Last Updated : 29 May, 2015 11:53 AM

 

Published : 29 May 2015 11:53 AM
Last Updated : 29 May 2015 11:53 AM

காற்றில் கலந்த இசை 6- ஜென்மங்களாகத் தொடரும் கண்கள்

திகைப்பில் ஆழ்த்தும் மர்மமும் அதற்குச் சற்றும் குறையாத சுவாரஸ்யமும் கொண்டவை மறுஜென்மக் கதைகள். ஜனரஞ்சகத் திரைக் கலைஞர்கள் பலரால் கையாளப்பட்ட இந்தக் கதைக் கருவைத் தமிழின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனும் கையாண்டிருக்கிறார். சரத்பாபு, சுமலதா, சுஹாசினி, சாரு ஹாசன் நடிப்பில் 1982-ல் அந்தப் படம் வெளியானது. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘அழகிய கண்ணே’ எனும் உயிரை உலுக்கும் பாடலின் முதல் வரிதான் இப்படத்தின் தலைப்பு.

தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த நாட்டியக் கலைஞரான நாயகி (சுமலதா), தன்னைச் சுற்றி மொய்க்கும் கண்களுக்கு நடுவில் ஈரமுள்ள இதயத்தைத் தேடுபவள். உள்ளார்ந்த மேன்மையுடன் சிலை வடிக்கும் சிற்பி பிரசன்னாவின் (சரத்பாபு) கலை மீது காதல் கொள்வாள். எதிர்பாராதவிதமாக, காமமும், கொடூர குணமும் நிறைந்த சாமியார் ஒருவரிடம் அகப்பட்டுப் பரிதாபமாக உயிரிழப்பாள். சில ஆண்டுகள் கழித்துத் தன்னைத் தேடி வரும் ஆறு வயதுச் சிறுமியிடம் அப்பெண்ணின் சாயலை உணர்வான் பிரசன்னா. அப்பெண்ணின் மறு ஜென்மமாக வந்த குழந்தைதான் அது.

முன் ஜென்மத்து நினைவுகளுடன் வரும் சிறுமியாக பேபி அஞ்சு நடித்திருப்பார். ‘அழகிய கண்ணே’ படத்துக்கு மகேந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்வூட்டும் தனது இசையால் மேன்மை சேர்த்திருப்பார். தங்கள் அற்புதத் திறமையைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டதன் மூலம் காலத்தால் மறக்க முடியாத திரைப்படங்களையும், பாடல்களையும் நமக்குத் தந்த இணையற்ற இணை அது. மெல்லிய மர்மம் கலந்த பின்னணி இசை ஒலிக்கும் இப்படத்தில் அழகான பாடல்கள் உண்டு.

காற்றில் கரையும் கண்ணீர்

சிற்பி பிரசன்னாவுடனான தனது காதல் நிறைவேறாது என்பதை உணரும் நாயகி, அவனை மானசீகக் கணவனாக நினைத்து வாழ அனுமதி கேட்பாள். கிட்டத்தட்ட ‘ஜானி’ படத்தின் நாயகி அர்ச்சனாவை (தேவி) நினைவுபடுத்தும் பாத்திரம் சுமலதாவுக்கு.

இருவருக்கும் இடையில் மனவெளியில் உருவாகும் உன்னத உறவின் பின்னணியில் விரியும் பாடல் ‘நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்’. பாடலின் தொடக்கமாகக் கழிவிரக்கம் ததும்பும் உணர்வுடன் தொடங்கும் வீணை இசைக்கு ஆறுதலாக எலெக்ட்ரிக் கிட்டாரின் இசை ஒலிக்கும். சிற்பம், நடனம் என்று இரண்டு நுண்கலைகள் சங்கமிக்கும் இந்தப் பாடல் இளையராஜாவின் அற்புதத் திறமைக்குச் சான்று.

வீணை, வயலின், புல்லாங்குழல் என்று தெய்வீகம் மிளிரும் இசைக் கருவிகளைப் பாடலின் நடுவே உரையாட விட்டிருப்பார்.

கைகூடாத காதல், மனதைக் கவ்வும் சோகம் என்று பல உணர்வுகளைத் தனது குரலில் வெளிப்படுத்தியிருப்பார் எஸ். ஜானகி. ‘இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும்’ எனும் வரியைப் பாடும்போது தழுதழுக்கும் குரலை அடக்க முயன்று தோற்கும் பரிதவிப்பை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். பெண்ணின் காதல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா ஜானகி இணை தந்திருக்கிறது. அப்பாடல்களில் ஒன்று இது.

மாமல்லபுரம் போன்ற கடற்கரையோரக் கோயில்களின் பின்னணியில், மாலை நேரத்துச் சூரியனின் ஒளியில் அசையும் ஓவியமாய் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

கதை சொல்லும் விழிகள்

முன் ஜென்மத்தில் தான் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட கதையைச் சிற்பி பிரசன்னாவிடம் சொல்ல, ஒரு பொம்மையை ஏந்தியபடி அவனைப் பின்தொடர்ந்து செல்வாள் சிறுமி. வெறித்துப் பார்த்தபடி தன்னைத் தொடரும் அச்சிறுமியைக் கண்டு குழம்பும் பிரசன்னாவுக்குப் பின்னர்தான் உண்மை புரியும். அமானுஷ்யமான இச்சூழலுக்குப் பின்னணியாக ஒலிக்கும் பாடல் ‘சின்னச் சின்ன கண்கள் ரெண்டு’.

பாடலின் தொடக்கத்தில் வேகமாக வீசித் தணியும் பேய்க்காற்றைப் போல வயலின் கோவையை வார்த்திருப்பார் இளையராஜா. அகன்ற கண்களில் தேக்கி வைத்திருக்கும் கதையைச் சொல்ல வழியில்லாமல் தவிக்கும் சிறுமி மீது இரக்கம் கொண்ட அசரீரியாக ஒலிக்கும் பாடல் இது. தனக்கு மட்டுமே தெரிந்த கதையைப் பூடகமாகச் சொல்லும் ரகசியக் குரலில் கே.ஜே. ஜேசுதாஸ் பாடியிருப்பார். இந்த உலகத்தில் மீண்டும் பிறந்து தனிமையின் சோகத்துடன் சுற்றியலையும் ஆன்மாவின் இசையை இப்பாடலில் பதிவுசெய்திருப்பார் இளையராஜா.

ஏக்கத்தின் பாடல்

தன்னை வெளிக்காட்ட முயலும் தவிப்புடன் சிறுமியின் உடலில் இருக்கும் தேவதாசிப் பெண் பாடும் பாடல் இது. ‘பல ஜென்ம ஜென்மாந்தர பந்தங்கள்’என்று தொடங்கும் இப்பாடலை எஸ்.பி. ஷைலஜா பாடியிருப்பார். கடவுளர்களை, குறிப்பாக மூகாம்பாள் போன்ற பெண் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கும் இப்பாடலில் தெய்வீகம் வழியும் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. இப்பாடலின் வழியே சிற்பி பிரன்னாவிடம் தனது வருகையை உணர்த்திவிடுவாள் தேவதாசிப் பெண்.

முன் ஜென்மத்துக் கதை என்பதால் காட்சிக்குக் காட்சி பயங்கரமான இசையைக் கொடுக்காமல், மர்மத்தின் மவுனத்தையே இசையாகவும், பாடல்களாகவும் உருவாக்கியிருப்பார்கள் மகேந்திரனும் இளையராஜாவும். ‘ஏ மாமா கோபமா’ என்றொரு சராசரித் தமிழ்ப் பாடலும் படத்தில் உண்டு. பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்த படம் என்றாலும் நினைவில் நிற்கும் பாடல்கள் கொண்ட படைப்பு இது.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x