Last Updated : 29 May, 2015 12:00 PM

 

Published : 29 May 2015 12:00 PM
Last Updated : 29 May 2015 12:00 PM

திரைப்பார்வை: தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்- பாலிவுட்டில் சாதிக்கும் நாயகிகள்

கடந்த வாரம் வெளியான ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ என்னும் இந்திப் படம் பாலிவுட் பாக்ஸ்ஆபிஸைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ‘பிக்கு’வுக்கு முன்னாலேயே ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ நூறு கோடி வசூலை எட்டிவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்ன மேஜிக் இந்தப் படத்தில் இருக்கிறது என்று பதில் தேடினால், ஒரே ஒரு பதில் மட்டும்தான் கிடைக்கிறது. அது ‘கங்கனா எனும் மேஜிக்’.

2011-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இது. தனுஜா திரிவேதி (கங்கனா ரனாவத்), மனு சர்மா (மாதவன்) இருவரின் நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. இருவரும் ‘கவுன்சிலிங்’கிற்காக லண்டனில் இருக்கும் மனநலக் காப்பகத்துக்கு செல்கிறார்கள்.

அங்கே நிதானத்தை இழந்து மனு, தனுவிடம் சண்டையிட, அவரை மனநலக் காப்பகத்தில் அடைத்துவிடுகிறார்கள். மனுவின் நண்பர் பப்பிக்கு (தீபக் தோப்ரியல்) இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு தனு, தன் சொந்த ஊருக்குப் போய்விடுகிறாள். பப்பி மனுவை வெளியே கொண்டுவருகிறார்.

சொந்த ஊரில் தனு ஒரு களேபரத்தையே உண்டுபண்ணிவிடுகிறாள். காதலிக்கிறேன் என்று திருமணத்துக்கு முன்னால் தன் பின்னால் சுற்றிய பழைய ஆண் நண்பர்களை சந்திப்பது, தங்கையைப் பெண் பார்க்க வரும்போது ‘டவலுடன்’ அமர்ந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுவது எனச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறாள். தனுவின் இந்த ஜாலியான நடத்தையால் காதலர்கள் பட்டியலில் வக்கீல் சிண்டுவும் (ஆயூப்) சேர்ந்துகொள்கிறார்.

பழைய காதலர் ராஜா அஸ்வதிக்கும் (ஜிம்மி ஷெர்கில்) சிண்டுவுக்கும் இதனால் மோதல். தனு தன்னிடம் மன்னிப்பு கேட்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோகிறான் மனு. தனு மாதிரியே இருக்கும் குசும் குமாரியை (கங்கனா) காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். மனு-குசும் காதல் என்னவாகிறது, தனு என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’.

எந்த ஒரு புதுமையான அம்சத்தையும் வைப்பதற்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் யோசித்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் நாம் என்ன நடக்கும் என்று நினைக்கிறோமோ அதுவே நடக்கிறது.

திருமணத்துக்குப் பின் காதல் என்னவாகிறது, திருமணத்தால் உருவாகும் சமூக நெருக்கடிகள் என்ன, ஒரு பெண் தன்னால் தாயாக முடியாது என்று தெரிந்த பின் என்ன செய்வாள் என்பன போன்ற கேள்விகளை முன்வைத்துதான் கதைக் களத்தை எழுத்தாளர் ஹிமான்ஷு சர்மாவும், இயக்குநர் ஆனந்த்தும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

தனுவுக்கு ஏன் திருமண வாழ்வு கசந்துபோகிறது, குசும் ஏன் மனுவைக் காதலிக்கிறாள் என்பதற்கெல்லாம் பதில் இல்லை. திருமண வாழ்க்கை தனுவைச் சலிப்படைய வைத்திருக்கலாம்; அல்லது, தன் கணவர் மனுவுடன் மனமொத்து வாழ முடியாது என்று நினைத்திருக்கலாம். இப்படி, ‘லாஜிக்’ இல்லாத எல்லாக் காட்சிகளுக்கும் நாமேதான் பதில் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தனு, குசும் கதாபாத்திரங்களுக்கும் பெண் முன்னேற்றத்துக்கும், பெண்ணியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தப் பாத்திரங்கள் பெண்ணியம் பேசுகின்றன என நினைத்தால், அதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது.

இந்தக் குறைபாடுகளை மீறி, கங்கனாவின் நடிப்பும், தீபக்கின் நகைச்சுவையும் படத்தைக் காப்பாற்றுகின்றன. மாதவன், ஜிம்மி ஷெர்கில், ஸ்வரா, ஆயூப் என அனைவரின் நடிப்பும் படத்துக்கு வலுசேர்க்கிறது.

திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சந்திக்கும் பிரச்சினைகளையும், போதாமைகளையும் பேச நினைத்து அதைக் கோட்டைவிட்டிருக்கிறது படம்.

பாலிவுட்டில் மெகா ஹீரோக்களின் பட ஓபனிங் ஹீரோயின்களுக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ‘என்எச்10’ அனுஷ்கா, ‘பிக்கு’ தீபிகா, இப்போது ‘தனு’ கங்கனா என சொல்லிவைத்து ‘ஹிட்’ அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூப்பர் ‘ஹீரோயின்’ டிரெண்ட் பாலிவுட்டின் எல்லாத் தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த ஹீரோயின் காற்று கோலிவுட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தினால் ஹீரோயிசத்தையே பார்த்துச் சலித்துப்போயிருக்கும் தமிழ் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x