Last Updated : 01 May, 2015 02:45 PM

 

Published : 01 May 2015 02:45 PM
Last Updated : 01 May 2015 02:45 PM

காற்றில் கலந்த இசை 2: காதலின் ஆராதனை

காதலின் நினைவு மரணத்துக்குப் பின்னரும் மறைவதில்லை. சொல்லப்போனால், நிறைவேறாத ஆசையுடன் இறந்து பேயாக மாறினாலும் காதலியின் நினைவு, நிழல் போலத் தொடர்ந்துகொண்டே இருக்கும். சுமன், சுமலதா, நிழல்கள் ரவி நடித்த ‘ஆராதனை’ படத்தின் கதை இதுதான். 1981-ல் வெளியான இந்தப் படத்தை பிரசாத் இயக்கியிருந்தார். பணக்கார இளைஞரான சுமனை நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த சுமலதா காதலிப்பார்.

ஒரு கட்டத்தில் சுமனின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது குறுக்கே வருவார் நிழல்கள் ரவி. சுமன் பல பெண்களை ஏமாற்றியவர் என்று பொய்யைப் பரப்பி இருவரையும் பிரித்துவிடுவார். உச்சகட்ட விரக்தியில் இருக்கும் சுமன் தீய சக்தி ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டுப் பேயாக மாறிப் பழிவாங்குவார்.

வெற்றி பெறாத திரைப்படங்களில் ஒன்றாக இருந்தும் ரசிகர்களின் மனதிலிருந்து இந்தப் படம் மறைந்துவிடாததற்கு ஒரே காரணம், படத்தின் பாடல்கள். இந்தப் படத்துக்கும் இசை இளையராஜாதான். ‘ஒரு குங்குமச் செங்கமலம்’, ‘இளம்பனி துளிர் விழும் நேரம்’ என்று அற்புதமான இரண்டு பாடல்கள் இப்படத்தில். ‘டார்லிங் ஐ லவ் யூ’ எனும் ஆங்கிலக் குறும்பாடலும் உண்டு.

இலங்கை வானொலியிலும் விவிதபாரதியிலும் ஒரு காலத்தில் அடிக்கடி ஒலிபரப்பாகும் இப்பாடல்களை இன்று பரவலாகக் கேட்பதற்கான ஊடகங்கள் குறைவு. வேண்டும்போது கேட்டு, பார்த்து மகிழ யூட்யூபில் கிடைக்கின்றன இந்தப் படத்தின் பாடல்கள். இணைய விவாதங்களில் எங்காவது ஒரு மூலையில் இப்படத்தின் பாடல்களைச் சிலாகிப்பவர்கள் உண்டு.

வனம் இசைக்கும் பாடல்

அடர்ந்த வனத்தின் நடுவே படர்ந்திருக்கும் புல்வெளியில் அமர்ந்து காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். குயிலின் குரலைப் பிரதியெடுத்ததுபோன்ற குழலிசை மெலிதாக ஒலிக்கத் தொடங்குகிறது. பின்னர் பாடலின் பல்லவி தொடங்குவதற்கு இசைவாகப் பணிந்து மவுனிக்கிறது குழல். ‘ஒரு குங்குமச் செங்கமலம்… இள மங்கையின் தங்க முகம்’ என்று பாந்தமான கம்பீரத்துடன் பாடலைத் தொடங்குகிறது, எண்பதுகளின் காதுகளில் கந்தர்வனாகக் கோலோச்சிய எஸ்.பி.பி.யின் குரல். பல்லவி முடிந்ததும் தேன் போல் கசிகிறது பெண் குரலின் ஆலாபனை. வேறு யார் எஸ். ஜானகிதான்!