவர் முகத்தில் தென்படும் உணர்வில் மரணத்தின் சுவடு தோன்றி மறைவது மறக்க முடியாதது. பாலுவைத் தூக்கில் தொங்கவிட்டுத் தான் திருமணமே செய்துகொள்ள வேண் டும் என்ற முடிவில் இருக்கும் கடமை தவறாத காவல் அதிகாரியாக ஷாம் கம்பீரமாக நடித்துள்ளார்.
கலை இயக்குநர் செல்வ குமார் சிறைச் சாலையைக் கண் முன் கொண்டுவந்துள் ளார். பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா நன்கு செயல்பட்டுள்ளார்.
புரட்சி, பொதுவுடைமை போன்ற பெரும் அர்த்தமிக்க சொற்களை மிக வலுவிழந்த வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். லெனின் பற்றி குயிலி பேசும் இடம், பாலுவைக் காப்பாற்ற அவர் சிறைக்கு வரும் காட்சி போன்றவை அமெச்சூர்த்தனமாக உள்ளன. ஐபிஎஸ் கேடர் அதிகாரிக்குச் சட்டையில் இருக்கும் பார் கோட் போன்ற அடையாளத்தைக் கவனிக்க முடியாதா என்ன? மனித வெடிகுண்டாக மறுநாள் காலையில் போவதால் முந்தைய நாள் இரவில் பாலுவுடன் குயிலி காதல் பாடல் பாடுவது அபத்தத்தின் உச்சம். ராணுவத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் நகைப்பிற்கிடமானது.
18 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் ஒரு வர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதில் உள்ள அபத்தத்தின் குரூரத்தைப் பொட்டில் அறைந்ததுபோல் ஒரு காட்சி சொல்லிவிடுகிறது. இதுபோன்ற காட்சிகள் படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டுள்ள அளவுக்கு மரண தண்டனை குறித்த கேள்வி அழுத்தம் பெறவில்லை.
மரண தண்டனைக்கு எதிரான முழக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டிய படம் வெறும் முணுமுணுப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT