Last Updated : 15 May, 2015 01:01 PM

 

Published : 15 May 2015 01:01 PM
Last Updated : 15 May 2015 01:01 PM

காற்றில் கலந்த இசை 4- இயற்கை மொழியின் ரகசியங்கள்!

விரிந்த வானத்தின் கீழ் இரவில் உறங்கிக் கிடக்கும் கிராமத்தை இசையால் வரைந்துகாட்ட முடியுமா? காலைப் பனி மலர்ந்து கிடக்கும் பூக்களைக் கடந்துசெல்லும்போது கால்கள் உணரும் சிலிர்ப்பை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இசை வழியாகவே இயற்கையின் ரகசிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு இவை சாத்தியம். அப்படியான மாபெரும் கலைஞர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையில் 1979-ல் வெளியான திரைப்படம் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’.

தமிழில் வெளியான திரைப்படங்களில் மிக வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது புகழ்பெற்ற கதாசிரியரான ஆர். செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படம். விவரிக்க இயலாத சாபம் ஒன்றால் பீடிக்கப்பட்ட கிராமத்தில் நடக்கும் கதை. கிராமத்தின் மக்கள்தொகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீடிக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் கூடினாலும் துயர சம்பவங்கள் நிச்சயம் எனும் நம்பிக்கை நிலவும் கிராமத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை அது. சுதாகர், சரிதா, சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் படம்.

வைக்கோல் போரின் வாசம் கமழும் கிராமத்தின் கற்சுவர் சந்துகளின் வழியே புகுந்துசெல்லும் இசையை இனிக்க இனிக்கத் தந்திருப்பார் இளையராஜா. கிராமிய இசை என்று வகைப்படுத்தப்பட்டாலும் நாட்டுப்புற நிலப் பரப்புகளை மேற்கத்திய இசைக் கருவிகளின் துணை கொண்டு அற்புதமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பார்.

காலை நேரத்துச் சாலை

சூரியன் சோம்பல் முறித்து எழும் நேரத்தில் மலைக் கிராமத்தின் தெருக்களில், வயல்வெளிகளின் வழியில் சைக்கிளில் செல்லும் நாயகி (சரிதா) பாடும் ‘சோலைக்குயிலே… காலைக்கதிரே’ பாடல் இயற்கை அழகை நுட்பமாகச் சித்தரிக்கும் படைப்பு. உயர்ந்த மரங்களின் கிளைகளினூடே தவழ்ந்துவரும் குயில்களின் பாடல்களுக்கு மறுமொழி சொல்லும் எஸ்.பி.ஷைலஜாவின் குரலில் சிலிர்க்கவைக்கும் பாடல் அது.

நெற்கதிர் களைச் சுமந்தபடி சாலையில் விரைந்தோடும் கிராமத்துப் பெண்களின் கவனத்தைக் கலைத்துவிடாமல் சைக்கிளை மிதித்தபடி பாடிக்கொண்டே செல்வார் சரிதா. பயணங்களில் சாலையின் இருபுறமும் மாறிக்கொண்டே வரும் காட்சிகள் இளையராஜாவின் இசையில் புத்துணர்ச்சியுடன் மலரும்.

பாடலின் நிரவல் இசையில் ஒலிக்கும் கிட்டார் இசை சில்லிடும் குளிர்காற்றின் தீண்டலை உணர்த்தும் என்றால், காற்றின் தாளத்துக்கு அசைந்தாடும் வயல்வெளிகளுக்கு வயலின் இசைக்கோவைகள் பின்னணி இசைக்கும். இசை மூலம் தூரத்தை அளப்பது என்பது இசையறிவையும் தாண்டி இயற்கை மீதான ஆழ்ந்த ஞானத்தைக் கோருவது. இளையராஜாவின் பல பாடல்களில் இதை நம்மால் உணர முடியும். இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் வயலின் கீற்று வானம் வரை சென்று பின்னர், மெல்லத் தரையிறங்கி வயல்வெளியில் படரும். மேகங்களை ஊடுருவிச் செல்லும் இசைக்கோவையை அத்தனை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள்.